சர்வர் ஐ.ஏ.எஸ்
மெத்தப் படித்த, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஐ.ஏ.எஸ். ஆக முடியும் என்னும் வாதத்தைத் தகர்த்தெறிந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ். ஆம்பூரை அடுத்துள்ள விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். சாயப் பட்டறையில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளியின் மகன். பத்தாவது முடித்தவுடன் பொறியியல் படிப்பையும் வெற்றிகரமாக முடித்த ஜெய்கணேஷ், பெங்களூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார். இயல்பாகவே அவருக்கிருந்த ஆர்வமும், தன்னம்பிக்கையும் ஐ.ஏ.எஸ். கனவை ஆழமாக விதைத்தது. தான் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை விட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். ஆக முயற்சி செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து மூன்று முறை தேர்வெழுதியும் வெற்றி பெற இயலவில்லை. இருந்தாலும் விடாமுயற்சியுடன் நான்காவது முறையும் தேர்வெழுதினார். இறுதி நேர்முகத்தேர்வு வரை சென்றும் வெற்றி பெற முடியாமல் போய் விட்டது. குடும்பத்தைப் பராமரிக்க வசதியில்லை. படிக்கவும், புத்தகங்கள் வாங்கவும் அதிகப் பணம் தேவைப்பட்டது. மனம் சோரவில்லை ஜெய்கணேஷ். சென்னைக்கு வந்தார். உணவு விடுதி ஒன்றில் பில் போடும் வேலை கிடைத்தது. அதில் வந்த வருமானத்தைக் கொண்டே ஆறாவது முறையும் தேர்வெழுதினார். அதிலும் அவருக்குத் தோல்விதான். ஆனாலும் மனம் சோரவில்லை. ஏழு முறைக்கு மேல் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முடியாது என்பதை மனதிற் கொண்டு, இதுதான் இறுதி வாய்ப்பு என்பதை உணர்ந்தவராய் மிகக் கடுமையாக உழைத்தார். இன்று ஜெய் கணேஷ் ஒரு ஐ.ஏ.எஸ். 'நான் ஏழை என்பதால் ஏழைகளின் பிரச்சனைகள் என்னென்ன என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். அவர்கள் துயர் களைவதும் கிராமங்களை முன்னேற்றுவதும்தான் எனது லட்சியம்' என்கிறார் ஜெய்கணேஷ்.

அரவிந்த்

© TamilOnline.com