பெற்றோருக்குத் தம் குழந்தை 'அவையத்து முந்தியிருப்ப'தைக் காண்பதில் பேரானந்தம். இந்தியப் பெற்றோர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 'என் குழந்தை டாக்டரா வரணும், எஞ்சினியரா வரணும்' என்று குழந்தை பிறக்கும் முன்பே அதன் எதிர்காலத்தை முடிவு செய்துவிடுவார்கள். அமெரிக்காவில் வாழும் இந்தியப் பெற்றோர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
பெற்றோர் ஒரு திட்டம் தீட்ட, அத்துறையில் நுழையப் பிடிக்காமல் தமக்கென வேறொரு துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதோடு அதில் தொழில் ரீதியான வெற்றியும் பெறுகிறார்கள். இப்படித் தாம் விரும்பிப் படித்த துறையில் தனி முத்திரை பதித்து வருபவர் தான் நிஷா பவர்ஸ்.
டென்னஸீ மாநிலம் மெம்ஃபிஸ்ஸில் வாழும் நிஷா பாரம்பரியத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை கோம்ஸ் கணபதி தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் (தென்றல் பத்திரிகை ஆசிரியர்குழுவில் ஒருவர்). தாயார் கஸ்தூரி இல்லத்தரசி. கோம்ஸ் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பணியாற்றிப் பின்னர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.
##Caption##சென்னைப் பள்ளியில் படித்த நிஷா, அந்த இளவயதிலேயே தந்தையின் மடியில் அமர்ந்து அவரது எஞ்சினியரிங் தொழிலைப் பற்றித் தான் அறிந்துகொண்ட அனுபவங்களை நினைவுகூர்கிறார். அமெரிக்கா வந்த பிறகு மேற்படிப்பைத் தேர்வு செய்வதில் சிறிய சிக்கல். காரணம் நிஷாவுக்கு ஜர்னலிசம் படிக்க ஆசை. பெற்றோருக்கோ அவர் எஞ்சினியர் ஆகவேண்டும்.
'எஞ்சினியராக இருந்துகொண்டே இதழியலில் ஈடுபடலாம். ஆனால், ஜர்னலிசம் மட்டும் படித்தால் எஞ்சினியராக முடியாது' என்று கூறினார் கோம்ஸ். நன்கு யோசித்து இன்ஜினியரிங்கில் B.S. பட்டத்தை சிவில் துறையில் முடித்தார் நிஷா. படித்தது நாக்ஸ் வில் கல்லூரியில். கடவுள் பக்தியும் ஆன்மீக நாட்டமும் கொண்ட நிஷா தன் வெற்றிக்கு முழுக் காரணம் இறையருள்தான் என்கிறார்.
படித்து முடித்தவுடனேயே வேலை கிடைத்துவிட்டது. எட்டு ஆண்டுகள் அதே நிறுவனத்தில் வேலை செய்த நிஷாவுக்கு 'இதே தொழிலைச் சுயமாகச் செய்தால் என்ன?' என்று தோன்றியிருக்கிறது. இதற்கு இவரது பெற்றோர் ஆதரவு தந்தனர். உடனே களத்தில் இறங்கியிருக்கிறார் நிஷா. இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன வென்றால் நிஷாவின் கணவர் கிரேக் பவர்ஸ் (Craig Powers) ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கர். மெகானிகல் எஞ்சினியர். நிஷாவின் எல்லா முயற்சிகளிலும் உறுதுணையாக இருப்பவர். நிஷா, தான் பணிபுரிந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவரிடம் இந்த முடிவைப் பற்றிக் கூற, அவர் உடனே 'நீங்கள் சொந்த நிறுவனம் தொடங்குவதாக இருந்தால் என் கட்டிட வேலையை உங்களிடமே தருகிறேன்' என்றார். நிறுவனம் தொடங்கு முன்பே கையில் முதல் ஆர்டரும் கிடைத்துவிட்டது நிஷாவுக்கு. அப்படி 2005ல் உருவானதுதான் 'பவர்ஸ்ஹில் டிசைன்' என்ற நிறுவனம். முந்தைய நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருந்த ஸ்டீவ் ஹில் இந்த முயற்சியில் இணைந்து நிஷாவுடன் களமிறங்கினார். மெம்ஃபிஸ் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பல கட்டிடத் தொழில் நிறுவனங்களுக்கு எஞ்சினியரிங் ஆலோசனைகளைக் கொடுத்து வருகின்றனர்.
நிஷா ஒரு பரதநாட்டியக் கலைஞரும்கூட. தந்தையின் வழியே தமிழில் கவிதை, கட்டுரைகள் எழுத ஆர்வம் கொண்டவர். பெண்ணுரிமைச் சாதனை ஒன்றையும் செய்திருக்கிறார் நிஷா. கடந்த பத்து வருடங்களாக மெம்ஃபிஸ் நகரத்தில் சிறுபான்மையினருக்குத் தொழில் தரும் சட்டம் ஒன்று உள்ளது. இந்தச் சட்டப்படி (Women based minority enterprise) ஒரு வெள்ளையர் அல்லது ஆப்பிரிக்க-அமெரிக்கருக்கு மட்டுமே பணி ஒதுக்கப்பட வேண்டும். இந்தியரான நிஷா இவ்விரண்டிலும் இடம்பெறாததால் அவருக்கு ஒப்பந்தப் பணி எதுவும் கிடைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்பாக மட்டுமே இதைக் கருதாமல், பிற இனப் பெண்களையும் மனதில்கொண்டு, இச்சட்டத்தை முறியடிக்க கடுமையாகப் பேராடியிருக்கிறார் நிஷா.
'உனது கலாசார பாரம்பரியத்தை இதற்காக நீ விட்டுக் கொடுக்கத் தயாரா? என்று ஓர் அரசு அதிகாரி நிஷாவிடம் கேட்க, 'நான் இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். அதே சமயம் அநீதியை எதிர்த்துப் போராடத் தான் செய்வேன்' எனக் கூறியிருக்கிறார். கவுன்சிலர், காங்கிரஸ்காரர் என ஒருவர் விடாமல் எல்லோரிடமும் மனுக் கொடுத்து இறுதியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
அப்படி வெற்றி பெற்ற போதும் இதுவரை மெம்ஃபிஸ் நகரத்தின் எந்த ஒப்பந்தப் பணியும் தன் நிறுவனத்துக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் இவருக்கு உண்டு.
மெம்ஃபிஸிலுள்ள ஷெல்பி கவுண்டியில் மெம்ஃபிஸ் நகரம் மற்றும் ஷெல்பி கவுண்டிப் பள்ளிகளின் பொருளாதாரக் காப்பு மையத்தின் தலைவர் பொறுப்பும் வகிக்கிறார் நிஷா. ஒவ்வொரு வருடமும் ஷெல்பி கவுண்டியின் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளருடன் வாஷிங்டன் சென்று அங்குள்ள செனட்டர்களைச் சந்தித்து அத்தொகுதி மேம்பாட்டுக்குத் தேவையான திட்டங்களைப் பற்றி விளக்கிச் சொல்லி வருகிறார். மெம்ஃபிஸ் பள்ளிச் சிறுவர்களிடம் எஞ்சினியரிங் துறையைப் பற்றி விளக்கி அத்துறையிலுள்ள பணி வாய்ப்புகளையும் எடுத்துச் சொல்கிறார்.
தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் சேவை அமைப்புகள் மூலம் பிற்படுத்தப்பட்ட நாடுகளுக்குச் சென்று மருத்துவ முகாம்கள் பலவற்றில் பங்குபெற்ற அனுபவம் தனக்கு ஒரு தனிப் பொலிவைக் கொடுத்ததாகக் கூறுகிறார் நிஷா. தாயார் கஸ்தூரியிடமிருந்து பொறுமை, நினைத்ததைச் சாதிக்கும் தன்மை போன்ற குணங்களைத் தாம் கொண்டுள்ளதாக கூறுகிறார். சிந்தாதிரிபேட்டை பள்ளி ஒன்றில் முதல்வராக இருந்த கஸ்தூரி அமெரிக்கா வந்து தன் குடும்பத்தையே முக்கியமாகக் கருதி இல்லத்தரசியாகி விட்டார். தாயார் வைக்கும் ரசமும் வெண்டைக்காய்ப் பொரியலும் நிஷாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளாம். பிடித்த படம் 'தில்லானா மோகனம்பாள்'. நடனமணிக்கு வேறெதாவது பிடித்தால்தான் ஆச்சரியம்.
காந்தி சுந்தர் |