ஸ்ரீகிருபா நடனக் குழுமம் பார்ஸலோனாவில் பரிசு வென்றது
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் பிரபல ஸ்ரீகிருபா நடனக் குழுமத்தின் மாணவிகள் பார்சலோனாவில் (ஸ்பெயின்) நடைபெற்ற பன்னாட்டு நடனப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித் திருக்கின்றனர். அவர்கள் பரிசு பெற்ற பிரிவு 'செவ்வியல் நாட்டுப்புறக் கலாசாரம்'. தவிர 'உலக அளவிலான தனிக் கலாசார' நடனப் பிரிவில் மூன்றாவதாக வந்தனர். 20 நாடுகளிலிருந்து 1200 பேர் பங்கேற்ற இந்தப் போட்டிகளில் இரண்டு பரிசு களைப் பெறுவதொன்றும் எளிதல்ல. ஆனாலும் காளிங்க நர்த்தனத்தை நடனத்தில் சித்திரித்த ஸ்ரீகிருபாவின் 10 நங்கையர்களின் கடும் உழைப்புக்கும் திறனுக்கும் இது ஒரு முக்கிய உதாரணமும் வெகுமதியும் ஆகும்.

ஸ்ரீகிருபாவின் நடன இயக்குனர் விஷால் ரமணி இதற்கான இரண்டு நடனங்களை மிக நேர்த்தியாக வடிவமைத்து இயக்கிப் பயிற்சி கொடுத்தார். ஆனால் அவரால் தம் மாணவிகளோடு ஸ்பெயினுக்குப் போக முடியவில்லை. அதனாலென்ன, விஷால் ரமணியின் மாணவிகள் அவருடைய கனவைத்தான் நனவாக்கிவிட்டார்களே. விருதுபெற்ற குழுவில் பங்களித்த மாணவிகள்: நட்யா அகர்வால், அஞ்சனா பாலா, ப்ரியா பானர்ஜீ, சௌமிதா போஸ், பூஜா சிராலா, கீதா பாரதி, கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி, வினோதினி லக்ஷ்மணன், அனு ராமச்சந்திரன், லக்ஷ்மி சாஸ்திரி.

இந்த வெற்றிக் குழுவில் ஒருவரான பூஜா சிராலா 'தென்றல்' இதழில் ஆகஸ்ட் 2007 இதழ் அட்டையை அலங்கரித்தார் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

முரளி சிராலா

-

© TamilOnline.com