2006 ஏப்ரல் 4, 5, 6 தேதிகளில் சிகாகோ நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் இலினாய் பல்கலைக்கழகத்தின் நடத்த ஆசிய-அமெரிக்கப் பாரம்பரிய மாநாட்டில் பங்குகொள்ள முக்கிய விருந்தினர்களாக விமலா வாசுதேவராவ், லீலா நரேந்திரன் ஆகிய இருவரும் வந்திருந்தனர். சென்னையில் நூற்று முப்பத்தேழு ஆண்டுகளாகப் பெண்கல்வியில் முன்னோடியாக இருந்துவரும் லேடி சிவசாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் சார்பாக வந்திருந்த இவர்கள் அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள்.
விமலா இந்தியாவில் வளர்ந்துவரும் கல்வி அறிவினால் பெண்கள் மிகவும் முன்னேறி இருப்பதைப்பற்றிப் பெருமைபடப் பேசினார். வேத காலத்தில் கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் கல்வி அறிவில் எவ்வாறு முன்னேற்றம் அடைந்திருந்தனர், பிறகு அந்நியர் படையெடுப்பால் பெண்கல்வி எங்ஙனம் பின்னுக்குத் தள்ளப்பட்டது, சுதந்திர இந்தியாவில் பெண்கள் எப்படி படிப்படியாகக் கல்வியில் முன்னேறி வருகிறார்கள் என்பவற்றைப்பற்றிப் பேசினார். இந்தியாவில் இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் பரிமளிக்கின்றனர். உலக அளவிலான ரமான் மெக்ஸஸே விருதுகளையும் பெற்றுள்ளார்கள். இந்த விவரங்களை லீலா Power Point மூலம் நேர்த்தியாகக் காண்பித்தார். முன்னாள் தலைமை ஆசிரியை சி.ஆர். சத்யபாமா அவர்கள் இப்பள்ளியின் ஆரம்ப நாட்களைப் பற்றிச் சொன்ன விவரங்கள் ஒலிபரப்பப்பட்டன.
இதைப் பார்த்து வியந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் பள்ளிக்குத் தங்களால் ஆன உதவி செய்வதாகக் கூறினர். ஏப்ரல் 6-ம் தேதி காலை விமலா மீண்டும் பல்கலைக்கழகத்தினரால் பேச அழைக்கப்பட்டார். அன்று அவர் 'உலகப் போட்டியில் இந்தியக் கல்வியமைப்பின் முக்கியப் பங்கு' (Indian Education System-Key to Global Competitiveness) என்பதைப்பற்றி உரையாற்றினார். ஆய்வுபூர்வமான அவருடைய உரையில் தாய்நாட்டுப் பற்றும் ஒலிக்கத் தவறவில்லை. அறையில் பேராசிரியர் முதல் மாணவர்கள் வரை கூட்டம் நிரம்பி இருந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் விமலாவுக்குச் 'சிறந்த சேவை விருது' கொடுக்கப்பட்டது. இந்தப் பெருமை அதிகமாகக் கொடுக்கப்பட்டதில்லை. விருது அளித்த பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு விமலா நன்றி கூறினார். |