குட்டிச் சுவரில் ஓவியம்
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சதானந்தம். நாற்பத்தெட்டு வயதான இவர் ஓர் இயற்கை ஆர்வலர். அது மட்டுமல்ல; சிறந்த ஓவியரும் கூட. தற்போது ஊனமுற்ற தனது மனைவியுடன் திண்டுக்கல் நகரில் வசித்து வரும் இவர், நகர்ப் பகுதியில் பயன்படாத கட்டடங்களின் சுவற்றில் கரித்துண்டால் இயற்கைக் காட்சிகளை ஓவியமாகத் தீட்டி வருகிறார். சதானந்தம் சிறுவயதாக இருக்கும்போதே சுவற்றில் கரித்துண்டால் கிறுக்குவார். இந்தக் கிறுக்கல்கள் நாளடைவில் ஓவியமாக மாறின. குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பை ஐந்தாம் வகுப்புக்கு மேல் அவரால் தொடர முடியவில்லை. தற்போது வெறும் கரித்துண்டு, சாக்குக் கட்டி, இலைச்சாற்றைப் பயன்படுத்தி அருமையான ஓவியங்களைச் சுவர்களில் தீட்டி வருகிறார். இவரது இயற்கை ஓவியங்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதுடன், ஓவியமா இல்லை உண்மையா என ஆச்சரியப்படவும் வைக்கின்றன. சதானந்தம் இது குறித்துக் கூறும்போது, 'நான் இயற்கைக் காட்சிகளை மட்டும்தான் ஓவியமாக தீட்டுவேன். பெயின்ட், பிரஷ் போன்ற செயற்கைச் சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை. இயற்கைப் பொருட்களையே பயன்படுத்துகிறேன். அரசியல் தலைவர்களின் உருவங்களை வரைய மாட்டேன். நாட்டின் சீரழிவுக்கு அரசியல் தான் காரணம். மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நான் இயற்கைக் காட்சிகளை வரைகிறேன்' என்கிறார். சதானந்தம் சொல்வது சரிதான்.

அரவிந்த்

© TamilOnline.com