செப்டம்பர் 2006: வாசகர் கடிதம்
தென்றலே வாராயோ, இன்பசுகம் தாராயோ..

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மகன் வீட்டிற்கு மனைவியுடன் வரச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்கு முன்பு மாணவனாகவும், பணி ஓய்வுக்குப் பிறகும் பலமுறை வந்ததுண்டு. இம்முறை அமெரிக்க மண்ணில் தான் இருக்கிறோமா அல்லது தமிழ்நாட்டில் இருக்கிறோமா என்ற மனக்குழப்பம். அந்தளவுக்கு வடஅமெரிக்க தமிழ் 'தென்றல்' ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

நாங்கள் வந்து ஒரு மாதமாகிறது. எங்கள் நேரத்தின் பெரும்பகுதியை தென்றல் பழைய இதழ்கள் ஆக்கிரமித்து விட்டன. பல பகுதிகளைக் கொண்ட தென்றல் உள்ளப்பசிக்கு அறுசுவை விருந்தாக இருப்பதை உணர்கிறோம். தலைப்புகள் பலவும் அகலமாகவும் ஆழமாகவும் ஆராயப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டு ஏடுகளில் கிடைக்காத புதிய தகவல்களை அறிகிறோம். அரசியல் களம் சில நிகழ்வுகளை புதிய கோணத் திலும் பார்வையிலும் விவாதிப்பது எங்கள் சிந்தனையைத் தூண்டுகிறது.

சுருக்கமாக தென்றல் இதழ்கள் படித்தப் பிறகு குப்பைக்கு போகாமல் அமெரிக்கவாழ் தமிழ் இல்லங்களின் லைப்ரரியை அலங்கரிக்க வேண்டு மென்பதே எங்கள் அவா. மற்றும் வருகின்ற தலைமுறையினர்க்கும், பயன்படட்டும். புலமைமிக்க அந்தந்தப் பகுதி ஆசிரியப் பெருமக்களுக்கும், திறமைமிக்க இதழின் வெளி யீட்டார்களுக்கும் எங்கள் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

முனைவர் வி.எஸ். சுப்பிரமணியன்
(முன்னாள் இயக்குநர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை)

மாதக்கடைசியில், தென்றலை நினைத்து ''தென்றலே வாராயோ, இன்பசுகம் தாராயோ..'' என ஏங்கிக் கேட்க, அது அடுத்த மாதம் வந்தவுடன் "தென்றல் அடிக்குது, என்னை மயக்குது.. தேன் மொழியே இந்த வேளையிலே..'' என என்னை பாடத் தூண்டுகிறது!.

ஹெர்கூலிஸ் சுந்தரம்


புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். தென்றலின் சிறப்பை பாராட்டுவது என்பது மிகவும் கடினம். ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல என்றாலும் ஒரு சில திருஷ்டி பரிகாரங்களும் இருக்கின்றன என்பது மறுக்க முடியாது.

'ஜூலை மாத எழுத்தாளர் பகுதியில் தோப்பில் முகமது மீரான் அவர்கள் எழுதிய சிறுகதையின் ஒவ்வொரு வரிகளையும் பலமுறை ரசித்து படித்தேன் என்பது உண்மை. எழுத்தாளர் பகுதியில் மிகச் சிறந்த சிறுகதைகளை வெளியிடும் தென்றல் மற்ற சிறுகதைகள் விஷயத்தை அசிரத்தை காட்டுவது ஏனோ?

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com