பிங்க் சிடி அல்லது இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப்படுவது ஜெய்ப்பூர். மாளிகைகள் கொண்ட அழகான தெருக்களைக் கொண்டது. இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று. அமைதிக்குப் பெயர்பெற்ற இந்த நகரத்தில் மே 13 அன்று நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் ரத்த ஆறைப் பெருக்கியுள்ளது. கோயிலை ஒட்டிய ஒரு மார்க்கெட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 63 பேர் வரை பலியாகி உள்ளனர். இருநூற்றுக்கும் மேற்பட்டோருக்குக் காயம். மாலை மணி 7.30க்குத் தொடங்கிய இந்தக் குண்டு வெடிப்பு 20 நிமிடங்கள் நீடித்ததில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. குழந்தைகள், பெரியவர்கள், ஆலயத்துக்கு வந்த பக்தர்கள், வியாபாரிகள் என பலதரப்பட்டவர்களின் உயிரைப் பறித்திருக்கிறது இந்த வன்முறை. வழக்கம்போல மத்திய அரசும், ராஜஸ்தான் மாநில அரசும் ஒன்றன்மீது ஒன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன. டில்லி, மும்பை, ஹைதராபாதைத் தொடர்ந்து சாதாரண நகரமான ஜெய்ப்பூரில் தீவிரவாதிகள் கைவரிசையைக் காட்டியிருப்பது அதிர வைப்பதாக உள்ளது. மக்களின் பாதுகாப்பின்மையில் அரசியல் செய்வதை விடுத்துச் சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி.
அரவிந்த் |