டாக்டர் சி.சந்திரமௌலி
மே 19, 9008 மாலை சாரடோ காவின் ஹக்கோனே கார்டன்ஸ் பகுதியில் தமிழ் நாடு அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் வந்திருந்தனர். பாரூக்கி, வேல்முருகன் (தொழில்துறை), டாக்டர் C.சந்திரமௌலி (செயலர், தொழில்நுணுக்கத் துறை) ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தவிர, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் பல முக்கிய நகரங்களில் வாழும் தமிழ் மக்களையும் சந்தித்து உரையாடினர். டாக்டர் சந்திரமௌலியின் உரையிலிருந்து சில கருத்துக்கள்:

யூனிகோட் தமிழ் குறித்து...

தமிழ்நெட் 99 என்ற கருத்தரங்கை 1999-இல் நடத்தினோம். அதன் விளைவாக TAB, TAM தமிழ்க் குறியாக்கங்கள் (endcoding) உருவாயின. இன்றைய ஒருங்குறி (யூனிகோட்) முறையில் தமிழுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், தெ என்று எழுத வேண்டுமென்றால் ஦, த என்று இரண்டு எழுத்துகளாக அது கணக்கிடப்படுகின்றது.

சந்திரமெளலி என்பதில் உள்ள மெள என்பதைக் குறிக்க மூன்று எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் கணினித் தமிழ் உபயோகம் அதிகரிக்கையில் சேமித்தல் (storing), வரிசைப்படுத்தல் (sorting), தேடல் (search) ஆகிய ஒவ்வொரு விஷயத் திலும் இது செயல்பாட்டை பாதிக்கும். ஒரு தகவலைச் சேமிக்க, வழக்குமுறைத் தமிழ் எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்திடங்களை (charater space) உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது. பிறகு சேமிக்கப்பட்ட எழுத்தைத் தேட வேண்டு மென்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேட வேண்டும். தேடல் algorithm-களை எழுதுகையிலும் இது பயன்பாட்டு வேகத்தை பாதிக்கிறது. (மெ என்று படித்து விட்டு அது ஒரு எழுத்து என்று முடிவு செய்து விட முடியாது. மூன்றாவதாக ள இருந்து மெள என்று இருக்கலாம். அல்லது துணைக்கால் இருந்த மொ என்று ஆகலாம்) ஆக சேமித்தல், வரிசைப்படுத்தல், தேடல் என்று முக்கிய கணிணிப் பயன்பாட்டு அம்சங்கள் அனைத் தின் செயல்பாடு, வேகம் ஆகிய வற்றை பாதிப் பதாக இது இருக்கிறது. மறா஡க ஒரு எழுத்தை ஒரே எழுத்திடத்தில் குறிக்க முடியுமென்றால் அது 20லிருந்து 25 சதவீதம் வரை கணினிச் செயல்பாட்டை அதிகரிக்கிறது

இதை யூனிகோட் கன்சார்ட்டியம் முன் வைத்தோம். யூனிகோட் அமைப்பில் இதனை ஆராய ஒரு துணைக் குழு உள்ளது. இதன் உறுப்பினர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். இப்போதுள்ள 8 பிட் அமைப்பு 16 பிட் அமைப்பாகப் போவதால் இந்த பிரச்சினை களைத் தீர்க்க இயலும் என்று ஆய்ந்து கண்ட முடிவுகளை வைத்து, 16 பிட் கொண்ட all-character encoding முறையைப் பரிந்துரை செய்துள்ளோம். கல்வியாளர்கள், பதிப்பாளர் கள், மின்-அரசு (e-government) போன்ற அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. நாங்கள் சுட்டிக்காட்டிய பிரச்சனைகளையும், எங்கள் பரிந்துரைகளை யும் அவர்கள் யூனிகோட் கூட்டமைப்பின் முன்வைத்து இதற்கு ஒரு தீர்வைக் காண விருக்கிறார்கள். ஓர் எழுத்துக்கு ஒரு குறிப்புள்ளி (code-point) என்று கொண்டால், தமிழுக்கான தற்போதையை யூனிகோட் அமைப்பில் எழுத்திடங்கள் போதுமான அளவு இல்லை. இதற்கும் நாங்கள் உப யோகத்தில் இல்லாத சில இடங்களைக் கண்டறிந்து சொல்லியுள்ளோம். தொடர்ச்சி யான இடங்கள் இல்லையென்றாலும் கூட மொத்தமாக (block) கேரக்டர் ஸ்பேஸ்களை வழங்கக் கேட்டுக் கொண்டுள்ளோம். தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட மற்ற நாடு களையும் இந்த முயற்சியில் இணைத்து, ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்கி, இந்த முயற்சிகளை இன்னமும் தீவிரமாக்க வுள்ளோம்.

செயல்முறைச் சிக்கல்கள் என்னென்ன?

இதனைச் செயலாக்குவதிலும் சிக்கல்கள் உள்ளன. 8 பிட் முறையில் ஏற்கனவே பல தளங்கள் இயங்கி வருகின்றன. ஒரு புதிய முறையைத் திடீரெனப் புகுத்திவிட முடியாது. இதிலிருந்து 16 பிட் ஒருங்குறி முறைக்கு மாறச் சரியான மாற்றுப்பாதை அவசியமாகும்.

சீனாவுக்கு இது போன்ற all-character encoding முறையில் பல்லாயிரக் கணக்கான எழுத்திடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதைப்பற்றி நாங்கள் பேசுவதில்லை. இன்றைய தமிழ் யூனிகோட் முறையில் உள்ள குறைகளை நீக்கிக் கணினித் தமிழ்ச் செயல் வேகத்தை அதிகரிக்க நாங்கள் சில பரிந்துரைகளைச் சொல்கிறோம். ஆனால் ஒரே அடிப்படையில் ஒரே விதத்தில் அனைத்துக் கணினிப் பயனாளர்களும் கணினித் தமிழ் பயன்படுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், இது கணினியில் தமிழ் வருவதற்கே ஒரு பெரும் முட்டுக் கட்டையாகிவிடும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்யலாம்?

தமிழகத்துக்கு விடுமுறைக்கோ, டிசம்பர் சீசனுக்கோ வரும்போது தங்கள் தொழில்நுட்ப அறிவுத் திறன், அனுபவம் ஆகியவற்றின் மூலம் பங்களிக்கலாம். சென்னை ஆன் லைன் (www.chennaionline.com ) அல்லது வேறு ஒரு தளம் இதற்காக ஒரு வலைப்பக்கம் அமைத்துத் தரலாம். அதன் மூலம் இவ்வாறு வரும் மக்கள் எப்போது வருகிறார்கள் என்ன பங்களிக்க இயலும் என்பதை முன்கூட்டியே ஒரே தளத்தில் அறிவிக்கலாம். ஆலோசனை களைப் பரிமாறவும் வழி செய்ய முடியும். இதில் அரசு நேரடியாக ஈடுபடாது. ஆனால் இந்த முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவு உண்டு. தன்னார்வலர்கள் இணைந்து இதனை முன்னடத்த வேண்டும். எங்களுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கணினித் தமிழ் செயல்பாடு ஏன் எளிதாக இருக்க வேண்டும்?

எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழ் இருந்தால்தான் கணினித்தமிழ் வளரும். கணினித் தமிழ் வளர்ந்தால்தான் சாதாரண மக்களும் கணினியைப் பயன்படுத்துவது அதிகரிக்கும். 5400 கணினி கியாஸ்க்குகள் அமைக்கவுள்ளோம். மூன்று கிராமத்துக்கு ஒரு கணினி கியாஸ்க் வரவிருக்கிறது. அவர் களறியாத ஒரு மொழியில் இருந்தால் கிராமத்து மக்கள் இதனைப் பயன்படுத்தவே மாட்டார்கள். டிரெயின், பஸ் டிக்கெட் ஆகியவை கூட இன்று கணினி மயமாக்கப் பட்டுள்ளது. அரவிந்த் கண் மருத்துவமனை முன்பரிசோதனை, அறுவைசிகிச்சைக்குப் பிற்பட்ட சோதனை ஆகியவற்றை ஒரு கிராம மருத்துவ உதவியாளர், வலைக் கேமிரா, தொலைதூர மருத்துவர் ஆகியோரை வைத்துக் கொண்டு கிராமங்களில் நடத்தி வருகிறது.

இந்தியா முழுவதிலும் 100,000 இண்டர்நெட் கியாஸ்க்குகள் அமைக்கப்படவுள்ளன. இந்தத் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு சாதாரண மக்களால் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படப் போவதைப் பொறுத்து கிராமங்களில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியே ஏற்படுத்தும். இன்று ஒரு கிராமத்தவர் பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டுமென்றால் தாலுகா ஆபீஸ் போக வேண்டும். அதில் நேரச்செலவு, பணச்செலவு என்று பல விரயங்கள் உள்ளன. இதில் பல விஷயங்களைத் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக்கி விரயங்களைத் தவிர்க்க இயலும். ஒரு நிலம் வாங்க வேண்டுமென்றால் பட்டா, சிட்டா, அடங்கல் என்று அனைத்து விஷயங்களையும் இன்று கணினி மூலம் பெற முடியும். எந்த ஊரில் சொத்து வாங்க வேண்டும் என்றாலும், அதில் வில்லங்கம் இருக்கிறதா இல்லையா என்று கணினி மூலம் அறிந்து கொண்டு விடமுடியும். தகவல் பாதுகாப்பு. பிரைவசி என்று வருகையில், இத்தகைய தகவல்களைப் பெற பல வடிகட்டிகளை அமைத்திருக்கிறோம். எனவே குறிப்பிட்ட தகவல்கள் இன்றி, யார் வேண்டு மானால் எல்லா விஷயங்களையும் பெற்று விட முடியாது.

கிராமவாசி கணினியைப் பயன்படுத்துவாரா?

நியாயமான கேள்வி. ஒரு விவசாயி தன் ஒரு கையால் மாடு ஓட்டிக்கொண்டு போகும்போது அவரது மற்றொரு கையில் இருப்பது செல்போன். அதாவது, தொழில்நுட்பம் உபயோகப்படுத்தும் வகையில் இருந்தால் போதும், மக்களிடையே விரைவாகப் பரவிவிடும். ஆனால், சாதாரண மக்களை அடையும் வகையில் எளிதாக இருக்க வேண்டியது அவசியம். இந்த அடிப்படையில் கணினித்தமிழ் சீர்திருத்தமும் வளர்ச்சியும் அதற்கு உலகத் தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பும் மிக அவசியமான ஒன்றாகும்.

சுந்தரேஷ், பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com