உதவும் கரங்கள்: கலாட்டா-2008 சஹானாவும் பகல் ரகளையும்!
தமிழ்நாட்டில் சமூக சேவை செய்துவரும் உதவும் கரங்கள் இயக்கத்துக்கு நிதி திரட்ட, அதன் சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் இந்த ஆண்டும் தன் வசந்த விழாவான கலாட்டா-2008 கலைநிகழ்ச்சியை மே 24, 2008 அன்று நடத்த உள்ளது.

சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள ஹேவர்டில் Chabot Collegeக்கு வெளியேயும் அரங்கிலும் நடக்கவிருக்கும் கலாட்டா-2008 நிகழ்ச்சி பெரும் மிகவும் கலகலப்பாக இருக்கும். பிற்பகல் முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடைபெறும். இவற்றின் உச்சமாக மாலையில் பிரபல பல்லவி குழுவினரின் மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் முதன்முறையாக நடைபெற இருக்கும் 'சஹானா', இசையும் நடனங்களும் நாடகக் காட்சிகளும் கலந்து சுவையாகத் தரப்படும் புதுமையான நிகழ்ச்சி. தமிழ்த் திரைப் பாடல்களால் பின்னப்படும் காதல் காவியம்.

மற்றுமொரு புதிய நிகழ்ச்சி கலாட்டா ரீமிக்ஸ். பழைய, புதிய திரைப் பாடல்களை பலவித இசையுடன் சேர்த்து நடனங்களுக்குப் பயன்படுத்துவது பழக்கமாகிவிட்டது. கலாட்டா ரீமிக்ஸில் பலவித இசை, நடனம், ஆடையலங்கார அணிவகுப்பையும் இன்னும் சில ஆச்சர்யம் தரக்கூடிய விஷயங்களையும் கலந்து பரபரப்பாக அளிக்க இருக்கிறார்கள்.

அடுத்து பகல் ரகளை (matinee madness). இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற உங்கள் IQ போதாது. KQ வேண்டும்! அது என்னங் கறீங்களா! அதுதான் கோலிவுட் கோஷன்ட் (Kollywood Quotient). அதாவது நம்ம கோடம்பாக்கம் உலகைப் பற்றிய உங்கள் ஞானத்தைப் பரிசோதிக்கும் க்விஸ் நிகழ்ச்சி. பிறகு பாட்டுக்குப் பாட்டும் இதில் உண்டு. இதில் மேடையேறிப் போட்டியிடும் அணிகள் மட்டுமன்றி பார்வையாளர்களும் கலந்து கொள்ளலாம். ரகளைதான் போங்கள்!

கலாட்டா சிரிப்பு சபை (LoL Sabha) வெடிச்சிரிப்பைப் படுவேகமாக பரவச் செய்யுமாம். ரசிகர்களுக்கு சிரிப்புத் தாங்காமல் வயிற்று வலி, முகக் கோணல், இதயத் துடிப்பு போன்ற உபாதைகள் நேரக் கூடுமாம்! வந்துதான் பாருங்களேன், உங்களுக்கும் அந்த மகிழ்ச்சித் தொல்லைகள் தொற்றிக் கொள்கின்றனவா என்று!

ஒரு முக்கியக் குறிப்பு: கலாட்டா-2008 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு முன்னதாக வந்து சேரும் ரசிகர்கள் ஒரு சீட்டுக் குலுக்கலில் சேர்க்கப் படுவார்கள். அவர்களில் சிலருக்குப் பரிசு உண்டு. ஆரம்ப நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதும் ஓர் அனுகூலம்.

கலாட்டா-2008 பல வள்ளல்களின் நன்கொடையால் சாத்தியமாகிறது. ஒரு குழந்தையைப் பராமரிக்கத் தேவையான தொகை கொடுத்தால் ஒரு நுழைவுச் சீட்டு இலவசம். வள்ளல்நிலை அளவில் நன்கொடை வழங்குவதன் பலன்களையும், வழங்கும் முறையைப் பற்றி மேலும் அறியவும், கலந்து கொள்ளவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொண்டராகவும் பார்க்க:

http://www.ukdavumkarangal-sfba.org,
http://www.galaata.org

கலாட்டா, பொழுதுபோக்கைச் சமூக சேவையாக்குகிறது. வாருங்கள் கலந்து கொள்ள.

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com