சுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 11
முன்கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, அவர் முழுநேரத் துப்பறிவாளராகி விட்டார். நண்பர் மகன் கிரணும், மகள் ஷாலினியும் துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி ஸ்டான்போர்டு மருத்துவமனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன், தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாகக் கூறுகிறார். சூர்யாவின் திறமையைப் பற்றி நன்கு அறிந்திருந்த முரளி, அவருக்குச் சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்து வந்தார். மார்க், சூரிய ஒளி உற்பத்தி நுட்பத்திலும், மின்சக்தியை சேமிக்கப் பயன்படும் உயர்தர பேட்டரி நுட்பத்திலும் வெர்டியான் புரட்சிகரமான முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கூறினார். பல வடிவங்களில் வளைக்கக் கூடிய, ஆனாலும் பெருமளவில் சூரிய ஒளி மின்சக்தி தரும் நுட்பத்தை வெர்டியான் உருவாக்கியிருப்பதாகவும் கூறி அதைப் பற்றி மேலும் விளக்கலானார்...

மற்ற ஸிலிகான் நுட்பங்கள் போல் அதிவெப்பத்தில் வளைக்கக் கூடிய பிளாஸ்டிக் தகடுகளின் மேல் ஸர்க்யூட்களைப் பதிக்க முடியாது என்பதால், அடித் தகட்டின் மேல் ஸர்க்யூட்கள் போல் வெட்டப்பட்ட மூடி ஷீட்டை மேலே பொருத்தி வைத்து அதன் மேல் மின்சக்தி உற்பத்தி தரும் துகள்கள் மற்றும் கண்ணுக்கேத் தெரியாத அளவுக்குச் சிறிதான ரெஸிஸ்டர்கள் போன்ற மற்ற மின்சாதனங்களும் ஆல்கஹால் திரவத்தில் கலந்து கொட்டப்படுவதாக மார்க் கூறியதும் வியப்பால் கிரண் வாய் பிளந்தான். 'சரி அப்படி கொட்டிட்டா மட்டும் எப்படி அது பதிஞ்சு வளைக்கக் கூடிய ஒளி மின்சக்திப் பேனலா ஆயிடுது? எல்லாம் அப்படியே வழிஞ்சு ஓடிடாதா என்ன!'

##Caption##மார்க் முறுவலுடன் விளக்கினார். 'கிரண், கொட்டப்படுதுன்னா, மண்மேல மழை விழறா மாதிரி இல்லை. ரொம்பத் திக்கான ஸிரப்பையோ தேனையோ மெள்ள வழிய விடறா மாதிரி. அதுமட்டுமில்லை, எந்த வடிவம் வேணுமோ, அந்த விட்டத்தை பிளாஸ்டிக் ஷீட் மேல சுத்திக் கட்டிட்டு அதுக்குள்ளக் கொட்டுவோம். அதுனால வழிஞ்சு ஓடற வாய்ப்பே இல்லை. மாஸ்க்ல இருக்கற கண்ணுக்கேத் தெரியாத ஓட்டைகளுக்கேற்ப சரியான வடிவத்துல இருக்கற துகள்களும் மற்ற சாதனங்களும் அடி ஷீட் மேல ஒட்டிக்குது. அதுக்கப்புறம் ஆல்கஹால் ஆவியாகிப் போயிடுது. மேல் தகட்டை எடுத்துட்டா வளையக்கூடிய சூரிய ஒளி சக்திப் பேனல் தயார்.'

கிரண் சலித்துக் கொண்டான். 'சே! என்னதான் இண்டஸ்ட்ரியல் ஆல்கஹால்னாலும், இப்படி ஆவியாக்கி வேஸ்ட் பண்றது ரொம்பத் தப்பு. மனசே தாங்கலை. வேற மாதிரி செய்முறையே இல்லையா என்ன?'

மார்க் வாய்விட்டு உரக்கச் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். 'இருக்குப்பா, இருக்கு! நாங்க இன்னொரு நுட்பத்தையும் கொண்டு வந்துக்கிட்டுத்தான் இருக்கோம். இந்த ஆல்கஹால் முறையில மிக அதிக நுணுக்க அளவுக்கு ஸோலார் ஸெல் சர்க்யூட்கள் செய்ய முடியலை. ஏன்னா மாஸ்க் சரியான முறையில தயாரிக்கறதே ரொம்ப கஷ்டம். அதுக்கப்புறமும் சரியா சர்க்யூட்கள் பொருந்தாம தொல்லை குடுக்குது. அதுனால, ப்ளாஸ்டிக் தகடு மேல ஸோலார் ஸெல்களை அச்சடிக்கறா மாதிரியான நுட்பம் தயாரிச்சிக் கிட்டிருக்கோம். அது இன்னும் உற்பத்தி அளவுக்கு வரலை. ஆனா, வருங்காலத்துக்கு அதுதான் முன்னணிக்கு வரும்னு நினைக்கிறேன்.'

கிரணின் வாய் இன்னும் அகலமாகப் பிளந்தது. 'என்ன அச்சடிக்கறீங்களா? ஸோலார் ஸெல்லையா? வாவ்! பணத்தையே அச்சடிக்கறா மாதிரி போலிருக்கு. எப்படி அது?'

சூர்யாவும் ஆவலுடன் கேட்டார், 'ரைட். நான் வேலை பார்த்ததும் ஸெமை கண்டக்டர் உற்பத்திச் சாலையிலதான். அதி வெப்பத்துல ஸிலிகான் தட்டங்கள் மேல வேற வேற மாஸ்குகளை வச்சு மேல மேல வேற சர்க்யூட்களை அமைக்கறது தெரியும். அதுனால நீங்க சொன்ன மாஸ்க் விஷயமும் ஓரளவுக்கு சரின்னு பட்டுது. ஆனா இது இன்னும் ஆச்சர்யமா இருக்கு. அதைப் பத்திக் கொஞ்சம் விளக்குங்க.'

மார்க் மேற்கொண்டு விளக்கலானார். 'மின்சக்தி உற்பத்தி செய்யற துகள்களைத் திரவமா செஞ்சிருக்கோம்னு சொன்னேன் இல்லையா. இதுவும் அதே விதந்தான். ஆனா ஓடற மாதிரி இல்லாம கொஞ்சம் திக்கா இங்க் ஜெட் ப்ரிண்ட்டர்ல பயன்படுத்தற இங்க் மாதிரி செய்யறோம். பேப்பர்ல எழுத்துக்களைப் பதிக்கறா மாதிரியே ப்ளாஸ்டிக் ஷீட் மேல பதிக்கறோம். ரொம்ப மெல்லிய ஷீட்கள் மேல பதிச்சு ஜன்னல்கள் மேல கூட ஒட்டிக்கலாம். ஜன்னல்களின் ரெண்டு பக்கத்திலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யறா மாதிரியும் செஞ்சுக்கிட்டிருக்கோம். கிரண் நீ சொன்னயே அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு கூரைப் பரப்புப் போதாதேன்னு. ஆனா, கூரை மட்டுமில்லாமல், ஜன்னல்களிலிருந்தும் நிறைய மின்னுற்பத்தி செஞ்சா அந்தக் கட்டிடங்களுக்கும் தேவையான சக்தி கிடைச்சுடும். அது மட்டுமில்லை...'

முரளி குறுக்கிட்டார், 'இதுவே ரொம்ப ஆச்சர்யமா இருக்கே. இன்னும் என்ன? நடமாடற ஜனங்ககூட மின்னுற்பத்தி செய்யலாங்கப் போறீங்களா என்ன!'

மார்க்கின் புன்னகை இன்னும் மலர்ந்தது. 'கரெக்ட் முர்லி. எப்படி சரியா கெஸ் பண்ணிட்டீங்க.'

இப்போது வாய் பிளப்பது முரளியின் முறையாயிற்று. 'என்ன? இது நடக்கற கதையாயில்லையே!'

மார்க் சிரித்தார். 'நடக்கற கதை மட்டுமில்லை முர்லி. நடமாடற, ஓடற, உக்காந்துக்கற, படுத்துக்கற கதை. அதாவது, நீங்க இப்ப உடுத்திக்கிட்டிருக்கீங்களே துணி, அந்தத் துணி மேலயே மின்னுற்பத்தித் துகள்களைப் பதிக்கறா மாதிரி ஒரு நுட்பத்தை ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டிருக்கோம். ஆனா மனுஷங்க மட்டுமில்லை, கார்கள் போன்ற எந்தப் பரப்புள்ள சாதனங்கள் மேலயும் இதைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செஞ்சுக்கலாம். அந்த மாதிரியான ஒவ்வொரு ஸெல்லிலிருந்தும் அதிக மின்சக்தி எப்படி செய்யறதுன்னு இப்பத் தீவிரமா ஆராய்ஞ்சுக் கிட்டிருக்கோம். அந்த ஸெல்கள் நடுநடுவிலேயே மைக்ரோ இன்வெர்ட்டர்கள் என்ற சாதனங்களையும் சேர்த்துப் பதிச்சா இன்னும் நிறைய சக்தி கிடைக்குதுன்னு கண்டு பிடிச்சிருக்கோம்.'

கிரண் களுக்கென்று சிரித்தான். 'சரிதான். பண்ணைகளில ஆடு, மாடு, குதிரை, கோழிக்கும் ஸோலார் ஸெல்லைப் பெயின்ட் அடிச்சு மொத்தமா மின்னுற்பத்தி செஞ்சுட வேண்டியதுதான் போலிருக்கு. அதுவும் அதுங்க போடற கழிவையும் வச்சு கேஸ், பயோடீஸல் செஞ்சுட்டா மொத்தமா சுத்த சக்திப் பண்ணைகளாயிடுமே...'

மார்க் சிரித்துவிட்டு 'நல்ல ஐடியாதான். எங்க விஞ்ஞானிங்ககிட்ட சொல்லிடறேன்' என்றார்.

சூர்யா சிலிர்த்துக் கொண்டு, 'ஓ! விஞ்ஞானிங்கன்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. உங்க விஞ்ஞானி ஒருத்தர் தாக்கப்பட்டு மருத்துவமனையில கிடக்கிறார்ங்கறதுனாலதானே எங்களை இங்க வரவழைச்சிருக்கீங்க? அந்தப் பிரச்சனையைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க. அந்த விஷயத்தைக் கவனிக்கலாம். இந்த நுட்பங்களைப் பத்தி வேணும்னா அப்புறம் இன்னும் விவரமா பேசிக்கலாம்' என்றார்.

சூர்யாவின் கேள்வி, சூரிய சக்தியைப் பற்றிய கனவுலகிலேயே மூழ்கி ஆனந்த சஞ்சரிப்பில் ஆழ்ந்து திளைத்துக் கொண்டிருந்த மார்க் ஷெல்ட்டனை அதிரிடி போல் தாக்கியது. சில நொடிகள் அந்த அறையில் மயான அமைதி நிலவியது.

முரளிதான் முதலில் மௌனத்தைக் கலைத்தார். 'ரொம்ப தேங்க்ஸ் சூர்யா. நாங்க எல்லாமே வந்த விஷயத்தைச் சுத்தமா மறந்துட்டு எங்கயோ போயிட்டோம். நீங்கதான் கணக்கா எங்களைத் திரும்பி பூமி மட்டத்துக்குத் தடால்னு இறக்கியிருக்கீங்க. மார்க் இப்ப உங்க விஞ்ஞானி, அவர் பேரென்ன? ஆங், யெஸ்... வூ பிங் சூ இல்லையா? வூ இப்ப எப்படி இருக்கார்? விவரம் சொல்லுங்க' என்றார்.

மார்க் சிலிர்த்து விட்டுக் கொண்டு தன்னைச் சுதாரித்துக் கொண்டார். 'ரொம்ப ஸாரி சூர்யா. நான் எங்க நுட்பத்தைப் பத்தி விவரிக்கற சுவாரஸ்யத்துல, நிலைமையை மறந்துட்டேன். நீங்க கேள்வி கேட்டதும் என்னை யாரோ பளார்னு அறைஞ்சுட்டா மாதிரியாயிடுச்சு. வூ இன்னும் மருத்துவமனையிலதான் இருக்கார். ஆனா இப்ப இன்ட்டென்ஸிவ் கேர் யூனிட்டில இருக்கற அளவுக்கு மோசமா இல்லை. நல்ல வேளையா நிலைமை முன்னேறியிருக்கறதால, அங்கிருந்து நகர்த்தியிருக்காங்க. அதிக அக்கறையாப் பாத்துக்கற அடுத்தபடியான அறைக்குக் கொண்டு வந்திருக்காங்க. அதுவே எனக்குக் கொஞ்சம் மன நிம்மதி கொடுத்திருக்கு. அவர் தாக்கப்பட்டப்போ இருந்த நிலைமையைப் பார்த்து நான் அப்படியே குலைநடுங்கி ஆடிப் போயிட்டிருந்தேன்.'

முரளி சந்தோஷப்பட்டார். 'அப்படியா? பரவாயில்லை. நீங்க சொன்னப்போ நானும் பதறிப் போயிருந்தேன். அதுனாலதான் சூர்யாவையும் அவசரமா இழுத்துக்கிட்டு வந்தேன்.'

சூர்யா மீண்டும் மார்க்கைத் தூண்டினார். 'வூ பத்தியும், அவர் இங்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தார், அவருக்கு என்ன ஆச்சுன்னும் கொஞ்சம் விவரம் சொல்லுங்க.'

மார்க் தலையாட்டிவிட்டு விவரிக்கலானார். 'வூ பிங் சூ சூரிய சக்தி நுட்பத்துலயே ஒரு பெரிய சூப்பர் ஸ்டார்னு சொல்லலாம்.'

கிரண் துள்ளினான். 'ஹையா! சூப்பர் ஸ்டார்! சூரிய சக்தியின் ரஜினிகாந்த்னு சொல்லுங்க. வூ சூ த பாஸ்! சும்மா அதிருதில்லே! இது எப்படி இருக்கு' என்று சொல்லிக் கொண்டு ஒரு கராட்டே போஸ் கொடுத்தான்.

மார்க் ஒன்றும் புரியாமல் விழிக்கவே, முரளி கலகலவென சிரித்துக்கொண்டு, 'அது ஒண்ணுமில்லை மார்க். தமிழ் சினிமாவிலேயே மிகவும் பிரபல நடிகரான ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார்னு பட்டம். அவர் படத்துல வர ஒரு விஷயத்தை சொல்றான் அவ்வளவுதான். கிரண், அவரைக் குழப்பாதே. மேல சொல்லுங்க மார்க்' என்றார்.

மார்க்கும் சிரித்துக் கொண்டு, 'ஓ! ஆர்னால்ட் மாதிரியா? ஓகே, ஓகே' என்று கூறிவிட்டு, வூ பிங் சூவின் சாதனைகளைப் பற்றிப் பெருமிதத்துடன் விளக்கலானார்.

தொடரும்

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com