மறக்கமுடியாத ராஜஸ்தானி திருமணம்
ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு

காவல்பணி அதிகாரியான நண்பர் எஸ்.பி.மாத்தூர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நாங்கள் ஜெய்ப்பூருக்குச் சென்றோம். உறவினர்கள் அனைவரும் ஆரத்தி எடுத்துத் திலகம் இட்டு வரவேற்கப்பட்டனர். கொண்டாட்டத்தின் ஆரம்பமாக 'நியோத்னா' நடைபெற்றது. (மணமகளின் தாய்மாமன், பாட்டனார், சித்தப்பா ஆகியோரைத் திருமணத்திற்கு அழைக்கும் சடங்கு இது).

மணமகளின் சகோதரர் உறவினர்களுடன் சென்று மணமகனுக்கு அன்பளிப்புகள், இனிப்புகள், பழங்கள் இவற்றை வழங்கி திருமணத்துக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மணமகன் பருகுவதற்காக வெள்ளி தம்ளரில் சர்பத் வழங்கினார். திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் நடக்கும் இந்தச் சடங்குக்கு 'சமேலா' என்று பெயர். அன்று மாலையில் சிசோதியா தோட்டம் என்னும் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த தோட்டத்தில், பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஆடினர். விடிய விடிய நடந்த விருந்தில் அறுபது உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மறுநாள் பிற்பகல் மணமகளின் பெற்றோர்களில் தொடங்கி அத்தைகள், சித்தப்பாக்கள், நண்பர்கள் ஆகியோருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. பின் விருந்து நடைபெற்றது.

காலையில் மணமகளின் வீட்டில் மருதாணி இடும் 'மெஹந்தி' சடங்கு நடைபெற்றது. மணமகளும் அவளுடைய பெண் விருந்தினர்களும் நன்னிமித்தத்தின் அடையாளமாகவும், அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பதற் காகவும் மருதாணி இட்டுக் கொண்டனர். பிறகு இசைக் கச்சேரி நடந்தது. தொடர்ந்து ஆரவல்லி மலைத் தொடர்களால் சூழப்பட்ட, நீரூற்றுகள் நிறைந்த வித்யாதர் தோட்டத்தில் விருந்து நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி அழகான நீல நிறப்பாவாடை அணிந்து சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ராணியைப் போல மணமகள் அமர்ந்திருக்க அவளைச் சுற்றிச் சுற்றிப் பெண்கள் ஆடிப் பாடிக் கொண்டு இருந்தனர்.

மறுநாள் 'மில்னி' என்ற சடங்குக்குப் பிறகு மாலை மாற்றல் நடந்தது. மணமகள் ஜரிகை மின்னும் ஆடைகளுடன் வைரநகைகள் அணிந்து கொண்டும், மணமகன் 'ராஜ தலைப்பாகை'யுடனும், சான்றோர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டனர். இந்தியப் பாரம்பரியத்தில் இது காந்தர்வ விவாகமாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடந்த விருந்தில் ராஜஸ்தானி உணவுகளான பூரி, கச்சோரி, இனிப்பு, கார வகைகள், மறக்க முடியாத குல்ஃபி முதலியவைகள் பரிமாறப்பட்டன. விருந்தின் போது மணமகனின் குடும்பத்தில் முக்கியமானவர்கள் தனியாக ஒரு மேஜையில் உட்கார வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மரபுமுறைப்படி உணவு ஊட்டப்படுகிறது. மணமகனின் உறவினர்களுக்கு ஆரத்தி எடுத்துத் திலகமிட்டதும் பணமும் ஒரு கவளம் சாதமும் அவர்கள் வாயில் வைக்கப்படுகிறது. பிறகு உணவு உண்ணும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்குப் பிறகுதான் இதர பிரமுகர்கள் சாப்பிடுகிறார்கள்.

##Caption##திருமணம் மணமகள் இல்லத்தில் எளிமையாக நடந்தது. சடங்குகளில் மணமகளின் தாய்மாமன் முக்கியப் பங்கு வகிக்கிறார். மந்திரகோஷம் ஒலிக்க புனித அக்னியை மணமகனுடன் ஏழுமுறை (சப்தபதி) சுற்றிவர மணமகளுக்கு இவர் உதவியாக இருக்கிறார். தன் மகளைக் கொடுத்து விட்டார் என்பதற்கு அடையாளமாக மகளை அவரது மாமனாரின் மடியில் உட்கார வைக்க வேண்டும். இந்தப் பழக்கம் குழந்தைத் திருமண காலத்தில் இருந்தது. அதன்படி மருமகளை மாமனார் தன் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகிறார் என்பது அர்த்தமாகிறது. இறுதியில் மணமகள் அழகான ஆடைகள் அணிந்து கொண்டு, வீட்டில் உள்ளவர்கள் கண்ணீர் சிந்த, தன் புதிய வீட்டுக்குப் புறப்படுகிறாள்.

நீங்கள் திருமணத்திற்காக ராஜஸ்தானத்திற்கு அழைக்கப்பட்டால் தவற விடாதீர்கள். அது நிச்சயம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய அற்புதமான ஓர் அனுபவமாக இருக்கும்.

***


என் தந்தை சொக்கலிங்கம்

எனது தந்தை விஸ்வநாதபுரி நாகப்பன் சொக்கலிங்கம் (செல்லமாக வி.நா.சொ. என்று அழைக்கப்படுவார்) மூளையில் ஏற்பட்ட இரத்தப் பெருக்கினால் 1999ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி காலமானார். ஜவுளி நகரமான கரூரின் அருகே உள்ள விஸ்வநாதபுரி கிராமத்தில், ஒரு நிலச்சுவான்தாரின் மகனாக 1931ல் பிறந்தவர். கரூரில் ஒரு முக்கியத் தொழிலதிபர். நான் ஒரு காஷ்மீரி. விஸ்வநாதபுரியில் பிறந்த அவர் எனக்கு எப்படித் தந்தையாக முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.

1975ல் கரூரின் உதவி ஆட்சியாளராகச் சென்றேன். அதற்குச் சிறிது முன்பு எனக்கு பிரியா அறுவை சிகிச்சையில் பிறந்திருந்தாள். எனது 26ம் வயதில் இரண்டுமாத கைக் குழந்தையுடன் கரூர் வந்து சேர்ந்தேன். என்னைப் போலல்லாமல், இளம் பெண் அதிகாரிகள், இத்தகைய கடுமையான பணிகளை ஏற்றுக் கொள்வதற்கு முன்பே ஓராண்டு கால விடுப்பு எடுத்துக் கொண்டு தம் குழந்தையைப் பராமரிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வி.நா. சொ.வின் மனைவியைச் சந்தித்தேன். அவர் பெயர் வைரம். வி.நா.சொ. குடும்பத்தாருடன் என் வீட்டருகில் வசித்து வந்தார். ரோட்டரி சங்கத் தலைவராகவும், கூடைப்பந்துக் கழகச் செயலாளராகவும் இருந்தார். தனது நண்பர் ஸ்ரீவேதாந்தாசாரியுடன் உள்ளூர் கலாசார நிறுவனமான நாரதகான சபாவில் ஈடுபடுத்திப் கொண்டிருந்தார். அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் உற்ற துணையாக இருந்தார். முக்கியமாகக் கரூர் செயின்ட் தெரசா பள்ளியின் வளர்ச்சியில் பெரிதும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். பெல்ஜியம் நாட்டு காந்தீயவாதியும், சேவாபூரின் நிறுவனருமான லியோபுரோவோ என்ற சமூக சேவகருக்கும் தொடர்ந்து உதவிகள் செய்து வந்தார். சிறிய அளவில் பஸ் போக்குவரத்து நடத்தியும் விஸ்வநாதபுரியில் சொந்த நிலத்தில் சாகுபடி செய்தும் வாழ்க்கை நடத்தி வந்தார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், நிலமற்ற ஏழைகளுக்கும் வினியோகித்த பிறகு இவருக்கு மிஞ்சியது 45 ஏக்கர்தான். இதற்காக அவர் வருந்தவில்லை.

விஸ்வநாதபுரி மக்களைத் தன் உறவினர்கள் போல் கருதி, தார்மீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு உதவிகள் செய்து வந்தார். அவர் கிராமத்தின் நாட்டாண்மையும்கூட. அவருடைய முடிவுகள் கிராமத்தார் அனைவரையும் கட்டுப்படுத்தின. அவர் தர்ம சிந்தனை கொண்ட நிலப்பிரபு. பலருக்குத் திருமணம் செய்து வைத்தார். அவர்களுடைய பிள்ளைகள் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்தார். வீடு கட்டிக் கொடுத்தார். நோய், மரணம் ஆகிய காலங்களில் அவர்களுக்கு உதவினார். இவர் சிறுவனாக இருந்த காலத்தில் இவரது தந்தை இறந்ததும் இவர்களுடைய நிலங்களை அரசு எடுத்து மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தது. இதைப் பற்றிக் கவலைப்படாமல் அதே நபர்களுக்கு இவர் உதவி செய்து வந்தார். அச்சமூட்டும் குரல் அவருடையது. அவரது சிரிப்பு இதயத்திலிருந்து வெளிவரும். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார். எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருப்பதை விரும்பினார். நேர்மையானவர். அவரிடம் உதவி கேட்டு வந்தவர்கள் வெறுங்கையோடு திரும்பியதில்லை. பொதுநலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காகவோ வேறு காரியங்களுக்காகவோ அநேகமாக தினமும் என்னைப் பார்க்க வருவார். ஆனால் ஒருபோதும் அவர் அரசு அதிகாரிகளிடம் எந்தச் சலுகையும் கோரியதில்லை.

கரூர் கோட்டம் நூற்றுக்கணக்கான கிராமங்களைக் கொண்டது. இன்று அது மாவட்டத் தலைநகரம். அதன் ஒரு பகுதியான விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டத்துக்குப் போய்விட்டது. மற்றொரு பகுதி மணப்பாறை, திருச்சி மாவட்டத்தில் சேர்ந்து விட்டது. கோட்டத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு வேலைகளை கவனிக்க நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனது சீரற்ற வேலை முறையினால் குழந்தைக்கு முறையாகப் பால் கொடுக்க முடியவில்லை. அதனால் மாவுப்பால் உபரியாகக் கொடுக்க வேண்டியதாயிற்று. குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வந்துவிட்டது. சில மாதகாலம் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. கரூரில் வைத்தியரே இல்லை. குழந்தையின் எடை குறைந்து கொண்டே வந்தது. அந்தக் காலத்தில் வயிற்றுப்போக்கு 40 சதவீதக் குழந்தைமரணத்துக்குக் காரணமாக இருந்தது. வி.நா.சொ.வும். அவரது மனைவியும் மாவுப்பாலுக்குப் பதிலாக பசும்பால்தான் குழந்தைக்குக் கொடுக்க வேண்டுமென்று சொன்னார்கள். அவர்களிடம் ஒரு பசு இருந்தது. தினசரி காலையில் கணவனும் மனைவியும் ஒரு கெண்டியில் பாலுடன் வந்து பாலைப்புகட்டி விட்டுப் போவார்கள். நான், நீண்ட தூரம் திருச்சி மணப்பாறை போன்ற இடங்களுக்குப் போக வேண்டி இருந்தால் குழந்தையை அவர்கள் தங்கள் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். குழந்தையை அவர்களுடைய பேத்தியாகக் கருதி அன்பும் அக்கறையுமாக கவனித்தனர்.

அவர்களுக்கு மூன்று மகன்கள்; பெண் குழந்தை இல்லை. என்னைத் தமது பெண்ணாகவும், பிரியாவைப் பேத்தியாகவும் கருதினர். கடந்த இருபத்து நான்கு வருடங்களாக அப்படித்தான் நடத்தி வருகின்றனர். அவர்கள் வீட்டில் நடைபெறும் திருமணங்கள், கொண்டாட்டங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொண்டு, மகள், பேத்தி ஆகியவர்களுக்கான அன்பளிப்புகளைப் பெற்று வருகிறோம். அவர்களது இன்ப துன்பங்களிலும் பங்கு கொண்டு வந்திருக்கிறோம். நான் கரூரில் இருந்து மாற்றலாகிச் சென்ற பிறகும் 'என் வீட்டில்' தங்குவேன். எனது சொந்தப் பெற்றோர்கள் டெல்லியில் உள்ளனர். வி.நா.சொ.வும் வைரமும் அடிக்கடி எங்களைப் பார்க்கச் சென்னைக்கு வருவார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் கோவில்களுக்கும் ஒன்றாகச் சென்று வந்தோம். எப்போதும் என் பணிகளைப் பார்த்து என்னை உற்சாகப் படுத்துவார். செய்தித்தாள்களில் என்னைப் பற்றிப் பிரசுரமாகி இருந்தால் அதைக் கத்தரித்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுப்பார். கரூரில் எதுவும் பிரச்சனைகள் இருந்தால் உடனே என்னுடைய அலுவலகத்துக்கு விரைந்து வருவார். அமராவதி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயம், சென்னையிலுள்ள அரசுசாரா நிறுவனங்களிலிருந்து வரும் உதவிகளை ஒன்றிணைக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். குளித்தலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கும் பணியில் உதவி செய்தார். கரூரின் மீதான என் அன்பு இதயத்தில் நிரந்தரமாக இருக்குமாறு செய்து விட்டார்.

கரூரில் அவர் ஒரு பெரிய தொழிலதிபர். கடவுள் அவருடைய இழப்புக்கு ஈடுசெய்து அவர் தாராளமாக தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யக்கூடிய அளவுக்குச் செல்வம் வழங்கி விட்டார். தமிழ் நாட்டில் சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் நிறுவிய பிறகு கரூரில் ஒரு தொழிற்பேட்டை உருவானது. அவரது ஆயுள்கால நண்பரும் தொழிலதிபருமான எல்.ஜி.வரதராஜ் (எல்.ஜி.வி. குழு) வழிகாட்டத் தொழிற்பேட்டையில் முதலில் தனது தொழிற்சாலையை அமைத்துக் கொண்டார். இப்போது அவரது நல்லெண்ணத்தாலும், நேர்மையாலும் அங்கு தொழிற்சாலைகள் ஒன்பதாக உயர்ந்து விட்டன. அவரது குமாரர்கள் விஜயகுமாரும், பாஸ்கரும் திறமையாக அவற்றை நிர்வாகம் செய்கிறார்கள். அவரது மூத்த மகன் நாகப்பன் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். கல்வி அறிவாலும் நீதித்துறையில் அவர் பெற்ற நற்பெயராலும் தந்தையின் ஆசியாலும் அவர் விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகலாம்.

பிரியா தனது இருபதாவது வயதில் ஓர் ஓவியராகக் கரூருக்கு அவர்கள் இல்லத்திற்குச் சென்றாள். அவளுக்கு அந்த ஊர் பிடித்திருந்தது. அங்கு எனக்குப் பிடித்தமான இடங்களை கரூர் உதவி ஆட்சியாளர் பங்களா உள்பட நீர்வண்ணச் சித்திரம் தீட்டும்படி அவளுக்கு வி.நா.சொ. ஆர்வமூட்டி இருக்கிறார். அதே காலத்தில் எனது கரூர் பெற்றோர்களையும் நேர்த்தியான சித்திரமாக வரைந்திருக்கிறாள்.

1993ல் நான் இந்து அறநிலையத்துறையின் ஆணையராக இருந்தபோது என் தந்தை வி.நா.சொ. பாலமலை முருகன் கோவில் திருப்பணி சம்பந்தமாக விவாதிக்கும் பொருட்டு என்னைப் பார்க்கச் சென்னைக்கு வந்தார். இந்தப் புராதன ஆலயம் இயற்கை அழகால் சூழப்பட்ட பெளத்ரம் கிராமத்தில் அமைந்துள்ளது. அது பாழடைந்த நிலையில் உள்ளதால் அங்கு பல ஆண்டுகளாகப் பிரார்த்தனை நடைபெறாமலேயே இருந்தது. அண்மையில், நாகப்பன் என்ற பெயருடைய அவருடைய மூதாதையர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்த விஷயம் அவருக்குத் தெரிய வந்தது. இப்போது கடவுள்தான் தன்னை இந்தப் பணியை செய்து முடிக்க விரும்புகிறார் என்று உணர்ந்தவராய், பாலமலை முருகனுக்கு மீண்டும் புகழ் சேர்க்க முனைந்தார். அறநிலையத்துறை ஆணையர் என்ற முறையில் அவரையே திருப்பணிக் குழுவின் தலைவராக இருந்து பணியைத் துவங்கும்படி கேட்டுக் கொண்டேன். பக்கவாத பாதிப்பிலிருந்து குணமாகியிருந்த போதிலும், திருப்பணி வேலைகளை முடித்து, தனது மரணத்துக்கு முன்னரே சுமார் ஐம்பது லட்சம் ரூபாய்க்கான கணக்குகளையும் ஒப்படைத்து விட்டார்.

அவரது இறுதி ஊர்வலத்தில் நகரத்திலிருந்தும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்தனர். அது ஒன்றும் அதிசயமல்ல. அரசியலில் ஈடுபட்டிருந்தால், அவர் மந்திரியாகவோ, கவர்னராகவோ எளிதில் ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் ஒரு சிறுநகர மனிதராகவும், மனித நேயராகவுமே இருந்தார்.

ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com