2008 ஏப்ரல் 19-20 தேதிகளில் கலிபோர்னியாவின் சான் ஹோசேயில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின் முதலாண்டு இசைவிழா நடைபெற்றது. இத்தகைய விழாக்களை சிங்கப்பூர், மலேசியா, லண்டன், கனடா, ஜெர்மனி, பாரிஸ், சுவிட்ஸர்லாந்து என உலகின் பல பகுதிகளிலும் நடத்தி சிவன் அவர்களின் மேதைமைக்கு நினைவஞ்சலி செலுத்தி வரும் அவரது மகள் ருக்மணி ரமணியும், பேரன் அசோக் ரமணியும் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
சிவன் பாடல்களால் அமைந்த வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் தவிர நாட்டியத்துக்கும் முதல் நாள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 160 குழந்தைகள் பங்கேற்றனர். குருவாயூர் துரை, அசோக் ரமணி, சுவாதி ரவி போன்றோர் இதற்கு நடுவர்களாகப் பணியாற்றினர். மறுநாள் நிகழ்ச்சியில் சிறியோரும் பெரியோருமாகப் பல கலைஞர்கள் பாபநாசம் சிவன் அவர்களின் பாடல்களைப் பாடி மகிழ்த்தினர். அவரது 'ராம சரித கீதம்' என்னும் இசை நாடகத்தைச் சிறப்பாகப் பாடினர் குரு அனு சுரேஷ் அவர்களின் சீடர்கள். பத்தே வயதான மாளவிகா ஸ்ரீராம் பக்க வாத்தியங்களுடன் 'ஸ்ரீவல்லி', 'தசரதாத்மஜம்' போன்ற கீர்த்தனைகளைப் பாடி மனதைக் கொள்ளைகொண்டாள். சந்தியா சந்திரசேகரன், அனிருத் வெங்கடேஷ், பிரசன்னா சுந்தரராஜன், கீதா வெங்கடாசலம், விக்ரம் போன்ற இளம் கலைஞர்களின் இசை அஞ்சலி அபாரம்.
வளைகுடாப் பகுதியில் பிரபலமான ஸ்ரீகாந்த் சாரி (வீணை), சங்கீதா சுவாமிநாதன், ஆஷா ரமேஷ், மானஸா சுரேஷ், சித்தார்த் ஸ்ரீராம், அனு ஸ்ரீதர் (வயலின்), அசோக் ரமணி, அசோக் சுப்ரமண்யம் ஆகியோரும் பாடி அஞ்சலி செலுத்தினர். நாகராஜ் மாண்ட்யா, ரவீந்திர பாரதி, சென்னை பாபு ஆகியோர் பக்கம் வாசித்தனர்.
சிவன் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பாக பிரபல ஆசான்களும் கலைஞர்களுமாகிய அனு சுரேஷ், ஜெயஸ்ரீ வரதராஜன், அனு ஸ்ரீதர், லதா ஸ்ரீராம், ஆஷா ரமேஷ், சங்கீதா சுவாமிநாதன், ஹேமா சிஷ்ட, ஜெயஸ்ரீ தாசரதி, அசோக் சுப்பிரமணியம், மைதிலி பிரகாஷ், விஷால் ரமணி, வித்யா சுப்பிரமணியம், ஸ்ரீகாந்த் சாரி, ஸ்ரீராம் பரமானந்தம், ரவீந்திர பாரதி, சுவாதி ரவி போன்றோரை மேடையில் கௌரவித்தனர். இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அசோக் ரமணியை குரு விஷால் ரமணி பாராட்டிப் பேசினார்.
|