பெர்க்கலி தமிழ்ப்பீடம் 'கலைஞர் களஞ்சியம்' வெளியீட்டு விழா
பெர்க்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பீடம் 2006 நவம்பரில் பத்தாண்டுகள் நிறைவு செய்தது. இதை ஒட்டி தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் தமிழ்த்தொண்டைப் பாராட்டும் வகையில் அவருடைய இலக்கியப் படைப்பு களிலிருந்து தொகுத்த 'கலைஞர் களஞ்சியம்' என்னும் நூலைப் பீடம் வெளியிட்டது. இந்த நூலின் அமெரிக்க வெளியீட்டு விழா ஏப்ரல் 20, 2008 ஞாயிறு மாலை, ஸ்மித்விக் அரங்கத்தில் (லாஸ் அல்டடீஸ்) வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் வழங்கிய தமிழ் வருடப் பிறப்பு சிறப்புக் கலை நிகழ்ச்சியான 'சித்திரைக் கொண்டாட்டம் 2008' உடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் புத்தகம் அச்சேறத் தமிழ் மன்றம், கலிபோர்னியா தமிழ்க் கழகம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, தமிழ் அறக்கட்டளை, தென்றல் மாத இதழ் ஆகிய அமைப்புகள் இணைந்து அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப்புரவலர்களிடமிருந்து நிதி திரட்டி, இந்நூல் அச்சேறச் செய்தன.

சென்னையில் ஏப்ரல் 15, 2008 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 'கலைஞர் களஞ்சியம்' வெளியீட்டு விழாவின் ஒளிப்பதிவு இச்சமயத்தில் திரையிடப்பட்டது. (இந்த விடியோவை http://www.channellive.tv/Clive/CTA என்ற இணையதளத்தில் காணலாம்.) தொடர்ந்து தமிழ்ப்பீடம் பத்தாண்டு நிறைவு விழா திட்டக் குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

பேரா. ஜார்ஜ் ஹார்ட், தமிழ்ப் பீடம் அவர்கள் கலைஞர் களஞ்சியத்தை வெளி யிட, முதல் பிரதியை வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத் தலைவர் ஜெயவேல் முருகன் பெற்றுக் கொண்டார். தமிழ்ப் பீடம் பத்தாண்டுகள் நிறைவடைந்ததைப் பாராட்டி யும், ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் நீட்டிக்கப்பட்டதைப் பாராட்டி யும் அவருக்கு ஜெயவேல் முருகன் ஒரு நினைவுப் பட்டயம் வழங்கினார்.

பேரா. ஜார்ஜ் ஹார்ட் தனது நிறைவுரையில் 'கலைஞரின் இலக்கியப் படைப்புகளை தமிழ்ப்பீடம் வெளியிடக் காரணம் கலைஞர் அரசியல்வாதி என்பதால் அல்ல, அவரது தற்கால இலக்கிய ஆராய்ச்சிகளையும், படைப்புகளையும் பாராட்டவே' என்று குறிப்பிட்டார்.

டில்லி துரை

© TamilOnline.com