சர்ச்சையில் அகப்பட்ட விவேகானந்தர் இல்லம்
இந்துமதத்தின் பெருமையை உலகெங்கும் குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பரப்பிய பெருமைக்குரியவர் சுவாமி விவேகானந்தர். அவர் மேற்கு நாடுகளில் தனது சொற்பொழிவுகளை முடித்துவிட்டுச் சென்னை வந்தபோது தங்கியிருந்த இடம் தான் ’விவேகானந்தர் இல்லம்’. சென்னைக் கடற்கரை எதிரே உள்ள இந்த இடம், ஆரம்பத்தில் ‘ஐஸ் ஹவுஸ்’ என்று அழைக்கப் பட்டது. அந்த இடத்தில் தான், தமிழகத்தின் தேவைகளுக்காக அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஐஸ்கட்டிகளைச் சேமித்து வைத்திருந்தனர். பின்னர் பிலிகிரி ஐயங்கார் என்னும் வழக்கறிஞர் அந்த இடத்தை வாங்கிச் சீர்படுத்தித் தனது நண்பர் செர்னன் நினைவாக 'செர்னன் மாளிகை' என்று பெயரிட்டார்.

இங்கு 1897-ல் பிப்ரவரியில் வருகை தந்த சுவாமி விவேகானந்தர் சுமார் ஒன்பது நாட்கள் இங்கே தங்கியிருந்தார். பின்னர் கல்கத்தாவிலிருந்து அனுப்பப்பட்ட சசி என்னும் சுவாமி ராமகிருஷ்ணானந்தர், முதன்முதலில் ராமகிருஷ்ண மடத்தின் சென்னைக் கிளையை அங்கு தொடங்கி நடத்தினார். பின்னர் சில சமூக நிறுவனங் களிடமும், தங்கும் விடுதியாகவும் இருந்த 'காஸில் செர்னன்', தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

1963-ல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில் அதற்கு 'விவேகானந்தர் இல்லம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. பின் 1997-ல் விவேகானந்தர் அயல்நாட்டிற்குச் சென்று திரும்பிய நூற்றாண்டு விழா நினைவாக, இராம கிருஷ்ண மடத்துக்கு அந்த இல்லம் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகைக் காலம் 2010 வரையில் உள்ளது. பொதுமக்களிட மிருந்து நிதி திரட்டப்பட்டு அங்கே ராம கிருஷ்ண மடத்தினரால் நிரந்தரக் கண்காட்சியும் அமைக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகள், புகைப்படங்கள், அமெரிக்காவில் உள்ள செயிண்ட் லூயிஸ் வேதாந்த சங்கம் அளித்துள்ள 120 படங்கள் போன்ற பல அரும் பொக்கிஷங்கள் அங்கே உள்ளன.

இந்நிலையில் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து விட்டு, அந்த இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்குள்ள கட்டடத்தை இடித்துவிட்டு அங்கு புதிதாக ’தமிழ் செம்மொழி ஆய்வு மையம்’ அமைக்கப்பட உள்ளதாகவும் முதலில் வந்த செய்திகள் கூறின. ஜெயலலிதா, இல. கணேசன் தவிரப் பொதுமக்களிடையேயும் இது பெருத்த எதிர்ப்பை உண்டாக்கவே, சட்டசபையில் கலைஞர் கட்டடத்தை இடிக்கும் எண்ணம் இல்லை என்று விளக்கியிருக்கிறார். கூடவே 'சாமியார்கள் சாமியார்களாக இருக்க வேண்டும்' என்று தனது பிராண்ட் சீறலையும் காட்டியிருக் கிறார். '2010 வரையிலும் கட்டடக் குத்தகை இருக்க, இப்பொழுதே காலி செய்யச் சொல்கிறார்கள், இது செல்லுமா என்று நாங்கள் சட்ட வல்லுனர்களைக் கலந்து ஆலோசிக்கிறோம்' என்று மிக நியாயமாக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கூறியது தான் கலைஞரின் இந்தத் தாக்குதலுக்குக் காரணம்.

அரவிந்த்

© TamilOnline.com