அறிஞர் பி.எல்.சாமி பகுதி - 1
சங்கப் புலவர்கள் சிறந்த இயற்கை ஆராய்ச்சியாளர்கள். சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிவியலைத் துறைதோறும் துறைதோறும் பகுத்துணர்ந்தவர்கள். விலங்கியல், தாவரவியல் அறிவுகள் தமிழ்நூல்களின் காலத்தை அறிய உதவும். தமிழ் இலக்கியத்தில் விளங்காத புதிர்களை, ஐயத்துக்கிடமான செய்திகளைத் தெளிவுபடுத்த முடியும். மனித வாழ்க்கை நெறிமுறைகளை இயற்கை சார்ந்த அம்சங்களுடன் தொடர்புபடுத்த முடியும். தமிழிலக்கியத்தை அறிவியலாகவும் வரலாறாகவும் எழுத முடியும்.

இலக்கியத்தையும் அறிவியலையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்யும் புதுப்போக்கை உருவாக்க முடியும். சமகால வளர்ந்துவரும் அறிவியல் துறைகளுடன் இலக்கியத்தை இணைக்க முடியும். இது போன்ற பண்புகளை ஆய்வுலகில் வெளிப்படுத்தியவர் அறிஞர் பி.எல்.சாமி.

சாமியின் முன்னோர்கள் சிவகங்கைச் சீமையைத் சேர்ந்தவர்கள். இவர்கள் கிறிஸ்தவப் பின்புலத்தில் வளர்ந்தவர்கள். திருச்சபைச் சரித்திரத்தை தமிழில் எழுதிய கோவைப்புலவர் பெரியநாயகம் இவரது தந்தையார். இவரது தாயார் மரிய மதலேன். இவர்களுக்கு எட்டு ஆண் மக்களும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்தனர். பி.எல். சாமி அக்டோபர் 02, 1925 அன்று எட்டவாது பிள்ளையாகப் பிறந்தார். இயற்பெயர் பி.லூதர்சாமி.

##Caption##பி.எல்.சாமி கடலூர் மஞ்சக்குப்பத்தில் தூய வளனார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துப் பின்னர் தனது கல்லூரிப் படிப்பைத் திருச்சி தூய வளனார் கல்லூரியில் மேற்கொண்டார். அங்கு தாவரவியலில் இளமறிவியல் (பி.எஸ்ஸி.) பட்டம் பெற்றார். அங்கு சிலகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் புதுச்சேரி சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார். புதுச்சேரி சுதந்திரம் பெற்றவுடன் இவர் வில்லியனூரில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியில் சேர்ந்தார்.

அரசுப் பணியில் இருக்கும் போதே இந்திய ஆட்சிப் பணித்தேர்வை எழுதினார். படிப்படியாக பல்வேறு உயர்பதவிகள் வகித்து அரசுப் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். இருப்பினும் இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிவியல் களஞ்சியம் உருவாக்கும் பணியில் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். தம் வாழ்நாளின் இறுதிவரை தமிழ் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். தமது 73வது வயதில் (அக். 2, 1995) இயற்கை எய்தினார்.

பி.எல்.சாமி அறிவியல் கண்ணோட்டம் மிக்கவராக வளர்ந்தார். கா.அப்பாத்துரை இவரை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளர் சுப்பையா பிள்ளை என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர் சாமி செந்தமிழ்ச் செல்வியில் சங்க இலக்கியங்கள் குறித்து அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். இக்கட்டுரைகள் மாறுபட்ட சிந்தனையால் படைக்கப்பட்டன. இவை பரவலாக அனைவராலும் பேசப்பட்டன. பாராட்டுப் பெற்றன. செந்தமிழ்ச் செல்வி பி.எல்.சாமியின் வித்தியாசமான பார்வையை அடையாளப்படுத்தியது. தொடர்ந்து கட்டுரைகள் வெளிவந்தன. இவை யாவும் தொகுக்கப்பட்டு 1967 தொடங்கி 2002 வரையிலான காலப்பகுதியில் சுமார் 18 நூல்களாக வெளிவந்துள்ளன. அவை:

சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்
சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்
தாய்த்தெய்வ வழிபாடு
சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்
சங்க இலக்கியத்தில் மீன்கள்
சங்க நூல்களில் மணிகள்
இலக்கியத்தில் அறிவியல்
சங்க நூல்களில் விந்தைப் பூச்சி
சங்க இலக்கியத்தில் அறிவியற்கலை
இலக்கிய ஆய்வு
தமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாடு
தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம்
சங்க நூல்களில் முருகன்
சங்க இலக்கியத்தல் செடி கொடிகள்
சங்க நூல்களில் மரங்கள்
சங்க நூல்களில் உயிரினங்கள்
அறிஞர் சாமியின் ஆய்வுக்கட்டுரைகள்

##Caption##சங்க இலக்கியம் குறித்த ஆய்வில் சாமியின் எழுத்துக்கும் ஆய்வுக்கும் தனியான இடமுண்டு. குறிப்பாக, தொல்காப்பியர் சுட்டியுள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனும் ஐந்நிலப்பிரிவுகள் சூழலை ஒட்டியே அமைந்துள்ளன. இதற்கு உரையாசிரியர் தரும் விளக்கம் மனித இனத்தின் வெற்றிகரமான வாழ்க்கைக்குச் சூழல் எவ்வாறு உதவுகிறது என்பதைச் சுட்டுகிறது. ஆகவே சங்க இலக்கியமும் இயற்கை, சமூகம், மனிதர் என்ற முப்பரிமாணங்களின் கூட்டுறவாகவே அமைந்துள்ளது. நுட்பமாகச் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்ற விடயங்களை ஆய்வுப்பூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார் சாமி.

அதாவது இன்று சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பற்றிய விழிப்புணர்வு மேற் கிளம்பியுள்ளது. தமிழக கானுயிர்ச் செல்வத்தின் முக்கியப் பரிமாணம் பல்வகையான உயிரினங்கள்தாம் என்ற புரிதல் வலுப்பெற்று வருகின்றது. பல்லுயிரியம் என்னும் கல்வி பற்றிய தேடலும் சிந்தனையும் முகிழ்த்து வருகின்றன. மரங்கள், செடி கொடிகள், பாலூட்டிகள், புள்ளினங்கள், ஊர்வன நீர்வாழ்வன, நண்டு போன்ற நீர்-நில வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற உயிரினங்கள் பல்வேறு உயிரினங்கள் அனைத்தும் இந்தப் பல்லுயிரியத்தில் அடங்குகின்றன என்பார் சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.

இத்தகு பல்லுயிரியத்தைத்தான் சங்க இலக்கியப் பரப்பில் தேடி ஆய்வு நோக்கில் வெளிப்படுத்தி இருக்கின்றார் பி.எல்.சாமி. இதன்மூலம் எம்மிடையே எத்தகு பாரம்பரியங்கள், உயிரினங்கள் இருந்துள்ளன? அவற்றின் இன்றைய நிலை என்ன? எவை எவை அழிந்து வருகின்றன போன்றவை குறித்து நாம் சிந்திப்பதற்கான அவசியப்பாட்டை வலியுறுத்துகின்றார் சாமி.

தொடரும்

தெ.மதுசூதனன்

© TamilOnline.com