புதினாப் பொடி
தேவையான பொருள்கள்
புதினாத் தழை - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 6 அல்லது 8
உளுத்தம் பருப்பு - 1/4 கிண்ணம்
கடலைப் பருப்பு - 1/4 கிண்ணம்
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
புளி - 1/2 எலுமிச்சையளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை
புதினாவை நன்கு அலசி ஈரம் போக சிறிது காயவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். புளியையும் சிறிது எண்ணெய் விட்டுப் பிரட்டவும்.

புதினாவை வெறும் வாணலியில் போட்டு ஈரம் சுண்டப் பிரட்டி எடுத்து பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், உப்பு இவற்றை மிக்சியில் போட்டுச் சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். புதினா இலையைத் தனியாக அரைத்து எல்லாவற்றையும் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றவும். பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

இது மிகவும் சுவையான பொடி. தொட்டுக் கொள்ளலாம். பிசைந்தும் சாப்பிடலாம். உடம்புக்கு நல்லது.

மேற்சொன்ன முறையிலேயே கறிவேப்பிலைப் பொடி, கொத்துமல்லிப் பொடி ஆகியவற்றையும் செய்யலாம். பாட்டிலில் எடுத்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். இவையெல்லாம் உடம்புக்கு மிகவும் நல்ல பொடிகள்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com