ஆபீசிலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. கூப்பிட்டது மனைவி.
"நானும் பானுவும் ஷாப்பிங் போறோம். எனக்குச் சமைக்க நேரமில்ல. ·பிரிட்ஜில நேத்திக்கு மிஞ்சின சாம்பாரும் ரைசும் இருக்கு. மைக்ரோவேவ்ல சுடவெச்சு ராத்திரி சாப்பிட்டிடுங்க. வரச்சே ஸ்பைஸ் ஹவுசுக்குப் போய் முப்பது சமூசா வாங்கிட்டு வந்துடுங்க. பானு நாளக்கி ஸ்கூலுக்கு எடுத்திட்டுப் போகணும். நீங்க மறந்திடுவீங்கன்னு பானு பயப்படறா. புரிஞ்சிதா?" என்றாள்.
'ஆகா. நல்ல வேளை, இப்ப கூப்பிட்டியே. ஸ்பைஸ் ஹவுஸ்கிட்டதான் இருக்கேன். மறக்காம சமூசா வாங்கிட்டு வரேன்" என்றேன். வயிறு பசிக்குது வீட்ல போயி சாப்பிடலாம்னு பார்த்தா நேத்திக்கு மிச்சம் தானா!'
அமெரிக்காவுக்கு வந்தப்பறம் நம்ம பெண்கள் பண்ணற லொள்ளு தாங்க முடியல. ஒழுங்கா தினம் சமைக்கச் சோம்பல் பட்டு, கோணாமாணானு சமைச்சு மிஞ்சினதை உறைய வெச்சு, உருக்கி ஒரு வாரமா வெச்சிட்டு திங்கறது?
நேத்திக்கே சாம்பார் சரியில்ல, அதைப்போய் சுடவெச்சு இன்னிக்கா! நல்ல வேளை இப்பவே சொன்னாள். ஸ்பைஸ் ஹவுஸ்ல சூடா சன்னா பட்டூரா போட்டிருப்பான். ஒண்ணு தின்னா டின்னர் முடிஞ்சிரும். கடையை நோக்கிக் காரைச் செலுத்தினேன்.
ஸ்பைஸ் ஹவுஸில் இந்தியப் பலசரக்குகள், கறிகாய்களுடன் ஒரு சிறிய உணவகமும் இருந்தது. கண்ணாடிப் பெட்டிகளில் இனிப்புகள், உணவு வகைகள் தெரிந்தன. எதிரே இருந்த மேஜை நாற்காலிகளில் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சமூசாவும் சன்னா பட்டூராவும் ஆர்டர் செய்துவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்.
அப்பொழுதுதான் அந்த முதியவர் என் எதிரே வந்தார். கைகளில் லேசான நடுக்கம். கையில் இருந்த தட்டில் சப்பாத்தி, கூட்டு, புலவு, பச்சடி எல்லாம் தட்டின் தனிக் குழிவுகளில். குடைபோல மேலே அப்பளம்.
என் எதிரில் இருந்த இடத்தைப் பார்த்து 'இதில் உட்கார்ந்தால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லியே?' என்றார்.
'வாங்க சார். உட்காருங்க' என்றேன்.
அமர்ந்தவர், 'அடடா. ஸ்பூன் தர மறந்திட் டான்' என்றார். அவருக்கு கரண்டி, நாப்கின் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தேன்.
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பெயர் சேஷாசலம். இந்தியாவிலிருந்து பெண், பிள்ளைகளைப் பார்க்க வந்திருக்கிறார். இரண்டு பிள்ளைகள். ஒரு பெண். எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது.
பிள்ளைகளில் ஒருத்தன் ஹ¥ஸ்டனில், ஒருத்தன் டெட்ராய்ட்டில். அவர்களோடு ஒவ்வொரு மாதம் இருந்துவிட்டு இப்போது லாஸ் ஏஞ்சலஸில் பெண்வீட்டுக்கு வந்திருக்கிறார்.
தட்டில் இருந்த உருளைக்கிழங்கை வாயில் போட்டுக்கொண்டார். தட்டில் எண்ணெய் தேங்கி இருந்தது.
'ரொம்ப எண்ணெயாக இருக்கா? இங்க தாராளமா எண்ணெய் ஊத்திப் பண்ணிடு வானுக' என்றேன். வாயிலிருந்ததை மென்றுகொண்டு பேசமுடியாமல் மெதுவாகத் தலையை ஆட்டி நான் சொன்னதை ஆமோதித்தார்.
'சன்னா பட்டூரா' என்ற குரல் ஒலிக்க எழுந்து போய் அதை வாங்கி வந்தேன். சன்னாவிலும் எண்ணெய் திட்டுத் திட்டாய் ஆரஞ்சு வண்ணத்தில் மிதந்தது. 'பாத்தீங் களா. சொன்னேன் இல்லியா?' என்றேன்.
கிழவர் புன்முறுவலுடன் 'எண்ணெய் இருந்தா பரவாயில்ல. உடம்புக்குக் கெடுதலா இருக்கலாம். வாய்க்கு ருசி அதுதான். இப்ப இதைச் சாப்பிட்டா நீங்க வீட்லபோய் டின்னர் சாப்பிட முடியுமா? பசியை அடைச்சிடாதோ' என்றார்.
இதுவே என் டின்னர் என்று சொல்லிக் கொள்ளப் பிடிக்கவில்லை. 'சும்மா ஒரு நப்பாசை. சமூசா வாங்க வந்தேன் பெண்ணுக்கு. சமூசா தயாராகக் கொஞ்சம் நேரமாகும்னான். இதை ஆர்டர் பண்ணி னேன். வீட்டுக்குப் போறதுகுள்ள பசி எடுத்திடும். பொண்டாட்டி கறி, கூட்டுன்னு முழுசாச் சமைச்சு வச்சிருப்பா. சாப்பிடாட்டி கோவம் வந்திடும்.'
பழைய சாம்பாருக்கு இந்தச் சன்னா பட்டூரா தேவாம்ருதம். வீட்டில சீக்கிரம் போயி பழசைக் கொட்டிவிட்டு சாப்பிட்டாச்சுனு சொல்லிடணும். இல்லாட்டி நாளை நைட் டின்னருக்கும் அதுவேதான் வரும். இவர்கிட்ட இதைச் சொன்னா அசிங்கமாயிருக்கும்.
'நீங்க எப்படி தனியா வந்தீங்க. உங்க டாட்டர் வரலியா?' என்றேன்.
'அவள் பக்கத்தில ஒரு கடைக்கு தலை முடிக்கு சாயம் போட்டுக்கப் போயிருக்கா. வரதுக்கு ஒரு மணியாகுமாம். நான் ஏதாவது தமிழ்ப்படம் பார்க்கணும்னா விசிடி வாடகைக்கு எடுத்துக்கச் சொல்லி என்னை இங்க விட்டுட்டுப் போயிருக்கா. வந்தேன், இந்த எடத்தைப் பார்த்தேன், சாப்பிடலாம்னு தோணிச்சு.'
'உங்க பெண் நன்னா சமைப்பாளா? இந்த ஊர் காய்கறிகள் உங்களுக்குப் பிடிச்சிருக்கா' என்றேன்.
'நோ'
'ஏன், இந்த ஊர் கறிகாய் பிடிக்கலையா?'
'கறிகாய் நன்னாயிருக்கு பார்க்கப் பச்சப் பசேல்னு வளர்த்தியா. சரியானபடி சமைக்க வேணாமா? என் பெண்ணும் மாப்பிளையும் ஹெல்த் கான்ஷியஸ். கறிகாயை வதக்கவே பயப்படறா. வாணலில அழகா ரெண்டு கரண்டி எண்ணெய் விட்டு, சுருள வதக்க வேண்டாமா? எண்ணெயைக் கேன்ல வெச்சிண்டு செண்ட் அசிக்கற மாதிரி துளி ஸ்ப்ரே பண்றா. அப்படி இப்படி ஒரு தடவை நோகாம பெரட்டிட்டு எடுத்துடறா. உப்புக் கூட போடறதில்ல. உப்புல சோடியம் இருக்காம். எண்ணெய் இல்லாம பொறை மாதிரி காஞ்ச ரொட்டி. வென்னீர் மாதிரி சூப். பாலாவது குடிக்கலாம்னா கொழுப்பே இல்லாத நோ ·பேட் பாலாமே. அபிஷேக ஜலம் மாதிரி நீர்த்து இருக்கு. க·பீன் போடாத காப்பி. ரெண்டு மாசம் பிள்ளைகளோட இருந்தாச்சு. இங்கயும் ஒரு மாசம் இருக்கலாம்னு பார்த்தேன். வந்து ஒரு வாரம்தான் ஆச்சு. அதுக்குள்ள நாக்கு செத்துப்போச்சு சார். நடந்தாவது ராத்திரியே இந்தியாக்கு திரும்பிப் போயிடணும்னு தோணறது.'
'உங்க பெண் கிட்ட சொன்னீங்களா?'
'அவ கேட்க மாட்டேங்கறா. நான் குண்டா இருக்கேனாம். இளைக்கணுமாம். வீட்டில் டிரட் மில் இருக்கு. தினம் ஒரு மணி நடக்க வேற சொல்றா. எழுவது வயசில நான் ஒலிம்பிக்சிலா சார் ஓடப்போறேன்? இன்னிக்கு ராத்திரி டின்னருக்கு சாலட்னு சொல்லியிருக்கா... பகீர்னு இருக்கு.'
'சாலட் கொஞ்சம் சாப்பிடறது நல்லது. லெட்டூஸ், தக்காளி, வெள்ளரிக்காய், கொண்டைக்கடலை...'
'சார்... என் பெண்ணும் மாப்பிளயும் சாப்பிடறது வெறும் இலை. அகத்திக்கீரை மாதிரி பச்சையா இருக்கு. அதை மேயறாங்க. நம்ம ஊர்ல மாட்டுக்குப் போடுவோம். இங்க அதுவே டின்னராம்... இதை எங்க சொல்லி அழறது. ஒரு வாரமா இதுமாதிரி தின்னே என் தோல் கலரே பச்சையா ஆயிடுத்து.'
'உங்க மாப்பிள்ளை ஒண்ணும் சொல்லற தில்லியோ இந்த சாப்பாட்டுக்கு?'
'பெண் ஒரு வெள்ளைக்காரனைக் கல்யாணம் பண்ணிண்டு இருக்காள். அவள் புண்ணாக்கு பருத்திக்கொட்டை எடுத்து வெச்சு டின்னர்னு கொடுத்தாலும் பொறுமை யாத் தின்னுடறான். வெரி குட்னு சர்ட்டிபி கேட் வேற.'
எனக்குப் பாவமாக இருந்தது.
'உங்க பிள்ளைகள் வீட்ல இஷ்டத்துக்குச் சாப்பிட முடிஞ்சிதோ?'
'ஹ¥ஸ்டன்ல ரகு வீட்ல காலையில இட்லி, வடை. மத்தியானம் சாம்பார், ரசம் கறியோட சாப்பாடு. சாயங்காலம் சப்பாத்தி, கூட்டு. டெட்ராய்ட்டுல கோபு வீட்டில காலையில பூரி, கிழங்கு. மத்தியானம் புலவு. ராத்திரி நான், குருமா. பொங்கல், புளியோதரைன்னு குஷியா இருந்துது. பிள்ளைகள் என்னை இங்கயே வந்துடு அப்பா, எங்க வீட்டோடயே இருக்கலாம்னு கெஞ்சறானுக.'
'அப்ப ஒண்ணு செய்யுங்க. எதுக்கு தனியா சென்னையில போயி இருக்கணும்? பேசாம இங்க வந்திடுங்க. பிள்ளைகள் வீட்டில போயி தங்கலாம் இல்லியா? உங்களுக்கு விசா பிரச்னை ஏதாவது இருக்கா?'
கிழவர் என்னை முறைப்பாக ஒரு பார்வை பார்த்தார். 'விசா ஒரு பிரச்னையே இல்லை. கேட்டதும் பத்து வருஷம் செல்லும்னு முத்திரை குத்திக் கொடுத்திட்டான். சென்னையில பட்டினியாவா சார் இருக்கேன்? அருமையான ·ப்ளாட். ஒரு ·போன் அடிச்சா என்ன வேணாலும் எப்ப வேணாலும் சமைச்சுக் கொடுக்க ஆள் இருக்கு. ஆர்டர் பண்ணி அரைமணியில சூடா என் மேஜைக்கு வரும். இங்க மாதிரி இல்ல.'
'சார் வயசான காலத்தில சென்னையில தனியா இருக்க வேணான்னுதான் சொன் னேன். உங்க பெண்ணு வேணும்னா டயட் சாப்பாடு போடலாம். உங்க மருமகள்கள் சமைச்சுப்போட தயாராக இருக்காங்கனு, பிள்ளைகளும் வந்து இருன்னு கூப்பிடராங் கனு சந்தோஷப்படுங்க. இந்தக் காலத்தில் பெற்றோரைக் கூட வெச்சிக்க குழந்தை களுக்கு தயக்கம் இருக்கில்லிய்யா? தயவு தாட்சண்யம் இல்லாம முதியோர் இல்லத்தில கொண்டுபோய் சேர்த்திடறாங்களே...'
'மருமகள்கள் சமச்சுப் போடத் தயாரா இருக்கலாம். என்ன பிரயோசனம்? அதை என்னால தொடக்கூட முடியாது.'
'ஏன் சார்!'
ஒரு மருமகள் வெள்ளைக்காரி. இன்னொரு மருமகள் சீனாக்காரி. ரெண்டு பேருக்கும் நம்ம சாப்பாடு சமைக்கத் தெரியாது. அவங்க வீட்டில இருக்கறச்ச, பெரிய மனசு பண்ணி நானே என் சாப்பாட்டை சமைச்சுக்க அனுமதிச்சாங்க. அவங்களுக்கு நம்ம சாப்பாடு அவ்வளவா பிடிக்கல. பையனுக நாக்குக் காஞ்சு போயிக் கெடக்கானுகளா? நான் எனக்குத் தெரிஞ்சதைச் சமைச்சதை மூக்கைப் பிடிக்க தின்னானுக. இங்கயே இருந்து எங்களுக்கு தினமும் சமைச்சுப் போடுப்பான்னு கெஞ்சினானுக. எனக்கு என்ன தலையெழுத்தா இவனுகளுக்கு சமச்சுப் போட்டுட்டு இங்க கிடக்க. சரவணபவன், உட்லண்ட்ஸ், மாமீஸ் மெஸ்னு நம்ம ஊர்ல இல்லாததா?'
சொல்லிக்கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.
'அய்யோ! இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. என் பொண்ணு வந்துடுவா. நான் சாப்பிடறதைப் பார்த்தா கத்துவா' என்றவர் சர்வரைப் பார்த்து 'குவிக். ஒன் ப்ளேட் சன்னா பட்டூரா ப்ளீஸ்' என்று ஆர்டர் கொடுத்தார்.
எல்லே சுவாமிநாதன் |