பி.எல். சாமி (பகுதி-2)
சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் என்ற நூலுக்கான முகவுரையில் 'இந் நூலில் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ள பறவைகளைப் பற்றிய இயற்கைச் செய்திகளை அறிவியல் அடிப்படையாக ஆராய்ந்து விளக்கியுள்ளேன். சங்க நூல்களில் மரஞ்செடி கொடிகளைப் பற்றிய இயற்கைச் செய்திகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. அதற்கடுத்தபடியாகப் பறவைகளைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. விலங்கினங்களை விடப் பறவையினங்கள் தமிழ்நாட்டில் மிகுதியாகக் காணப்படுவதால் சங்க நூல்களில் பறவை களைப் பற்றிய செய்திகள் கூடுதலாக உள்ளன. பறவைகள் வாழும் சூழ்நிலை, உண்ணும் உணவு, கூடுகட்டி வாழும் முறை, முட்டையிட்டுக் குஞ்சை வளர்த்தல், இனப்பெருக்கம் ஆகிய பலவற்றையும் கண்டறிந்து சங்கப்புலவர்கள் பாடல்களில் கூறியுள்ளனர். இந்தச் செய்திகளையெல்லாம் விளக்கவே இந்நூலை எழுதினேன்' எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கண்ணோட்டம், ஆய்வுமுறை தமிழுக்குப் புதிது.

மேலும் அந்த நூலில் 'சங்க காலப் பறவைப் பெயர்களில் சில உரையாசிரியர் காலத்திலேயே வழக்கொழிந்து விட்டன. சில தமிழ் மொழி வழக்கொழிந்து விட்டாலும் பண்பாடடையாப் பிற திராவிட மொழிகளில் வழங்கி வருவதைக் குறிப்பிட்டுள்ளேன். பறவைகளின் சங்ககாலப் பெயர்களோடு திராவிட மொழிப் பெயர்களும் கொடுத்துள்ளேன். தமிழ் நாட்டில் வழங்கும் தற்காலப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இப் பெயர்கள் இடத்திற்கு இடம் மாறுவதையும் காணலாம். தற்காலம் படித்தவர்களை விட நாட்டுமக்களே பறவைகளைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டுள்ளனர். படித்தவர்களுக்குப் பல பறவைகளின் பெயர்களும் தெரியாது. பறவைகளைப் பிரித்து இனங் காணும் சக்தி நகர்ப்புற மக்களுக்கு இல்லை. சங்க நூல்களில் கூறப்பட்டுள்ள பறவைகளைப் புரிந்து கொள்ள எனக்கு நாட்டு மக்களிடம் பழகித் தெரிந்த செய்திகள் மிகவும் துணைபுரிந்தன' என்று கூறியுள்ளார். கிராமப்புற வாழ்வியல் இயற்கைச் சார்ந்த நுண்ணுணர்வுகளுடன் கூடிய வாழ்முறையாகவே விரிவு பெற்றிருந்தது. இயற்கை சார்ந்த சடங்குகள், வழிபாடுகள் இந்த மக்களின் நம்பிக்கைகளாக, தொன்மங்களாக, வாழ்வியல் தத்துவமாகவே உள்ளது.

*****


எமது முன்னோர்கள் இயற்கை சார்ந்த புரிதல் மூலம் எவ்வாறு வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியற் கோலம் விரிவாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக 'அன்றில்' பறவை பற்றி பி.எல். சாமி தரும் செய்திகள்:

##Caption##அன்றில் என்றதொரு பறவை சங்க இலக்கியத்தில் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலிய நூல்களில் கூறப்படுகிறது. நெய்தற்றிணைக்குரிய கருப்பொருளாகப் பேசப்படுகிறது. நெய்தற்குரிய பறவையாக இது கூறப்படுவதிலிருந்து இப் பறவை கடலுக்கருகாமையில் அமைந்த சூழ்நிலையில் வாழ்வதாகத் தெரிகின்றது. சங்க இலக்கியத்தில் கூறப்படும் கடற்கரைச் சூழ்நிலை விளக்கம் அக்காலத்தில் இருந்ததைக் கூறுவதாகும். சங்க இலக்கியத்தில் கூறப்படும் சில செய்திகள் தற்காலம் கூட உண்மையாக இருப்பததைக் காணலாம். அன்றில் எனும் பறவை பனைமரத்தில் வாழ்ந்ததாகச் சங்க நூல்களில் பல இடங்களில் புலவர்கள் கூறியுள்ளனர். பனைமரத்தில் கடற்கரையிலும், கடற்கரைச் சிற்றூர்களிலும் அக்காலத்தில் நிறைய இருந்திருக்கின்றன.

'....................கானல்
ஆடரை புதையக் கோடை யிட்ட
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனை
குறிய வாகுந் துறைவனைப்
பெரிய கூறி யாயறிந் தனளே'

என்ற குறுந்தொகைப் (248) பாடலில் மேற்காற்று குவிந்த மணல்மேட்டினால் பனைமரத்தின் அடிப்பாகம் மறைத்து குறும்பனையாகத் தோன்றுவதாகக் கூறப் பட்டிருப்பது இன்றும் காணக்கூடிய காட்சி யாகும். அடிமரம் மத்தளம் போற் பெருத்து, முழவுமுதலரைய தடவுநிலைப் பெண்ணை யாகக் காணப்படுவது இன்றும் பார்க்ககூடிய தாகும். கடற்கரையில் பனைமரத்தில் அன்றில் கூடுகட்டுவதாகப் பல சங்கப்புலவாகள் பாடியுள்ளனர்.

..... .... .......... எல்லி
மனைசேர் பெண்ணை மடல்வாய் அன்றில்
துணையோன்று பிரியினுந் துஞ்சா காணென
- அகம். 50.

பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே
- அகம். 120.

இனமீ னருந்து நாரையொடு பனைமீசை
யன்றில் சேக்கு முன்றிற் பொன்னென
- அகம். 360.

செக்கர் தோன்றத் துணைபுணர் அன்றில்
எக்காப் பெண்ணை அகமடல் சேர
- அகம். 260.

பராரைப் பெண்ணைச் சேக்கும் கூர்வாய்
ஒருதனி அன்றில் உயவுக்குரல் கடைஇய
- அகம். 305.

கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறுகரும் பேடை
இன்னால் உயங்கும் கங்குலும்
- அகம். 270.

தமியேன் கேட்குவென் கொல்லோ
பரியரைப் பெண்ணை அன்றிக் குரலே
- நற்றிணை. 218.

தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத்
துணைபுணர் அன்றில் உயர்வுக்குரல் கேட்டொறும்
- நற்றிணை. 303.

மையிரும் பனைமிசை பைதல உயவும்
அன்றிலும் மென்புறம் நரலும்
- நற்றிணை. 335.

முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்.
- குறுந்தொகை. 301.

ஏங்குவயி ரிசைய கொடுவா யன்றில்
ஓங்கிரும் பெண்ணை யகமட லகவ
- குறிஞ்சிப்பாட்டு. 219-220.

மன்றவம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்
- குறுந்தொகை. 177.

நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பெடை யொடு
தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
- குறுந்தொகை. 160.

மேலே காணும் பாடல்களில் அன்றில் வாழும் சூழலைப் பற்றிய சில செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இதில் முதன்மையானது அன்றில் பனைமரத்தில் வாழ்வதாகும். இப்பாடலில் வரும் பிற செய்திகளையும் பறவை நூலறிவொடு (ornithology) ஆராயுங்கால் அன்றில் பறவை நூலில் கூறப்படும் night heron என்பதே என்று தெளியலாம். பறவை நூலார் இப்பறவை சிறு கோல்களால் அடர்ந்த மரங்களில் யாரும் எளிதில் காணமுடியாதபடி இலை மட்டை முதலிய மறைவான சூழலில் கூடு கட்டுவதாகக் கூறுகின்றனர். இதைப் 'பெண்ணைக் கொழுமடலிழைத்து சிறு கோற் குடம்பை' என்ற குறுந்தொகைச் செய்தியிலிருந்து உணரலாம். 'பெண்ணை வாங்கு மடற் குடம்பை', 'பெண்ணை மடல்வாய் அன்றில்' என்ற வரிகளில் மடலில் மறைவாக அன்றில் கூடு காட்டுவது கூறப்பட்டுள்ளது.

இப்பறவை கடற்கரைக் கழி ஓரங்களிலும், கடற்கரை ஊர்களிலும். மனிதர் இடையூறு செய்யாதுவிடில் உள்ளுர் மரங்களிலும் கூடுகட்டி வாழ்வதாகப் பறவை நூலார் கூறுவர். இதே இயற்கைச் சூழ்நிலையை சங்கப்பாக்களும் கூறுகின்றன. 'சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டிலும், நெடுநீர் இருங்கழியிலும்' அன்றில் வாழ்வதாக அகம் 129,50ம் பாடல்கள் பகர்கின்றன. 'கடவுள் மரத்த முள்மிடைக் குடம்பை' தொன்றுறைக் கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை என்று பேசப்படுவதிலிருந்து கடவுளுக்குரிய பனைமரத்திலும், பொது மன்றத்திலும் பனையிலும் இப்பறவை கூடுகட்டி வாழ்ந்ததாகத் தெரிகின்றது.

கடவுள் உறையும் மரத்திலும் மன்றப் பனையிலும் மனிதர் இடையூறு இல்லை யாதலால் அன்றில் அங்கே கூடு கட்டி வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு இடையூறில்லாமல் கூடுகட்டி வாழ்வதைத் தமிழ்நாட்டில் சில ஊர்களில் காணலாம். இது பறவை நூலில் காணப்படும் செய்தியோடும் ஒத்திருக்கின்றது. பனை மரத்தில் இப்பறவை காணப்படுவதாகக் கூறப்பட்ட செய்தி சிறிது காலத்திற்கு முன் நாட்டுப்புற இயற்கைச் சூழ்நிலை பற்றி எழுதப் பெற்ற ஒரு புத்தகத்திலும் காணப்படுகின்றது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் கண்டு கூறப்பட்ட செய்தி இன்றும் ஓரளவு உண்மையாக இருப்பது வியப்பைத் தருவதாகும். இதை இன்று சில இடங்களில் பனங்கிளி என்றழைப்பதும் கவனிக்கதக்கது.' (பக் 52-55)

இதுபோல் நாரையும் கொக்கும் செங்கால் நாரை, அன்னம், புறா, குயில், காக்கை, மயில், கழுகும் பருந்தும், வானம்பர் போன்ற பறவைகள் பற்றிய செய்திகளையும் சங்க இலக்கியம் வழியே அறிந்து கொள்வதற்கான அறிவுபூர்வமான பல்வேறு தகவல்கள் சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் நமது வாழ்வியல் மரபுகளுடன் எவ்வாறு தொடர்புபட்டதாக இருந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

*****


செந்தமிழ்ச் செல்வி இதழில் சங்க இலக்கியத்தில் மீன்கள் எனும் தலைப்பில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்துப் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. சங்க இலக்கிய மீன்களைப் பற்றிய தற்காலத்து அறிவியல் நூலறிவோடு மீன்களை நேரில் கண்டு மீனவர்களைக் கேட்டறிந்து சேகரிக்கப்பட்ட செய்திகள் யாவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள மீன்களின் பெயர்கள் தமிழ், சிங்களம், மலையாள மொழிகளில் வழங்கப்படுவதையும் கடல் மீன்களை விட ஆறு குளங்களில் காணப்படும் மீன்கள் பற்றிய குறிப்புகள் செய்திகள் போன்றனவும் இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கடலில் மீன்களுக்குரிய உணவுப் பொருள் மிகுதியாகக் கிடைக்கக் கூடிய பாறைத்தரை, பாசி ஆகியவையுள்ள இடம் நன்செய் எனவும் எஞ்சிய மணல்தரை புன்செய் எனவும் மீனவர்களால் இன்று கூறப்படுகின்றன. பாறைகளை முட்டு என்று மலையாளிகள் அழைக்கின்றனர். தடை என்ற பொருளில் இம் முட்டு என்ற சொல் சங்க நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது. அவ்வாறே மீனவர்கள் மரங்கள், உடுக்கள், திசைகள், ஆகியவற்றைக் கொண்டு மீனுள்ள இடத்தைக் கணிப்பது வழக்கம். சங்க நூல்களிலும் கோளையும் உடுவையும் காலத்தைக் கணிக்கும் சோதிட வல்லார் கணியன் எனப்பட்டுள்ளனர்.

சங்க நூல்களில் அயிலை, அயிரை, ஆரல், கயல், கெண்டை, கெடிறு, கொழுமீன், குழல்மீன், நுழைமீன், மலங்கு, வரால், வாளை, சுறா (இதில் பல வகையுண்டு), கோட்டுமீன், வாள்சுறா, இறா, சிறுமீன், பெருமீன், என இருபதுக்கு மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக அயிலை மீன் குறித்துக் கூறும் செய்திகளை மட்டுமே பார்ப்போம்.

அயிலை கடல்நீர் மீனாகும். தமிழில் காணாங்கெழுத்தி என்றும் தெலுங்கில் கானகுர்த்தா எனவும் வெவ்வேறு பெயர்களில் இது அழைக்கப்பட்டாலும் மலையாளத்தில் அயிலை என்றே வழங்கப்படுகின்றது. தமிழர்களை விட மலையாளிகள் இம்மீனை விரும்பி உண்கின்றனர். மருமகனுக்கு வைத்து விருந்து படைக்கக் கூடிய உயர்ந்த மீனாக இது கருதப்படுகின்றது. 'ஆளியனுக்கு அயிலை' என்பது மலையாளப் பேச்சு வழக்கு.

இம்மீன்கள் கூட்டங்கூட்டமாக வாழும். எனவே இனமீன் என இவை அழைக்கப் படும். கேரளக் கரையிலும் தமிழ்நாட்டுக் கரையிலும் பெரும் கூட்டமாக பிடிபடும் இம்மீன்களே மீனவர்களுக்கு உறுதுணையாக இன்று உள்ளது. அன்றும் உறுதுணையாக இருந்தது.

கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டிக்
கொழுங்கண் அயிலை பதுக்கும் துறைவன்
- அகம். 70

என்னும் சங்கப்பாடலடிகள் இதனை விளக்குகின்றன. இம்மீனைப் புளியுடன் சேர்த்து உண்ணும் வழக்கத்தை அகநானூறு (60) குறிப்பிடுகின்றது.

உப்புநொடை நெல்லின் முரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்

இன்று தமிழ்நாட்டிலும் மீனைப் புளிக்குழம்பு வைத்தே உண்ணுகின்றனர். மோலி என்பது மலையாளிகள் வைக்கும் மீன்குழம்பாகும். இது எலுமிச்சம்பழச் சாற்றுடன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கூட்டிய குழம்பில் அயிலை மீனைப் போட்டு சமைக்கப்படுவதாகும். இம்மீன் வேல் போன்ற வடிவுடன் காணப்பட்ட காரணத்தால் இது அயிலை என அழைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் இது Makerel என்றும் அறிவியலில் Rastelliger kanagurta என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த நூலில் இது போன்று பல்வேறு செய்திகள் உள்ளன. மீன்களைப் பற்றித் தற்காலத்து அறிவியல் நூலறிவோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

*****


பி.எல். சாமி எழுதிய ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் எமக்கு முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை, ஆய்வுகளை முன் வைக்கின்றது. ஒல்வொரு நூலும் தனித்தனியாக ஆராயப்படக் கூடிய களங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. தமிழில் இது போன்ற சிந்தனைமரபைத் தொடக்கிவிட்ட பெருமை பி.எல். சாமி அவர்களையே சாரும்.

இதனால் அறிவியல் பார்வையில் இலக்கியங்களை ஆராயும் போக்கு வளர்ச்சி அடையத் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின் இந்த ஆய்வு மரபு முக்கியம் பெறத் தொடங்கியது. அறிஞர் பி.எல். சாமி சங்க இலக்கியங்களை அறிவியல், சமூகவியல், மானிடவியல், தாவரவியல், உயிரியல், புவியியல், காலநிலையியல் எனப் பல்வேறு அறிவுத்துறைகளுடன் கூடிய ஆய்வுகளை மேற்கொண்டார். பண்டைய இலக்கியங்களில் அறிவியலைக் கண்டளித்த மனிதர் பி.எல். சாமி.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com