ராமனாதனுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். மழலைகளாகட்டும், சிறுவர் சிறுமியராகட்டும் அவர்களைச் சந்தோஷப்படுத்தி விளையாட்டுக் காட்டுவது, சிறுவயது முதலே அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. சென்னையில், அவன் காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்தால், அவன் காலனிச் சிறுவர் கூட்டம், இனிப்புக் கடையை மொய்க்கும் ஈக்கூட்டம் போல அவனைச் சுற்றிச்சுற்றி விளையாடுவார்கள். அவன் அம்மா 'என்னடா இது, உன் வயசு நண்பர்களை விட்டுட்டு, இந்தப் பொடிசுகளோடே விளையாடுறே' என்பார். அப்பாவோ 'ரெண்டு எருமைக்கடா வயசாகுது, ஐஸ் பாய்ஸ் விளையாடறான் பாரு' என்பார்.
எதையுமே கண்டுகொள்ளாமல் ராமனாதன் தெரு மழலைகளுடன் அப்பாவின் சைக்கிளில் ட்ரிபிள்ஸ் அடிப்பான். பி.டெக். முடித்துவிட்டு, MS/PhDக்கு UT ஆர்லிங்க்டன் வந்தபோதுகூட, 23 சின்னப்பசங்களுக்கு ஐஸ்க்ரீம் ட்ரீட் குடுத்துவிட்டுதான் வந்தான். 'ஏண்டா ராமனாதா. போன மாசம்தானே உனக்கு பிறந்தநாள்? இப்ப மறுபடியும் என்ன ட்ரீட்?' என்ற ஏழு வயசு ரம்யாவின் கேள்விக்கு, 'போடி வாண்டு. நான் முயல் மாதிரி. முயலுக்கெல்லாம் மாசா மாசம் பர்த்டே' என்றான்.
UT ஆர்லிங்க்டன் பழக 3-4 மாதங்கள் பிடித்தன. அவனது கணியியல், புள்ளியியல் திறன் அவனை மாணவர்களிடையே முதுநிலைக்கு கொண்டுவந்தது. அவன் மற்ற நண்பர்களுக்கும் நிறைய உதவி செய்ததால், கேம்பஸில் விரைவிலேயே ரொம்பப் பிரபலமாகிவிட்டான். ஆனால், ராமனாதனின் பிரச்சனையே வேறு. இந்த ஊரிலே கொள்ளை கொள்ளையாய் அழகுக் குழந்தைகள். ரொம்பச் சின்னதாக இருக்கும் போது, அவ்வளவு லட்சணம் இருப்பதில்லை. ஆனால் இரண்டு மூன்று வயசு ஆனதைப் பார்த்தால் கட்டி அணைக்கத் தோணும். அங்கேதான் பிரச்சினையே.
##Caption##ஒருநாள் அவன் ரூம்மேட் சந்தீப் ராயுடன் வால்மார்ட் சூப்பர் ஸ்டோர் சென்று மளிகை வாங்கும்போது, ஒரு ரெண்டு-மூன்று வயசுச் சிறுமி; அவள் அம்மாவுடன், ஜவுளிப் பிரிவில் ஸ்கர்ட் அளவு பார்த்து கொண்டிருந்தாள். தங்க நிறத்தில் நேரான முடியை வகிடு எடுத்து, இரண்டு குட்டிச் சடை போட்டு ஒரு ரோஜா வர்ண ஸ்கர்ட் அணிந்திருந்தாள். ராமனாதனுக்கு மனசு கொள்ளவில்லை. ஓடிச்சென்று அந்தக் குழந்தையை தூக்கிக் கொண்டு 'வாட் இஸ் யோர் நேம்? யூ வான்ட் அ சாக்லேட்?' என்றான் வாஞ்சையோடு. அந்தக் குட்டிப் பொண்ணோ 'மாமி, மாமி' என்று கதற, அருகில் இருந்த அம்மா 'லீவ் ஹர் அலோன்... ஹெல்ப்!' என்று அவன் கையிலிருந்து அந்தக் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டாள். ஒரு கூட்டமே கூடிவிட்டது. காய்கறிப் பிரிவிலிருந்த சந்தீப் நல்ல வேளையாக அங்கே வந்து, ஒரே நிமிஷத்துக்குள் நிலைமையைப் புரிந்து கொண்டு, சமாதானப்படுத்துவதற்குள் ராமனாதனுக்குப் பொலபொலவென்று கண்ணீர் வந்துவிட்டது. அந்த சிறுமியின் தாய், அவனை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு 'ஐ டோன்ட் வான்ட் டு ப்ரெஸ் சார்ஜஸ். ஆனால், UTAவில் அனஃபீஷியலாப் புகார் செய்யப்போகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள். வால்மார்ட் அதிகாரிகள் அத்தோடு விடவில்லை. 'எங்கள் லையபிலிடி. நாங்கள் இதைப் பதிவு செய்தே தீருவோம்' என்று அடம் பிடித்தார்கள். வீடு திரும்பும் போது நாலரை மைலும், சந்தீப்பிடம் செம டோஸ் கிடைத்தது. 'பட்டிக்காடு! எங்கே இருந்துடா வர்றீங்க. குட்டிக் குழந்தைகளை கொஞ்சறானாம். இருக்கறது டெக்ஸாஸ் தெரியுமில்லே. ரெட்நெக்ஸ் வந்தான்னா ஒரு ஷாட் கன்னைக் கொண்டு வந்து ஒரே நிமிஷத்தில தீத்துக் கட்டிடுவான், தெரியுமில்ல?'
ராமனாதனுக்கு ஒரே சோகமாகிவிட்டது. 'நாம அப்படி என்ன செய்து விட்டோம்' என்று மனம் இன்னும் ஒன்றும் புரியாமல் மாறிமாறிக் கேட்டுக்கொண்டே இருந்தது. யுனிவர்சிடியில் அவனைக் கூப்பிட்டு ஒரு சைகலாஜிகல் டெஸ்ட் வைத்து, 6 வாரம் கவுன்சலிங் வரச்செய்தார்கள். தனியாக எங்கும் செல்லக்கூடாது என்றும், குறிப்பாகக் குழந்தைகள் உள்ள பகுதிகளில் அவன் புழக்கத்தைப் பார்த்தால், அவனை அரெஸ்ட் செய்யக்கூட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கவுன்சலர் கூறினார். மொலெஸ்டிங் என்ற வார்த்தையில் ஆரம்பித்து, அறியாத, மனத்தை அரித்து எடுத்துவிடும் மகா பாவங்களை எல்லாம் அவனுக்குக் கொச்சை கொச்சையாக விளக்கினார்கள். பல இரவுகள் ராமனாதனுக்குத் தூக்கமே வரவில்லை. தற்கொலை எண்ணம் கூட மனதில் ஓடியது. கந்தர்சஷ்டிக் கவசத்தை எடுத்து வைத்துக் கொண்டு பாராயணம் செய்வான். எப்படியோ நாட்கள் நகர்ந்தன. இந்த நிகழ்வுக்குப் பிறகு சிறு குழந்தைகளைக் கண்டால் உதறித் துடிக்கும் உள்ளத்தைக் கட்டி வைத்து, ஒரு வம்புக்கும் போகாமல் காலத்தைக் கடத்தினான். அவ்வப்போது கண்கள் கலங்கும். ரகசியமாகத் துடைத்துக் கொள்வான். குழந்தை சாமிகளான கண்ணன், முருகனின் பலவித உருவப்படங்களை இந்தியாவிலிருந்து தருவித்து, கதவைத் தாழ் போட்டுக் கொண்டு 'தீராத விளையாட்டுப் பிள்ளை...' என்று உரக்கப் பாடுவான்.
அதற்கும் வந்தது வேட்டு. பக்கத்து அபார்ட்மன்ட் தீபாஞ்சன் பட் ஒரு நாள் அவன் அறைக்கு வந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டு 'ராமனாதா! தப்பா சொல்றேன்னு நெனைச்சுக்காதே. எப்பவாவது, உன் ரூமுக்குள்ளே இந்த 'கோரா' படவாப்பசங்க வந்தா, உன்னைத் தப்பா நினைக்க சந்தர்ப்பம் இருக்கு. முருகனும் கண்ணனும் அரைகுறை ஆடைகளில் இருப்பதாய் நினைத்து உன்னை மாட்டி வைத்தாலும் வைக்கலாம்' என்று கொளுத்திப் போட்டான். ராமனாதனுக்கு உலகமே இருண்டு கொண்டு வந்தது. எல்லா சாமிப் படங்களும் காணாமல் போயின.
அதற்குப் பிறகு, அவன் உண்டு அவன் ப்ராஜக்ட் உண்டு என்று இரவு பகலாக உழைத்து, 4 ஆண்டுகளில் PhDயை முடித்தான். IBMமில் சேருவதற்கு முன் ஊருக்குப் போய் மைதிலியை மணமுடித்து வந்தான். இரண்டே ஆண்டுகளில் மாலினி, இன்னும் இரண்டு வருஷங்களில் பார்த்தா பிறந்தனர். அவனுக்கே அவனுக்கு, செல்லக் குழந்தைகள்; யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. மைதிலிக்குக் குழந்தைகளை கவனிக்க வாய்ப்பே கிடைக்காது. காலையில் குளிப்பாட்டுவதிலிருந்து, ராத்திரி தூங்குமுன் கதை சொல்வதுவரை எல்லமே ராமனாதன் தான். அவனுக்கு மார்பகம் இருந்திருந்தால் அவனே பால்கூட ஊட்டிவிட்டிருப்பான் என்று மைதிலி நண்பர்களிடம் கிண்டல் செய்வதுண்டு.
இப்படியாகக் காலமும் நகர்ந்தது. கடந்த கால நிகழ்வுகளை ஏழரை நாட்டு சனித் தாண்டவத்தின் பயன் என்று முடிவு பண்ணி, ஒரு கெட்ட கனவாக மறக்க முற்பட்டான். வாழ்வில் வளம் பெருகியது. மாலினிக்கு பரதம் இயல்பாக வந்தது. பார்த்தா பியானோ நன்றாக வாசித்தான். சென்ற மார்கழி மாதம், ஒரு மாத லீவில், குடும்பத்துடன் இந்தியா சென்றிருந்த போதுதான் அது நிகழ்ந்தது. திருச்சி, ஸ்ரீரங்கம் சென்றுவிட்டு வரும் வழியில் காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் சேவித்து விட்டு, ஆயிரங்கால் மண்டபத்துக்குள் உட்கார்ந்திருந்தனர். ராமனாதனின் வேஷ்டியைப் பார்த்தா கிண்டல் செய்து கொண்டிருந்தான். மாலினி வெயிலின் நிமித்தமாக ஒரு பஃப் கை வைத்த பருத்திச் சட்டையும் பாவாடையும் அணிந்திருந்தாள். மிகவும் எளிதாக இருந்தாலும், ஆண்டாளின் லட்சணத்துடன் இருந்த அவளைப் பார்த்து 'சுத்திப் போடணுங்க' என்றாள் மைதிலி.
மாலினியின் கையில் ஒரு தொன்னை. அதில் புளியோதரை. ஸ்பூன் இல்லாமல் குழந்தை வாயில் பாதியும், மூக்கில் மீதியுமாக ஒரு பத்தடி தூரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நல்ல பசி போலும். அப்போது அங்கு வந்த ஒரு வெள்ளைக்கார தம்பதியினர், அவளைப் பார்த்து ஒரு நிமிடம் ரசித்துவிட்டு, அவர்கள் கேமராக்களை க்ளிக் செய்ய ஆரம்பித்தனர். மைதிலி 'என்னங்க. அதைப் பார்த்தீர்களா?' என்றாள் கொஞ்சம் கவலையுடன். ராமனாதன் அவளைப் பார்த்து புன்முறுவலித்தான். மைதிலி அவனது ஆர்லிங்க்டன் நிகழ்வுகளை அறிய மாட்டாள். 'இதையே, USAல நாம பண்ணினால் எப்படி ரியாக்ட் செய்வார்கள்! பாவம், நம்ம ஊர் கலாசாரத்தையும் விருந்தோம்பலையும் பொறுமையையும் அவங்களை அனுபவிக்க விடு' என்றான்.
அவனுக்கு மனம் மிக லேசாகத் தெரிந்தது. ஏதோ ஒட்டு மொத்தமாக எல்லா அமெரிக்கப் பிரஜைகளுக்கும் ஒரு பாடம் புகட்டுவதாகத் தோன்றியது. நியூயார்க் திரும்பி வந்து நாட்கள் கடந்தன. ஆறு மாதம் சென்றிருக்கும். ஒரு ஞாயிறு காலை. வீட்டு ஜிம்மில் ராமனாதன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது 'டாடி டாடி. கம் ஹியர். இட் இஸ் மீ இன் டீவி' என்று மாலினியின் குரல். நானும் மைதிலியும் என்னவோ ஏதோ என்று விரைந்தோம். அங்கே டீவியில் மாலினிதான்! சந்தேகமேயில்லை. கையில் தொன்னை. அதனுள் புளியோதரையின் மஞ்சளும், ஊறுகாயின் சிகப்பும் கூட அவ்வளவு நன்றாகத் தெரிந்தன அந்த சூப்பர் ஸ்டில் போட்டோவில். ஒரு பத்து இருபது விநாடிகள்தான். போட்டோவுடன் அந்தப் படத்தை எடுத்த அந்த வெள்ளைக்காரச் சீமாட்டியும், அவளுடன் இருந்த அரை நிஜார் ஆடவனும். 'இவள்தான் இந்திரா. இவள் தாய் தந்தை இல்லாத அனாதை. இந்த இந்தியக் குழந்தை பள்ளிக்குச் சென்று 2 வேளை வயிற்றை நிரப்ப, 35 சென்ட்டுகளைச் செலவு செய்ய மாட்டீர்களா? அவளது புன்னகை மேலும் தொடர, இப்பொழுதே தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் செக்குகளை அனுப்பவேண்டிய முகவரி...'
ராமனாதன் சிலையாக உறைந்து நின்றான்.
விதார்த்தி |