நந்தலாலா அறக்கட்டளை லாவண்யா குமார் இன்னிசை நிகழ்ச்சி
மே 21, 2006 அன்று செல்வி லாவண்யா குமார், நந்தலாலா அறக்கட்டளையின் சார்பில் ஓர் கர்நாடக இசை நிகழ்ச்சியை வழங்கினார். சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பூஜ்யஸ்ரீ மதியொளி சரஸ்வதி அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றிவருகிறது. 'அக்கா' என்று நூற்றுக்கணக்கான குழந்தைகளால் பாசத்துடன் அழைக்கப்படும் மதியொளி சரஸ்வதி அவர்கள், இந்த இளம்
உள்ளங்கள் மூலம் அவர்களின் பெற்றோர்களையும், பல முதியவர்களையும் இந்த அமைப்பில் ஈடுபட வைத்துள்ளார்.

ஃப்ரீமாண்டிலுள்ளள ஷார்னர் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியின் எட்டாவது வகுப்பு மாணவியான லாவண்யா, மாலா மற்றும் சிவக்குமார் ஆகியோரின் மகளாவாள். நான்கரை வயதிலிருந்து ஸ்ருதி ஸ்வர லயா நுண்கலைப் பள்ளியில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இசை பயின்று வருகிறார். கன்கார்ட் சிவாமுருகன் கோயில், தமிழ்மன்றம், தென்னிந்திய நுண்கலை அமைப்பு மற்றும் பத்ரிகாஸ்ரமம் தவிர 'ஸ்ருதி ஸ்வர லயா' நடத்திய
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடியுள்ளார். பரதநாட்டியமும் பயிலும் லாவண்யா ப்ரதிதி, தபஸ்யா, ஃப்ரீமாண்ட் இளைஞர் கலைவிழா மற்றும் மொடெஸ்டோ வில் நடந்த நிகழ்ச்சிகள் உட்படப் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.

முதற்கண் அறக்கட்டளை நிர்வாகியான காயத்ரி சுந்தரேசன் அவர்கள் பாடகியையும், வயலின் மிருதங்க வித்வான்களையும் அறிமுகப்படுத்தினார். 'நந்தலாலா' நிறுவனம் பல ஆண்டுகளாகச் செய்து வரும் தொண்டுகளை விளக்கி, மனித குலத்திற்கு இளம் உள்ளங்கள் மூலம் எவ்வாறு சேவை செய்யமுடியும் என்பதை விவரித்தார்.

செல்வி லாவண்யா தனது குறுங்கச்சேரியை சுத்ததன்யாசி ராக வர்ணத்துடன் தொடங்கினார். பிறகு எடுத்துக்கொண்ட 'சித்தி விநாயகம்' என்ற மோகனகல்யாணி ராக கீர்த்தனை செவிக்கு இனிமை. அடுத்துப் பாடிய ப்ருந்தாவன சாரங்கா ராக பாடலைத் தொடர்ந்து ஒரு சிறு ராகஆலாபனைக்குப் பிறகு 'மாரமணன்' (ஹிந்தோளம்) பாடலில் அவர் உச்சஸ்தாயியை அனாயசமாக எட்டியதைக் காணமுடிந்தது. பாடலின் இறுதியில்
செய்த ஸ்வர ப்ரஸ்தாரங்கள் ரம்யமாகவும் தாளக்கட்டுபாட்டுடனும் இருந்தன. துரித நடையில் பாடிய 'மால்மருகா' (வசந்தா) அமைந்த பாபநாசம் சிவன் பாடல் ரம்மியமாக இருந்தது. அம்ருதவர்ஷினி ராக ஆலாபனையில் லாவண்யாவின் தேர்ச்சி மற்றும் ஆழ்ந்த உழைப்பை வெளிப்பட்டது. நிகழ்ச்சியின் சிகரம் அவர் பாடிய 'அழகே முருகா' என்ற ராகமாலிகை. 'ப்ரஹ்மம் ஒகடே' (நாதநாமக்ரியை) என்ற அன்னமாசார்யாவின் பாடலுடன்
லாவண்யா நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.

சீனிவாசன் கொம்மு (வயலின்), ரவீந்தர் பாரதி (மிருதங்கம்) வாசித்து நிகழ்ச்சிக்கு மெருகு ஊட்டினர்.

சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் உள்ள குழந்தைகளுக்காக நிறுவப்பட்ட நந்தலாலா அமைப்பின் முக்கியக் குறிக்கோள் ஏழை இளைஞர்களுக்குக் கற்க வசதி செய்து தருதல், பொது அறிவை வளர்த்தல், சமுதாய சேவை, இலவச மருத்துவக் கண் சிகிச்சை மற்றும் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்தல், ஆதரவற்ற மகளிர்க்குக் கலைப்பொருள் செய்வதில் பயிற்சி அளித்தல், மக்களிடையே சுகாதாரம்பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல், 'மாத்ரு
சேவா' என்னும் அன்னதான மையம் அமைத்தல் ஆகியவைகளாகும். 'நந்தலாலா'வின் கிளைகள், அமெரிக்காவில் கலிபோர்னியா, ஃப்ளாரிடா, நியூஜெர்சி மற்றும் துபாய் நாட்டிலும் இயங்கி வருகின்றன. 66 வயது நிரம்பிய மதியொளி சரஸ்வதி அவர்கள் 2004-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

காஞ்சி பரமச்சார்யர் இவரது தன்னலமற்ற சமூக சேவையைப் பாராட்டியுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும். மேலும் விவரம் வேண்டுவோர் மற்றும் சேவைகளில் பங்கு கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள:

தொலைபேசி எண்: 408.720.8437
மின்னஞ்சல்: nandalalam@yahoo.com

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com