ஏப்ரல் 12, 2008 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தின் 'சித்திரை விழா 2008' பிராமிங்கமில் நடைபெற்றது. சங்கத் தலைவர் பாலாஜி சதானந்தம் 'சர்வதாரி' ஆண்டையும், விருந்தினர்களையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து உமா நெல்லையப்பன் சித்திரைக் கனி பற்றி விளக்கம் அளித்ததோடு, பூங்கோதை கோவிந்தாராஜுடன் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார்.
அமெரிக்கா வாழ் இளைய தலைமுறைத் தமிழர் அனைவரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இனிய தெம்மாங்கு ஒன்றைப் பாடினார் ஷோபா டென்சிங். நடனஆசிரியை ஸ்ரீதேவி திருமலை அவர்களின் மாணவிகள் 'தோடய மங்கலத்தில்' தொடங்கித் 'தில்லானா' வரை அற்புதமான பரதநாட்டியத் தொகுப்பு நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார்கள். தொடர்ந்து 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' பாரதியின் பாடலுக்கு ஒரு தமிழ் மீனவராக உணர்ச்சி மிக்க நடனம் ஆடினார் ஸ்ரீலட்சுமி வாசன்.
விழாவின் சிறப்பு அம்சமாக 'சிலப்பதிகாரப் பாடல் முதல் இன்றைய பாடல்வரை' என்ற தொகுப்பை வழங்கினர் பிரபல இசை வல்லுநர் சந்தியா ஸ்ரீதரின் மாணவிகள். இளங்கோவடிகளின் 'வடவரையை மத்தாக்கி' (5ஆம் நூற்றாண்டு), ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யரின் 'அலைபாயுதே கண்ணா' (17ஆம் நூற்றாண்டு), பாபநாசம் சிவனின் 'என்ன தவம் செய்தனை', தற்கால மேரிலாண்டில் டி.என். பாலா அவர்கள் இசையமைத்த 'விளையாட இது நேரமா' போன்றவை அனைவரையும் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தன.
'ஸ்ரீமன் நாராயணா', 'ஜனனி ஜனனி' ஆகிய பாடல்களைக் கீபோர்டில் இதமாக வாசித்தார் விடோபா சதானந்தம். மேலும் திரையிசை நடனம், கோலாட்டம் முதலியனவும் இடம்பெற்றன. இறுதியாக பிரபல தமிழ்த் திரையிசைப் பாடல்களை கரோக்கி உதவியுடன் சங்க உறுப்பினர்கள் வழங்கினர். சிறுவர் சிறுமியர் எல்லோரும் மேடையேறி ஆடியது கண்கொள்ளாக் காட்சி.
சங்கத் தலைவர் பாலாஜி சதானந்தம் பங்கேற்றோருக்குப் பரிசுகள் வழங்கினார். வித்யா கல்யாணராமன் வழங்கிய நன்றியுரை யுடன் விழா நிறைவெய்தியது.
பூங்கோதை கோவிந்தராஜ் |