குழந்தைகளே! இந்தக் கதையைக் கேளுங்கள்.
மந்தையிலிருந்து வழிதவறிப் போன ஓர் ஆடும், கூட்டத்திலிருந்து பிரிந்து வந்ததொரு மாடும் காட்டில் சந்தித்துக் கொண்டன. அந்தக் காட்டில் கேட்டதைக் கொடுக்கும் பெரிய கற்பக மரம் ஒன்று இருந்தது. அதன்கீழே தான் அவை சந்தித்தன.
தமது கூட்டத்திலிருந்து திசைமாறி அங்கே வந்து விட்டதாகவும் விரைவில் மீண்டு சென்று சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் இரண்டும் பேசிக்கொண்டன. மாட்டின் அழகான வால் ஆட்டை மிகவும் கவர்ந்தது. ‘எவ்வளவு அழகாக இந்த மாடு இருக்கிறது. எவ்வளவு பெரிய நீண்ட குஞ்சலம் வைத்தது மாதிரி அழகான வால்! இதுபோல எனக்கு இருந்தால் எப்படி இருக்கும்! என்று ஆடு எண்ணியது.
‘ஆகா, எவ்வளவு சிறிய உருவம் இந்த ஆட்டுக்கு. வெகு வேகமாக அங்கும் இங்கும் பாய்கிறதே. எட்டி நின்றே தழை மேய்கிறதே! அதன் வால்தான் அதற்கு எவ்வளவு வசதியாக இருக்கிறது! எனக்கும் இப்படி ஒரு வால் இருந்தால்...’ என்று நினைத்தது மாடு.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மாட்டின் வால் ஆட்டுக்கும், ஆட்டின் வால் மாட்டுக்கும் வந்து விட்டது. இரண்டுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவை நின்று கொண்டிருந்தது கற்பக மரத்தின் அடியில் என்பதும், அதனால் அவை நினைத்தது நடந்துவிட்டது என்பதும் அவற்றுக்குத் தெரியவில்லை. கடவுள் சித்தம், நினைத்தது நடந்து விட்டது என்ற மகிழ்ச்சியுடன் இரண்டும் தனித்தனியே தத்தம் பாதையில் சென்றன.
மாடு வழியில் நிழலுக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கியது. மாட்டின் முதுகில் ஒரு சிறு புண் இருந்தது. ஒரு காக்கை மாட்டின் முதுகில் இருந்த புண்ணைத் தனது அலகால் குத்தியது. ஈக்கள் அதனுடன் போட்டி போட்டன. முன் பெல்லாம் தன்னுடைய பெரியவாலைச் சுழற்றி அவற்றை விரட்டும். இப்போது அதற்கும் வழியில்லை. சிறிய ஆட்டு வாலை அங்கும் இங்கும் அசைக்க முடிந்ததே தவிர, அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. வேதனையால் துன்புற்ற மாடு அங்கிருந்து வேகமாகக் காட்டுக்குள் மீண்டும் ஓடியது.
வயல்பகுதிக்குச் சென்ற ஆடு, சோளப்பயிரைப் பார்த்தது. ஆசையோடு வயலுக்குள் இறங்கித் தின்ன ஆரம்பித்தது. ஆட்டைப் பார்த்த வயல்காரன் தடியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தான். ஆடு அவனிடமிருந்து தப்பிப்பதற்காக முள்வேலியைத் தாண்டிக் குதித்தது. அதன் நீண்ட வால் முள்வேலியில் மாட்டிக் கொண்டதால் அதனால் தப்பிப் போக முடியவில்லை. ஓடிவந்த வயல்காரன் ஆட்டை நையப் புடைத்தான். எப்படியோ தன்னை விடுவித்துக் கொண்ட ஆடு தலைதெறிக்க மீண்டும் காட்டுக்குள் ஓடியது.
இரண்டும் அதே கற்பக மரத்தின் அடியில் மீண்டும் சந்தித்தன. ஒன்றின் அனுபவத்தை மற்றொன்றுடன் வேதனையுடன் பகிர்ந்து கொண்டன. இறுதியில் இரண்டும் ஒரே குரலில், ‘போதும், போதும் இந்த வால் மாற்றத்தினால் நாம் பட்டபாடு. அவரவர்களுக்கு அதது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் நிம்மதி!’ என்று சோகத்துடன் கூறின. உடனே அவற்றின் வால்கள் இடம் மாறி மீண்டன. ஆடும் மாடும் தமது வழியை நோக்கி நிம்மதியாகச் சென்றன.
சரி, குழந்தைகளே, அடுத்த மாதம் வேறொரு கதையுடன் வருகிறேன்.
சுப்பு தாத்தா |