உல்லாசச் சிறை
விதவிதமான ரொட்டிகள், தேன், ஜாம், இறக்குமதியான ஐந்து வகை பால்கட்டி களுடன் காலையில் உணவு, சூடான மதிய உணவு, பதமான ராத்திரி போஜனம், தங்குமறையில் காபி சாதனம், பளிங்கான குளியலறை, குளிர்நாட்களில் அறைக்கே வரும் சில்லரை சாமான்கள், டிவி இன்னும் சில. போரடித்தால் துப்பாக்கி, துணை சகிதமாக வேட்டையாடலாம். எந்த சுற்றுலாத் தலம், எத்தனை நட்சத்திர அந்தஸ்து என்று நீங்கள் கேட்கும் முன் சொல்லிவிடுகிறேன். இது கிரீன்லாண்ட் நாட்டுச் சிறை என்று. மகாநதியும், விருமாண்டியும் காட்டிய சிறை மனதில் நிழலாடி, இவர்களுக்கு என்ன குறை யென்று பொருமுவர்களுக்கு ஆறுதலுண்டு. அந்நாட்டில் மிக விரும்பப்படும் சீல் மாமிசம் சிறையில் தரப்படுவதில்லையாம்.

குற்றவாளிகளுக்குத் தரப்படும் அரவ ணைப்புக்குக் காரணமில்லாமலில்லை. மக்கள்தொகை வெறும் 53,000 மட்டுமே உள்ள இந்த நாட்டுக்கு மீன்வளமே பிரதானம். அடைத்துவிட்டால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்ற பொருளாதார நிர்ப்பந்தத்தினால் பரிணமித்த சிறையமைப்பு இது. வேலைக்குப் போய் சிறைக்கு இரவு ஒன்பதரைக்குள் வந்துவிட்டால் மாதம் 2,800 டாலர் ஏறக்குறைய உத்தரவாதம்.

அமெரிக்காவிலுள்ள 2.3 மில்லியன் கைதிகளை ஆதங்கப்பெருமூச்சு விடச் செய்தாலும் இந்த சிறைசுதந்திரம் பிற நாடுகளில் நடைமுறைக்கு ஒவ்வாததே. கைதிகள் எண்ணிக்கையிலும் உலகத் தலைமை அமெரிக்காவுக்குத்தான். இப்படி யிருந்தும் சமூகப்பாதுகாப்பு அதிகரிக்க வில்லை என்ற வாதம் வலுப்பெற்று வருகிறது. சிறைச் சீரமைப்பு பற்றி பரவலாக விழிப் புணர்வு வந்து கொண்டிருக்கிறது.

பொதுநலத் தொண்டு அமைப்புகள் பல இப்போது சீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கோல்ட் ஸ்மித் என்ற ஓய்வு பெற்ற உயரதிகாரி தனியார் துறையில் தனக்கிருக்கும் அனுபவத்தை முன்வைத்து GOSO என்ற தொண்டமைப்பை நடத்தி வருகிறார். சமூக நீரோட்டத்தில் கலக்க உதவினால் பத்தில் ஒருகைதிதான் மீண்டும் சிறைவாசம் பெறுகிறார் என்கிறார் கோல்ட்ஸ்மித். உண்மையில், மூன்றில் இருவர் மீண்டும் சிறைக்கு வருகின்றனர் என்கிறது புள்ளிவிவரம்.

PEP என்ற இன்னுமொரு தொண்டு நிறுவனம் கைதிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வாகத்திறன் கற்றுக் கொடுக்கிறது. 'பல குற்றவாளிகள் சாமர்த்தியமாகப் பல இடங்களைத் தாண்டியவர்கள்' எனப் பெருமிதப்படுகிறார் இதன் நிறுவனர் கேதரின் ரோர். தன்னிடம் பயிற்சி பெற்றோரில் 5 சதவீதத்துக்கும் குறை வானவரே மீண்டும் குற்ற வாழ்க்கையில் இறங்குகின்றனர் என்கிறார் ரோர்.

'போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி, கோஷ்டிகளுடன் மோதி, தெருத்தெருவா வஸ்து வியாபார பண்ணப்பவே பல நிர்வாக நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டேன்' என்று ஒரு கைதி சொன் னால் அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய்விடுவார் போலும் பயிற்சி கொடுக்க.

முரளி பாரதி

© TamilOnline.com