மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: 'காயமே இது பொய்யடா'
மிச்சிகன் தமிழ்ச் சங்கத் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது முனைவர் வெங்கடேசன் அவர்கள் குழுவினர் அளித்த முழுநீள நகைச்சுவை நாடகம் 'காயமே இது பொய்யடா'. எண்பதுகளில் தொடங்கி இன்றுவரை ஆண்டுதோறும் படைப்புகளை வழங்கிவரும் வெங்கடேசன் அவர்களுக்கு இந்த நாடகம் வெள்ளிவிழாப் படைப்பு.

நாயகன் மாது பொய்களைக் கணக்கின்றி அவிழ்த்துவிடும் ரகம். அவனது மனைவி ஜானகியின் அண்ணன் ராமனுஜம் நாற்பத்தைந்து வயதைத் தாண்டியும் கல்யாணம் ஆகாத, பெண்களைப் பார்த்தால் அசடுவழிகிற ரகம்.

மாது கல்யாணத்திற்கு முன் டெல்லியில் மைதிலி என்ற பெண்ணைக் காதலித்துக் கைவிட்டு விடுகிறான். ஆனாலும் மாதுவையே மணக்க விரும்புகிறாள் மைதிலி. தன் தங்கையை ஏமாற்றிய மாதுவைக் கொல்வதே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று துப்பாக்கியும் கையுமாகத் திரிகிறான் மைதிலியின் மிலிட்டரி அண்ணன். இவர்களுக்கு இடையே மாது வேலை பார்க்கும் கம்பெனியிலேயே பணிபுரியும் அவனது அருமை நண்பன் சீனு.

டெல்லியில் இருந்து மைதிலி மாதுவின் கம்பெனிக்கே ஆடிட்டராக வருகிறாள். கூடவே வரும் அவளது அண்ணனின் துப்பாக்கிக்கு பயந்து மாது சொல்லும் பொய்களால், சீனுபெண் வேடம் போட்டுக் கொண்டு குஜராத்தி மனைவி குஷ்மாதேவியாக மாறுகிறான்! உண்மை மனைவி ஜானகி தன் கணவனுக்கே தங்கையாய் நடிக்க வேண்டிய நிர்பந்தம். இதற்கிடையில் ராமானுஜம் குஷ்மாதேவியாக மாறிய குஷ்மாதேவியைப் பார்த்து வழிய,
மைதிலியின் மிலிட்டரி அண்ணனோ கல்யாணம் ஆகியும் கன்னிப் பெண்ணாய் நடிக்கும் ஜானகியை விரும்புகிறான். கலாட்டா விருந்து படைக்க இத்தனை குழப்பங்கள் போதாதா!

மாதுவாக வரும் நிரஞ்சன் ராவின் நகைச்சுவை டைமிங் வியக்க வைக்கிறது. சீனுவாக வந்து குஷ்மாதேவியாக ஸ்த்ரீ பார்ட்டிற்குத் தாவும் சதீஷ் சுப்ரமணியத்தின் நடிப்பும் அபாரம். ராமானுஜம் (வெங்கடேசன்), மைதிலி (ரேவதி மூர்த்தி), ஜானகி (விஜி முகுந்த்), மேனேஜர் (ஹரிஹரன் ராமசாமி), மைதிலியின் அண்ணன் (சக்கரவர்த்தி தேசிகன்) ஆகியோருக்கும் பாத்திரப் பொருத்தம் பிரமாதம். நாயர், டெட்பாடி மணவாளன், சென்னை
தமிழ் பேசும் நபர் (ரங்கராஜன்), கோவிந்தசாமியாக சிகே போன்ற துணைப் பாத்திரங்களில் நடித்தவர்களும் சோடை போகவில்லை.

நாடகத்தின் பின்னணி இசை, காட்சி அமைப்புகள், ஒப்பனை, உடை அலங்காரம் எல்லாமே உயர்தரம். அவ்வப்போது ஒலிவாங்கி மட்டும் சுணங்கியது. கிரேசி மோகனின் 'மீசையானாலும் மனைவி' நினைவுக்கு வந்ததும் உண்மை.

சந்திரா சந்திரசேகரன்

© TamilOnline.com