ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை
1996 மே மாதம் நடந்த தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜுனு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு பார்வையாளராக அனுப்பி வைக்கப்பட்டேன். ஜுன்ஜுனு ஒரு வறண்ட பாலைவனப் பகுதி. பிலானி, கேத்ரி, ஃபதேகார், ராம்கார், நவல்கார், மாண்டவா முதலிய நகரங்களைத் தன்னகத்தே கொண்டது. வண்ணமயமான வீடுகளுக்கும் மாடமாளிகைகளுக்கும் பெயர்பெற்ற ஷேகாவதி பிராந்தியத்தின் பெரும்பகுதி இங்குதான் உள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த தொழில் அதிபர்களின் சொந்த நகரமும் இதுதான். கிராமப்புறங்கள் ஜாட்களின் ஆதிக்கத்திலும் நகர்ப்புறங்கள் மார்வாரிகள் மற்றும் இதர தொழில் செய்யும் வகுப்பாரின் ஆதிக்கத்திலும் இருக்கிறது. நான் தேர்தலுக்காக நகரெங்கும் சுற்றிவந்தபோது அடிக்கடி என்காதில் விழுந்த வேட்வாளரின் பெயர் ஷீஷ்ராம் ஓலா. இவர் ஒரு சுயேச்சை வேட்பாளர். ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு எப்படி இவ்வளவு புகழ் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
சென்ற ஐம்பது ஆண்டுகளாக ஷீஷ்ராம் காந்திஜியின் செயலூக்கமிக்க ஊழியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பெரும் பங்காற்றியவர். கிராம மக்களுடன் இரண்டறக் கலந்து பழகி அவர்களுடைய நண்பராக, தத்துவஞானியாக, வழிகாட்டியாக இருந்தவர். ராஜஸ்தான் மந்திரிசபையில் இருமுறை மந்திரியாக இருந்து பாலைவனப் பிராந்தியத்திற்கு தண்ணீர் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். கிராம மக்கள் கல்வியறிவு பெற முன்னோடியாக இருந்திருக்கிறார். நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் ஜுன்ஜுனு மாவட்டத்தில்தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் விட என் மனதில் ஆழப் பதிந்தது என்னவென்றால், அவரது தந்தைக்குச் சொந்தமானதும், தான் பிறந்த இடமுமான சிறிய எளிய வீட்டில், போலி கெளரவம் பாராட்டாமல், இன்னமும் வசித்து வருவதுதான். ஐம்பதாண்டு அரசியல் வாழ்வில் தனக்கென்று ஒரு வீடு பெற அவர் முயற்சி செய்ததில்லை. இன்றும் இந்தியாவில் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
##Caption##மே ஏழாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்தது. சுற்றுலா மாளிகையில் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலை ஐந்து மணிக்கு யாரோ ஒருவர் கதவைத் தட்டினார். தயக்கத்துடன் நான் கதவைத் திறந்து பார்த்தபோது சுமார் எழுபது வயதுள்ள கம்பீரமான மனிதர், கசங்கிய கதர்ச் சட்டையுடனும் அழுக்கான வேஷ்டியுடனும் முகச்சவரம் செய்யாமல், தலைமுடி வாராமல், காலில் ரத்தம் ஒழுக என் முன்னால் நின்று கொண்டிருந்தார். தன் இருகரங்கள் குவித்து வணங்கியபடி தான் தான் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிடும் ஷீஷ்ராம் ஓலா என்று சொன்னார். நான் திகைத்துப் போனேன். ரத்தம் ஒழுகும் அவருடைய காலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், மருத்துவரை அழைக்கத் தொலைபேசி அருகே சென்றேன். 'இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். மாடிப் படியிலிருந்து வழுக்கி விழுந்து விட்டேன். இதை நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன். இப்போது எனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை தயவுசெய்து நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்' என்று சொன்னார்.
வாக்கு எண்ணும்போது பார்வையாளராக வரவேண்டிய அவரது ஊழியர்கள் மூவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அதில் இருவர் வாக்கு எண்ணப்படும் மேஜையருகில் இருக்க வேண்டியவர்கள். அவர்களுக்கு பதிலாக மாற்று நபர்களை நியமிக்க விரும்பினார் ஷீஷ்ராம். ஆனால் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியாளர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதை நேரடியாக நான் கவனித்துக் கொள்வதாக ஷீஷ்ராமிடம் உறுதி அளித்தேன். அதன் பின்தான் அவர் காயத்திற்கு முதலுதவி பெற்று வர மருத்துவரிடம் சென்றார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அதிகாரியான திரிபாதியிடம் இதைத் தெரிவித்தேன். பெயர் மாற்றங்களை அறிவிக்க வேண்டிய நேரம் கடந்து விட்டதால் இந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் எல்லா வேட்பாளர் களுக்கும் இதேபோல் பிரச்சனை இருப்பதால் இந்தக் கடைசி நேரத்தில் எல்லோரையும் அனுமதிப்பது நிர்வாகத்தால் இயலாத காரியம் என்று கூறிவிட்டார். இதைக் கேட்டு ஷீஷ்ராம் அதிர்ந்து போனார். நானும் மற்ற பார்வையாளர்களும் அவருடைய ஏஜண்டுகள் போல வாக்கு எண்ணிக்கையை கவனித்துக் கொள்வதாகவும் முக்கியமாக அவரது ஏஜண்டுகள் இல்லாத மூன்று மேஜைகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை நாங்களே கவனித்துக் கொள்வதாகவும் அவருக்கு உறுதி கூறினேன். தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்துவது எங்கள் பொறுப்பு என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு செல்லுபடியான வாக்கும் அவருக்குச் சேர்க்கப்படும் என்பதை அவர் நம்ப வேண்டும் என்றும் தெரிவித்தேன். அவர் சமாதானமடைந்தார். நாங்களும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட்டோம். முன்பு ஒவ்வொரு தடவையும் இந்தத் தொகுதியில் அவர்தான் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இம்முறை காங்கிரஸ் வாக்குகளும் சிறுபான்மை மக்கள் வாக்குகளும் பிளவுபடுவது அவரது வெற்றியைப் பாதிக்குமோ என்று கவலைப்பட்டார். மேலும் தான் வெற்றி பெற்று, தானே மக்களின் வேட்பாளர் என்பதை மேலிடத்திற்கு நிரூபிக்க அவர் விரும்பினார்.
ஷீஷ்ராமின் தொண்டர்களுக்காகக் கல்லூரியின் சுற்றுச் சுவரின் ஒரு மூலையில் ஒரு சமையல்காரர் பூரியும் பஜ்ஜியும் தயார் செய்து கொண்டிருந்தார். ஷீஷ்ராம் நான் சாப்பிடுவதற்காகத் தானே சில பூரியும் பஜ்ஜியும் ஒரு இலையில் எடுத்துக் கொண்டு வந்தார். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வேட்பாளர் எனக்குக் கொடுக்கும் உணவை நான் சாப்பிடலாமா என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ராஜஸ்தானத்து கிராமப்புறத்துக்கே உரிய மெய்யான உள்ளன்போடு அவர் கொண்டு வந்தவைகளை நான் சாப்பிட்டேன். எனக்காக உயர்ரக உணவு அடுத்த அறையில் காத்துக் கொண்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் அன்று இரவே பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்டது. அவரே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று அனைத்து கிராம மக்களின் ஆவல் நிறைவேறியதை எண்ணி நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
நான் அந்தத் தொகுதியில் இரண்டு வாரங்கள் தங்கி இருந்த சமயத்தில் என்னைப் பற்றியும் எனது சுற்றுலாத்துறை அனுபவம், கலாசாரப் பின்னணி பற்றியும் நிறையவே அறிந்து கொண்டிருந்தார் ஷீஷ்ராம். நான் அந்த மாவட்டத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு சுற்றுலாத்துறை அதிகாரிகளையும், ஊழியர்களையும் என்னிடம் அழைத்து வந்து ஜுன்ஜுனுவில் சுற்றுலா மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவரையும், நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் மெச்சிப் புகழ்ந்துவிட்டு நான் ஜுன்ஜுனுவிலிருந்து புறப்பட்டேன். அரசின் ஒவ்வொரு பணியாளரையும் அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தேர்தல் முடிந்தபிறகு ஷீஷ்ராம் என்.டி.திவாரி காங்கிரசில் சேர்ந்து குஜ்ரால் மந்திரிசபையில் அவரும் ஒரு மந்திரியானார். நாட்டு மக்களுக்காக உழைக்க அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வழங்கிக் கடவுள் அருள்புரியட்டும்.
இந்தியாவில் ஓர் ஆஸ்திரேலியர்
ஆஸ்திரேலியாவிலுள்ள நியூசெளத்வேல்ஸ் மாநிலத்தின் ஹண்டர் பிராந்தியத்தில் உள்ள மனநலத் துறையின் தலைவரான பேரா. வாகன் கர் முதன்முறையாகச் சென்னைக்கு வருகை தந்திருந்தார். அவர் 1948ல் அடிலெய்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் பிறந்தவர். பெற்றோருக்கு ஒரே மகன். அவருடைய அன்னையார் பிறந்ததும் கிறிஸ்துமஸ் அன்றைக்குத்தான்! அவருடைய தாயார் தவறாமல் தேவாலயம் செல்பவர். தாயாராலும், சித்திகளாலும் செல்லமாக வளர்க்கப்பட்டவர் வாகன் கர். இவரது தந்தை அரசின் நீர்வழித்துறையின் பண்டகசாலைக் காப்பாளராக இருந்தவர். 1850ல் ஏற்பட்ட உருளைக்கிழங்கு பஞ்சத்தால் விவசாய வேலைகளில் கடும்பாதிப்பு ஏற்பட்டு, இவரது மூதாதையர்கள் சொந்த நாடான அயர்லாந்தை விட்டு வெளியேற நேர்ந்தது. பலர் அயர்லாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறினர். உயிர் பிழைக்கவும், ஆஸ்திரேலியாவில் வளமாக வாழலாம் என்ற நம்பிக்கையிலும் அங்கு வந்தனர். இப்படி வந்தவர்கள் அடிலெய்டுக்கு அருகில் உள்ள மோர்கள் என்ற ஊரில் குடியேறினர். விவசாயம் செய்தனர். நீராவிப்படகுகளிலும் வேலை செய்தனர். ஆனாலும் ஆஸ்திரேலியாவில் அவர்கள் உயிர் வாழத் தொடர்ந்து போராட வேண்டி இருந்தது. பேராசிரியரின் பாட்டனார் ஒரு ஜெர்மானியப் பெண்ணை மணந்து கொண்டார். அவரது தாய்வழி உறவினர்களும் அயர்லாந்தில் இருந்து வந்து ஆங்கிலேயர்களுடனும் வெல்ஷ்காரர்களுடனும் கலந்துவிட்டனர். அவர்கள் பர்ரோசா பள்ளத்தாக்கின் ஓரமாக விவசாயப் பண்ணை அமைத்தனர். அது வளர்ந்து நிலைபெற்று விட்டதால் அத்துடன் பால் பண்ணையையும் பழத்தோட்டங்களையும் ஏற்படுத்தினர்.
தகுதியின் அடிப்படையிலும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதாலும் கர்ருக்கு தொழில்நுட்ப உயர்பள்ளியில் இடம் கிடைத்தது. படிக்கும்போதே பள்ளியின் மாணவர் சஞ்சிகைக்குக் கதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். நாவல்களும் எழுதினார். பள்ளி நாடகங்களில் நடித்ததுடன், இசைநிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டார். 1967ல் அடிலெய்டில் உள்ள மருத்துவப்பள்ளியில் சேர்ந்தார். பிறகு அவர் புகழ்பெற்ற பேரா. பிலோங்ஸ்கியின் கீழ் மனநோய் பற்றி ஆராய்ந்து அவருடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். பின் தன் பணியையும் கல்வியையும் ரோச் செஸ்டரிலும் அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தார். பின்னர் அடிலெய்ட் திரும்பி பேரா.பிலோவ்ஸ்கியின் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார். 1989ல் நியூகேஸில் பல்கலையில் பேராசியராகப் பதவியேற்று மனநலத் துறைத் தலைவராகவும் ஆனார். ஒரு மருத்துவ மாணவராக அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, 1969ல், கல்லூரி மாணவியான மார்கரெட்டைச் சந்தித்தார். 1972ல் திருமணம். இப்போது அவர்களுக்கு அழகான மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
மார்கரெட் ஒரு அசாதாரணமான பெண். கலை வரலாற்றில் பட்டம் பெற்றவள். தைல ஓவியத்திலும் கிறிஸ்துவ மடாலயக் கலை களிலும் இருந்த ஆர்வம், இறையியலில் (theology) பட்டம் பெற அவளை இட்டுச் சென்றது. அதன் பிறகு அவள் தேவாலயப் பணியில் ஈடுபட விரும்பினாள். பிறப்பால் கத்தோலிக்கரான போதிலும் 1989ல் ஆங்கிலிகன் பிரிவில் சேர்ந்து விட்டாள். 1992ல் ஆங்கிலிகன் பிரிவு மதபோதகராக ஆரம்பகாலத்தில் நியமிக்கப்பட்ட பெண்களில் இவரும் ஒருவர். இப்போது நியூகேஸிலில் ஆஸ்திரேலிய ஆங்கிலிகன் பிரிவின் மாவட்டத் தலைமை குருவாக இருக்கிறார். பொதுச் சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறார்.
ஊனமுற்றோரின் சர்வதேசப் பயிலரங்கத்தில் கலந்துகொள்ளப் பேரா. கர் சென்னைக்கு வந்திருந்த சமயம் இந்திய கலாசாரம், குடும்பம் பற்றி அறிந்துகொள்ள விரும்பினார். இந்திய கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் சென்றார். கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்குச் சென்றார். மாமல்லபுரத்திற்கும் தென்னிந்திய கற்பனா லோகமான சித்திரக்கூடத்திற்கும் அவருடன் சேர்ந்து சென்றுவரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
உலகின் பலபாகங்களிலும் உள்ள மனநலம் குறைந்தவர்களைச் சந்திக்கும் தொலை நோக்குத் திட்டம் அவரிடம் இருப்பதை நான் அப்போது அறிந்தேன். இந்தியாவிலுள்ள அரசு மற்றும் அரசு சாராத மனநோய் மருத்துவமனைகள் குறித்து அவர் உயர்ந்த கருத்து கொண்டிருந்தார். 'பெங்களூரிலுள்ள நிம்ஹான்ஸின் சேவை போற்றுதலுக்குரியது. ஆஸ்திரேலியாவில் நாங்கள் வைத்திருக்கும் சாதனங்களுடன் ஒப்பிடும்போது சென்னையிலும் பெங்களுரிலும் உள்ள மனநல நிறுவனங்கள், மிகக் குறைந்த சாதனங்களை வைத்துக் கொண்டு உயரிய சேவை ஆற்றுவது மிகவும் வியப்பான ஒன்று. அவர்கள் உண்மையில் மிக உயர்ந்த தரத்தில் பணி ஆற்றுவதைக் கண்டு நான் மெய்மறந்து போனேன்' என அவர் உணர்ச்சியோடு குறிப்பிட்டார். 'பயிற்சியாளர்களையும், மருத்துவ மாணவர்களையும் பரிமாறிக் கொண்டு இந்தியா, ஆஸ்திரேலியா என இரு நாடுகளும் பயனடைய விரும்புகிறேன்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேரா. வாகன் கர் போன்றோரின் தொண்டு உண்மையிலேயே போற்றுதலுக்குரியது.
கல்வி நிபுணர், பெண்ணியவாதி திருமதி. பார்த்தசாரதி
தேசியப் பெண்கள் ஆணையத்தின் தலைவியான திருமதி. பார்த்தசாரதி தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய குஜராத்தியத் தம்பதியரின் மகள். அவருடைய பெற்றோர்கள், கல்வி நிபுணர்கள். சமூக சேவகர்கள். வானொலி, பத்திரிகைத் துறையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்கள். அவருடைய பள்ளிப்படிப்பு டான்சானியா விலும் கென்யாவிலும் நடந்தது. பின் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜில் சேர்ந்து புவியியல் துறையில் பட்டம் பெற்றார். தன் இளநிலைப் பட்டத்தை லண்டன் பல்கலைக் கழகத்திலும், முதுநிலைப் பட்டத்தை போஸ்டன் கல்விக் கழகத்திலும் பெற்றார்.
திருமதி. பார்த்தசாரதி இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா என மூன்று கண்டங்களில் கல்வி கற்பித்துப் புகழ்பெற்ற கல்வியாளராகத் திகழ்ந்தார். சர்தார் வல்லபாய் பட்டேல் வித்யாலத்தில் 24 ஆண்டுகள் தலைவியாக இருந்து கல்வியின் தரம் மேம்பாடடையப் பெரும்பணி ஆற்றினார். ஜனநாயகம், வளர்ச்சி ஆகிய பிரச்சனைகளில் அவர் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார்.
அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிலிருந்து கல்வி, சமூகம், பெண் விடுதலை, பெண்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், அதன் தீர்வுகள், தேசிய மகளிர் ஆணையத்தின் செயல் பாடுகள், சாதனைகள் எனப் பலவற்றை விவரமாக நான் அறிந்துகொள்ள முடிந்தது. அவர் ஒரு கல்வி நிபுணர் மட்டுமல்ல; சமுதாயத்தின்மீது மிக அக்கறை கொண்ட ஒரு பெண்ணியவாதியுமாவார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சிக்காக இவரும், இவரது குழுவினரும் ஆற்றிவரும் பணிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவையாகும்.
ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை |