கண்ணாடிக் கூரையை உடைத்த பெண்ணரசிகள்
இந்திரா நூயி
32 பில்லியன் டாலர் பெப்ஸிகோவின் இயக்குனர் குழு இந்திரா நூயியைத் தமது சேர்மனாக பிப்ரவரி 5, 2007 அன்று தேர்ந்தெடுத்தனர். தற்போதைய சேர்மன் ஸ்டீவன் எஸ். ரீன்முண்ட் இவ்வாண்டு மே 1-ம் தேதி பதவி ஓய்வு பெற்றதும் இந்திரா பதவி ஏற்பார். 51 வயதான இந்திரா தற்போது இதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக இருக்கிறார். பெப்சிகோவின் 42 ஆண்டுகால வரலாற்றில் இவர் ஐந்தாவது சேர்மன் ஆவார்.
உலகின் மிகச் சக்திவாய்ந்த 100 பெண்களில் இவரை 4-ஆவதாக '·போர்ப்ஸ்' இதழ் தனது ஆண்டுக் கணிப்பில் அறிவித்திருந்தது. சென்னையைச் சேர்ந்த இந்திரா நூயி, சென்னை கிறித்தவக் கல்லூரி, ஐ.ஐ.எம். (கொல்கத்தா) ஆகியவற்றில் பயின்றார்.
மாயா ஹாரிஸ்
மாயா ஹாரிஸ், 72 வருடங்களாகச் செயல்பட்டு வரும் வடகலி·போர்னியாவில் உள்ள அமெரிக்க குடிமைத் தற்காப்பு உரிமைச் சங்க நிர்வாக இயக்குனராகப் பதவி ஏற்றுள்ளார். இது நம் இந்திய சமுதாயத்துக்குப் பெருமை தருவதாகும். இவர் தென்றல் (பிப்ரவரி 2004) இதழில் நாம் சந்தித்த டாக்டர் ஷ்யாமளா ஹாரிஸின் மகள் ஆவார்.
சுமார் 55,000 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க குடிமைத் தற்காப்பு உரிமை சங்கம் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பு ஆகும். 1997ஆம் வருடம் தேசிய வழக்கறிஞர் குழுமம் (National Bar Association) சார்பாக இளைய சட்ட நிபுணருக்கான ஜூனியஸ் 'யூ. வில்லியம்ஸ் விருது' பெற்ற மாயாவை கலி·போர்னியாவின் 'தி டெய்லி ஜர்னல்' 1998-ம் ஆண்டின் தலைசிறந்த 20 வழக்கறிஞர்களில் ஒருவர் எனத் தேர்வு செய்திருக்கிறது. ஓக்லான்ட் பகுதியைச் சேர்ந்த மாயா, ஸ்டான்·போர்ட் சட்டக் கல்லூரில் படித்தவர். கலி·போர்னியாவில் உள்ள பல சட்டக் கல்லூரிகள் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.
வடகலி·போர்னியாவின் அமெரிக்க குடிமைத் தற்காப்பு உரிமை சங்க முன்னாள் நிர்வாக இயக்குனர் டோரதி எஹ்ரில்ச் (Dorothy Ehrilch) "மாயா ஹாரிஸ் அமெரிக்கக் குடிமை தற்காப்பு உரிமை சங்கத்தின் முக்கிய பணிகளை திறம்பட கையாளக்கூடிய தனித்திறன் படைத்தவர்" என்று பாராட்டி இருக்கிறார். மாயா ஹாரிஸின் சகோதரியான கமலா ஹாரிஸ் சான் பிரான்ஸிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞர் ஆவார்.
சித்ரா பரூச்சா
பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பி.பி.ஸி.) அறக்கட்டளையின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சித்ரா பரூச்சா. இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவர்தான். தாம் பிறந்த மதுரை மண்ணுக்கும், தமிழகத்துக்கும் இவர் பெருமை சேர்த்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. 1972ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் வசித்து வரும் இவர், தேர்ந்த மருத்துவராவார். 1996 முதல் மருத்துவத் துறையை விட்டு வட அயர்லாந்தில் உள்ள பி.பி.ஸி. ஒலிபரப்புக் குழுமத்தோடு இணைந்து 1999வரை அங்கே பணிபுரிந்தார். விளம்பரத் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் (ஒலிபரப்பு) தலைவராக 2004லிருந்து பணியாற்றினார்.
மதுரபாரதி, நளினி சம்பத்குமார் |