பட்ஜெட் கூட்டத் தொடர்!
சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்குவதில் பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக செய்யப்பட்டன. இடமாற்றம் குறித்து ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இதுகாறும் நடைமுறையில் இருந்த வழக்கத்தை தி.மு.க அரசு மாற்றியது சரியல்ல என்றார். ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை உடனடியாக மறுத்த சபா நாயகர் ஆவுடையப்பன், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் இருக்கையை மாற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் சென்னைக்கு அருகே உள்ள சிறுதாவூரில் ஜெயலலிதா ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக பயன்படுத்தும் வீடு உள்ள இடம், கடந்த 1967ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணா அவர்களால் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது என்றும் அந் நிலத்தை ஆக்கிரமித்தே ஜெயலலிதா பயன் படுத்தும் வீடு கட்டப்பட்டது என்றும் மற்றொரு பிரச்சனை கிளம்பியது. இதனை மறுத்த ஜெயலலிதா, அந்த வீடு தனக்கோ, தன் தோழி சசிகலாவிற்கோ சொந்தமானது இல்லை என்று தெரிவித்தது மட்டுமல்லாமல், தன் மீது தி.மு.க. அரசு வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்றார்.

இதுதொடர்பாக பல்வேறு கட்சிகள் குறிப்பாக தி.மு.க கூட்டணி கட்சிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து சர்ச்சைக்குள்ளான அந்த இடத்தைப் பற்றி விசாரித்து உரியவர் களிடம் அந்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறின. இதுதொடர்பாக விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் ஒன்றை தமிழக அரசு நியமித்தது.

இந்நிலையில் தி.மு.க அரசு தன்னுடைய முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை போன்ற திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன. இத்திட்டங்களுக்காக கணிச மான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் பட்ஜெட்டை புகழ்ந்தாலும், பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

''தீபாவளி நேரத்தில் வாணவேடிக்கை காட்டுவது போல் உள்ளது இந்த பட்ஜெட். வில்லனாக மாறியது திமுக தேர்தல் அறிக்கை. ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக தி.மு.க அறிவித்துள்ளது சாத்தியமான திட்டம் அல்ல என்றும், அது நிறைவேறக்கூடிய திட்டம் அல்ல..'' என்று பட்ஜெட் பற்றி எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா கூறினார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com