மாயக்கிணறு
குழந்தைகளே, இந்தக் கதையைக் கேளுங்கள். ஒரு கிராமத்தில் ராமு, சோமு என்ற இரண்டு சோம்பேறி இளைஞர்கள் வசித்து வந்தனர். ஆனால், அவர்கள் மற்றவர்களுக்கு உதவக் கூடியவர்கள். ஒரு முறை அவர்கள் ஒரு தென்னந்தோப்பின் வழியாக நடந்து கொண்டிருந்தனர். குலை குலையாக மரத்தில் நிறைய இளநீர் காய்த்திருந்தது. இருவருக்கும் இளநீர் குடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் சோம்பேறித்தனத்துடன் பேசாமல் நின்று கொண்டிருந்தனர். காவல்காரன் அங்கே இல்லை. அதனால் ஒருவன் மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறித்துப் போடுவது என்றும் மற்றவன் அதனைப் பொறுக்கி சாக்கு மூட்டையில் கட்டுவது என்றும் முடிவு செய்தனர்.
ராமு மரத்தில் ஏறி தேங்காயை அரிவாளால் வெட்டிக் கீழே போட, சோமு ஒவ்வொன்றாகப் பொறுக்கி மூட்டை கட்ட ஆரம்பித்தான். அப்போது காவல்காரன் அங்கே வந்தான். இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தவன், நேரே கிராம அதிகாரியிடம் அழைத்துச் சென்றான்.
அந்தக் கிராமத்தில் ஒரு மாயக்கிணறு இருந்தது. நீதி விசாரணை எப்போதுமே அதன் மீதுதான் நடக்கும். யாராவது பொய் சொன்னால் அந்தக் கிணற்றின் மூடி தானாகவே திறந்து அவர்களை விழுங்கிவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே வெகு காலமாக இருந்தது. ராமுவும் சோமுவும் அந்தக் கிணற்றின் மீது நிறுத்தி வைக்கப்பட்டனர். விசாரணை தொடங்கியது. நீதிபதி குற்றங்களை விசாரித்தார். ராமு 'அய்யா, நான் அந்தத் தேங்காய்களைக் கையால் கூடத் தொடவில்லை. மூட்டை கட்டவும் இல்லை. இது நிச்சயமான உண்மை!' என்றான். சோமுவோ, 'அய்யா, நான் அந்த மரத்தைத் தொட்டது கூடக் கிடையாது. மரத்தில் ஏறவும் இல்லை, காய்களைப் பறிக்கவும் இல்லை, இது உண்மை' என்றான்.
கிணற்றின் மூடி திறந்து கொண்டு விடும். அவர்கள் இருவரும் இறப்பது நிச்சயம் என பலரும் நினைத்தனர். ஆனால் கிணற்றின் மூடி திறக்கவே இல்லை. யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. இறுதியில் அவர்கள் குற்றம் நிரூபிக்கப்படாததால் நீதிபதியும் விடுவித்து விட்டார்.
அவர்கள் விடுதலை ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு வெட்கி, இனிமேல் உழைத்துப் பிழைப்பது என்று முடிவு செய்தனர். அதுமுதல் உண்மையாக உழைத்து வாழ ஆரம்பித்தனர். அது சரி, தேங்காய்களைப் பறித்து விட்டு இல்லை என்று பொய் சொன்ன அவர்களுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை என்று யோசித்தீர்களா?
காரணம் இதுதான். மரத்தில் ஏறிய ராமு தேங்காய்களைக் கையால் தொடவில்லை. அரிவாளால் வெட்டித்தான் கீழே போட்டான். அவன் அதை மூட்டை கட்டவும் இல்லை. அவன் செய்கைப்படி அவன் கூற்று உண்மை தான். அதுபோல சோமு, கீழே விழுந்த தேங்காய்களை மூட்டை கட்டினானே தவிர மரத்தில் ஏறவுமில்லை, காய்களைப் பறிக்கவுமில்லை. அவன் கூறியதும் உண்மைதான் என்பதால் மாயக்கிணறு அவனையும் தண்டிக்கவில்லை. அவர்கள் இருவரும் தங்கள் புத்திசாலித்தனத்தால் தண்டனையிலிருந்து தப்பினார்கள்.
அடுத்த மாதம் வேறொரு கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்.
சுப்புத்தாத்தா |