மிகவும் திறமையோடு காவல் துறை செயல்படுவதைப் பொதுமக்களுக்கு விளக்க ஒரு விளம்பரப் படம் எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 'எவ்வளவு சிக்கலான கொலைக் கேஸாக இருந்தாலும் நமது காவல்துறை துப்புத் துலக்கிவிடும். எனவே கொலை நல்லது' என்று அதில் வந்தால் எப்படி இருக்கும்! யதார்த்தத்தில் இப்போது நடந்துகொண்டிருப்பது இதுதான்.
ஆரம்ப காலத்தில் கறுப்பு வெள்ளை டீ.வி.யில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னால் 'வாஷிங் பௌடர் நிர்மா, வாஷிங் பௌடர் நிர்மா' என்று சலவைத் தூளின் பெயரைத் திருப்பித் திருப்பிச் சொல்வதே விளம்பரமாக இருந்தது. பின்னர் 'மின்னலடிக் கும் வெண்மை' என்று சொல்லும்போதே அந்த நீலக்கட்டியின் மீது ஒரு மின்னல் வந்து உட்கார்ந்து கொண்டது. அதற்கும் பிறகு 'வெள்ளை வெளேர் சலவை யாருடையது? உங்களுடையது' உங்கள் ஈகோவுக்குத் தீனி போட்டது. பெருமை டிடெர்ஜன்டுக்கு அல்ல, அதை உபயோகித்த உங்களுக்கு. தனது சுட்டுவிரலை மேல் நோக்கிச் சுழற்றியபடி 'தேடிக்கிட்டே இருப்பீங்க' என்றார் அடுத்து வந்த துருதுருப்பான அம்மணி. அந்தச் சலவைத் தூளை உபயோகித்தால் அழுக்கு எங்கே என்று தேடுகிற நிலை வந்துவிடுவாம்.
சோப்பின் வீரப் பிரதாபமெல்லாம் போய் விட்டது. இப்போது விளம்பரம் சொல்கிறது 'கறை நல்லது'! ஏன்? இந்தச் சலவைத் தூள் எப்பேர்ப்பட்ட கறையையும் போக்கிவிடுமாம், அதனால்! இதற்கும் 'கொலை நல்லது!' என்று நாம் மேலே காட்டிய கற்பனை விளம்பரத்துக் கும் என்ன வித்தியாசம்? பல் தேய்த்தபின் 24 நான்கு மணி நேரமும் கடுமையாக உழைக்கிறதாம் ஒரு பற்பசை. அதற்காகச் சிறு குழந்தைகளுக்கு அந்த விளம்பரம் காட்டும் வழி: எங்கள் பற்பசையை உபயோகித்தால் நாள் முழுவதும் கேக்கும் சாக்லெட்டுமாகத் தின்றுகொண்டே இருக்கலாம். மற்றொரு உணவுப்பொருள் விளம்பரம் சொல்லும் செய்தி என்ன தெரியுமா? இட்டிலி தோசையெல்லாம் வெறும் போர், எங்கள் சாக்லெட் தடவிய சோள அவல்தான் லைட்டான ஆகாரம். மக்காச் சோளத்தில் எந்த சத்தும் இல்லை என்பதோ, அதைச் சாக்லெட் குழம்பில் முக்கியெடுப்பதால் அது போஷாக்கு ஆகிவிடாது என்பதோ யாருக்கும் தெரியாததில்லை. ஆனாலும் இதனால் கவரப்படும் குழந்தைகள் ஸ்டார்ச்சும் புரதமும் சரியாகக் கொண்ட இட்டிலி தோசை ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு, கார்ன் ப்ளேக் என்று நாகரீமாக அழைக்கப்படும் சோள அவலைப் பாலில் நனைத்து விழுங்குகின்றன!
அரசியலில் என்ன நடக்கிறது தெரியுமா? டி.ஆர். பாலு தனது மகனின் கம்பெனிக்கு அரசுப் பணியைத் தரும்படிக் கடிதம் எழுதினார். ஏன் அப்படிச் செய்தாராம் தெரியுமா? பாவம், அந்தக் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் 'எங்களையெல்லாம் நீங்கள்தான் வேலைக்கு எடுத்துக் கொண்டீர் கள்; நீங்களே வேலை தராவிட்டால் எப்படி?' என்று கேட்டுக்கொண்டார்களாம். அது மட்டுமா? கம்பெனியின் பங்குதாரர்களும் 'கம்பெனி நன்றாக இருந்தால்தானே நாங்கள் நன்றாக இருக்கமுடியும்' என்று பாலுவை வேண்டிக்கொண்டார்களாம். பாலுவின் கடிதத்தை ஏற்ற பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா பாலுவுக்கு ஆதரவாகச் சொல்லுவது என்ன தெரியுமா? 'எம்.பி.க்கள் தமக்கு வேண்டியவர்களுக்குப் பணிகளை ஒதுக்கும்படிக் கேட்பது வழக்கம் தான்'! எப்படி இருக்கிறது. இவை எல்லாமே டீ.வி.யிலும் செய்தித் தாள்களிலும் வந்தவை தான். இது 'கறை நல்லது' வாசகத்தின் வேறொரு வடிவம்தானே!
இந்திய ஹாக்கி பெடரேஷன் செயலாளர் ஜோதி குமரன் 'கறை நல்லது' என்பதை உணர்ந்தவர்தான். ஒரு ஹாக்கி வீரரை அணியில் சேர்த்துக்கொள்ள 2 லட்சம் ரூபாய் வாங்குவதைப் படம் பிடித்துவிட்டார்கள். ஆனால் பாவம் அவருக்கு அரசியல் பின்னணி இல்லை போலிருக்கிறது. எல்லோருமாகக் கூக்குரலிட்டு அவரைப் பதவி நீக்கிவிட்டார்கள். ஆடுகளத்தில் இருக்கும் வரை வாய் ஓயாமல் யாரையாவது வைது கொண்டே இருப்பது கிரிக்கெட் என்று தவறாகப் புரிந்து கொண்ட பஜ்ஜி, வசவு மன்னர் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டார். விக்கெட் எடுக்க வேண்டிய ஸ்ரீசாந்த் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தது பாவமாக இருந்தது. ஆனால் என்ன செய்வது, அதுவும் 'கறை நல்லது' என்று நினைக்கத் தொடங்கிவிட்ட கலாசாரத்தின் ஒரு அங்கம்தானே.
ராணுவ அதிகாரிகள் விதவை இல்லத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய மந்திரி கூறினாராம் 'நீங்கள் எல்லோரும் மிகச் சிறப்பான பணியைச் செய்கிறீர்கள். இன்னும் நிறைய விதவை இல்லங்களை நீங்கள் தொடங்க வேண்டும். அவற்றைத் திறந்து வைக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டும்' என்று! பல ஆயிரம் அனாதை களுக்கு வழியும் விளக்குமாக இருக்கிற 'உதவும் கரங்கள்' வித்யாகர் அப்படி நினைக்கவில்லை. அவர் தனது தென்றல் பேட்டியில் 'உலகில் அனாதை இல்லங்களே இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்' என்று கூறினார். நல்ல வேளையாக, 'கறை நல்லது' என்று நினைக்காத வித்யாகரைப் போன்றவர்களும் இருப்பதால்தான் இன்னும் உலகில் மழைபெய்கிறது, சூரியன் கிழக்கில் உதிக்கிறது. 'உண்டாலம்ம இவ்வுலகம்.'
தெ. மதுரபாரதி |