பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 27, 2008 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தண்டு விழாவை கலிபோர்னியா சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் விமரிசையாக நிகழ்ந்தேறியது. அருணகிரிநாதரின் 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலை செல்ஸி சிம்ரன் ராஜ் இறைவணக்கமாகப் பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் கோவிந்தராஜனின் வரவேற்புரையை அடுத்து குழந்தைகளும் பெரியவர்களும் பல கலைநிகழ்ச்சிகளை வழங்கினர்.

வாய்ப்பாட்டு, வாத்திய இசை, பக்திப்பாடல்கள், பாரத பாரம்பரிய நடனங்கள், திரைப்பட நடனங்கள் என அனைத்து நிகழ்ச்சிகளும் வந்திருந்தோரை பிரமிக்க வைத்தன. பரதநாட்டிய ஆசிரியைகள் தீபா மகாதேவன், விஷால் ரமணி, குச்சிப்புடி ஆசிரியர் ஹிமபிந்து சல்லா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் அஜிதா, மல்லிகா, அரவிந்த், அகிலா, ஷர்மிளா ரவிசங்கர், ஜெயா ஜூலியட், ஜெயஸ்ரீ கார்த்திக், உஷா அரவிந்தன், சாந்தி சாம்பசிவம், உமா ஸ்ரீராம், சந்திரா விஸ்வநாதன் ஆகியோரின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவையாக அமைந்திருந்தன. நிகழ்ச்சியை அருண் விஸ்வநாதன் தன் பலகுரல் திறமையின் மூலம் சுவையாகத் தொகுத்தளித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை நினைவு கூறும் வகையில் அவரது கதை நாடகமாக நடத்திக் காட்டப்பட்டது. இதற்கு சித்ரா கருணாகரன் மேடை அமைப்பு, முகுந்தன் பின்னணி இசை, பாலாஜி சீனிவாசன் நாடக இயக்க உதவி செய்திருந்தனர். ஸ்ரீகாந்த், கெளரி, ராம்கி ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர்.

தமிழ்ப் புத்தாண்டு விழா பாரதி தமிழ்ச் சங்கத்தின் முதல் ஆண்டு நிறைவு விழாவாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத் தக்கது.

சுந்தரேஷ்

© TamilOnline.com