அறுசுவையுடன் மணக்க மணக்கச் சமைப்பாள் கல்யாணி. கணவன் மகாதேவனை அல்சர் ஆட்கொண்டவுடன் உப்பு காரம் கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது என்ற மருத்துவர் கட்டளைப்படி சமையல் பண்ணும் ரூட்டை மாற்றிக் கொண்டாள்.
மகாதேவனுக்கு மனைவியைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. தனக்காகத் தயாரிக்கும் பத்தியச் சாப்பாட்டைத் தனக்கும் சேர்த்துச் செய்து பல்லைக் கடித்துக் கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து மனம் வேதனையடைந்தது. உயர் பதவியில் இருந்த மகன் மகேஷ் பாதி நாட்கள் வெளியே சாப்பிட்டு விட்டு வந்து விடுவான். கல்யாணி சமையல் பண்ண அதிகம் சிரமப்படவில்லை.
##Caption##மகேஷ் திருமணம் செய்துகொண்ட ஒரே வாரத்தில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி. மருமகள் நர்மதா எல்லாவற்றிலும் கை தேர்ந்தவள். மாமனாருக்குப் பக்குவமாகப் பத்திய சாப்பாடும் மற்றவர்களுக்குக் கார சாரமான ருசிமிக்க உணவுகளுமாகச் செய்துபோட்டு அசத்தினாள்.
பத்தியச் சாப்பாட்டை இத்தனை நாளும் சாப்பிட்டு நாக்குச் செத்துப்போன கல்யாணி விதவிதமாகச் செய்யச் சொல்லி அனுபவித்து உண்டாள். நர்மதாவும் சளைக்காமல் கேட்டவற்றை எல்லாம் இன்முகத்துடன் பண்ணிப் போட்டாள். சந்தோஷத்தில் கல்யாணி இரண்டு மடங்கு பெருத்து விட்டாள். கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்ததால் மகாதேவனுக்கு விரைவில் அல்சர் நோய் அகன்றது. சந்தேகமில்லை. நாட்டுப் பெண்ணின் கைராசிதான். ஒரு ஜோடி புதிய தினுசு தங்கவளையல் பண்ணிப் போட்டு அகமகிழ்ந்தாள்.
ஒருநாள் திடீரென்று 'அப்பா! எனக்கு சிலிகான்வேலிக்கு மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டும்' என்று மனைவியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய்விட்டான் மகேஷ்.
'அடடா! ஏன் இப்படி மூச்சுத் திணற ஓடி வரே, நிதானமா வரக்கூடாதா?' என்று கேட்ட கணவனின் பக்கத்தில் புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தவாறு அமர்ந்தாள் கல்யாணி. சற்று இளப்பாறிவிட்டு 'என்னவோ களைப்பா இருக்கு. தலை சுற்றுகிறது. அடிக்கடி வேர்க்கிறது' என்றாள்.
'நர்மதா போனபிறகு வீட்டுவேலையெல்லாம் தனியாவே ஓடியாடி செய்யறதுதான் சிரமமா இருக்கு. கவலைப்படாதே' என்று தேற்றினார் மகாதேவன்.
அடுத்த வாரம் மருத்துவரை அணுகிப் பரிசோதனை பண்ணிப் பார்த்தார்கள். 'உங்கள் மனைவிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி. உடல் பெருத்துவிட்டது, உடற்பயிற்சி செய்ய வேண்டும். கண்டபடி சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்' என்று டாக்டர் கூறினார். கல்யாணி மகதேவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
துலஸா, நியூ ஜெர்ஸி |