யார் இவர்?
அந்தச் சிறுவனுக்கு 9 வயது இருக்கும். நல்ல புத்திசாலி. அதே சமயம் விளையாட்டுத்தனமும் அதிகம். அவனுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் பலர். அவர்களுடன் விளையாடிப் பொழுதைப் போக்குவதை விட வீட்டில் இருந்த ஒரு பழைய பல்லக்கில் அமர்ந்து பொழுதைக் கழிப்பது அவனுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக இருந்தது.

நேரம் கிடைத்தபோதெல்லாம் அந்தப் பல்லக்கின் உள்ளே உட்கார்ந்து கொள்வான். அவனது கற்பனை சிறகடிக்கும். தன்னையே ராஜாவாக, இளவரசனாக கற்பனை செய்துகொள்வான். பல்லக்கில் ஏறி உலகம் முழுவதும் சுற்றித் திரிவதாகவும் அவனுக்குத் தோன்றும். அதில் அவனுக்கு அலாதி திருப்தி. வானில் பறப்பது போல, மேகங்களில், மலைகளில், கடல்களில் பயணம் செய்வது போல கற்பனை செய்து மகிழ்வான். அந்தக் கற்பனையே நாளடைவில் அவனது எழுத்தாற்றலைத் தூண்டியது. கவிதைகள் எழுத ஆரம்பித்தான். சிறுகதைகள் எழுதினான். 16 வயதுக்குள் ஒரு நீண்ட நாடகத்தை எழுதி அனைவரது பாராட்டையும் பெற்றான். அவனது கவி ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது. தேச விடுதலைக்காகவும் குரல் கொடுத்தது. இயற்கை, தெய்வம், அழகு என அவன் கவிதையின் பாடுபொருள்கள் விரிவடைந்தன.

அவர் இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர் களுள் ஒருவரானார். நல்ல பல இலக்கியங்களைப் படைத்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இலக்கியத்துக் கான முதன்முதல் நோபெல் பரிசு அவரது கவிதைக்கு வழங்கப்பட்டது. நோபெல் பரிசு பெறும் முதல் இந்தியர், ஆசியர் என்ற பெருமைகளுக்கும் உரியவரானார். கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். சர்வதேசப் புகழ் பெற்ற கல்விக் கூடத்தை உருவாக்கினார். தனது மாணவர்களால் குருதேவ் என்று அன்புடன் போற்றப்பட்டார். இயற்கை யின் ரசிகனாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அந்த மாமேதையின் பாடல் இன்று இந்தியாவில் ஒலிக்காத இடமே இல்லை.

அவர் யார் என்று தெரிகிறதா?

விடை


© TamilOnline.com