அப்பம் அதிரசம்
அப்பம் அதிரசங்களில் சில வகைகள். எல்லாமே அதி ரசமான தின்பண்டங்கள். செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

அரிசி அப்பம்

தேவையான பொருட்கள்
அரிசி - 1 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
வெல்லம் - 1/2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
ஏலக்காய் - 3
பால்மாவு - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
அரிசி, உளுத்தம் பருப்பை ஊற வைத்து மிக்சியில் மையாக அரைக்கவும். பின்பு அதனுடன் வெல்லம், தேங்காய் போட்டு ஏலக்காயும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

பின்பு அதில் நெய், பால் மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் எண்ணெய் காய்ந்து வந்ததும் தயாராக இருக்கும் கலவையைக் கரண்டியால் எடுத்துக் கிண்ணம் போல் ஊற்றவும்.

இருபுறமும் சிவந்து கோகோ நிறம் வந்ததும் வாணலியில் இருந்து எடுக்கவும். அரைக்கும் போது வாழைப்பழமும் போட்டுச் செய்யலாம். சுவையாக இருக்கும். வாசனை தூக்கும்.

அரிசி மாவில் வெல்லக் கரைசல் ஊற்றித் துளி கோதுமை மாவு கலந்து கரைத்தும் இதே போல அப்பம் செய்யலாம்.

அரிசியை ஊறவைத்துச் சிறிது வடியவிட்டு, காய வைத்து மிக்சியில் மாவாக அரைத்துச் சலித்துக் கொள்ளவும்.

வெல்லப் பாகு செய்து தேங்காய், ஏலக்காய் போட்டு, பாகு கையில் உருட்டுப் பதம் வந்ததும் மாவில் விட்டுக் கலந்து சிறிது கோதுமை மாவு கலந்து கரைத்துக் கொண்டு பொன்னிறமாய்ப் பொரித்து எடுக்கலாம்.

இதுபோல் பாகு செய்து எடுத்து பிரிட்ஜில் வைத்து தேவையான போது அப்பம் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com