குயில்களின் மௌனம் வீட்டுத் தோட்டத்தின் மூலையில், அடையாளம் தெரியவர, காகத்தின் கூட்டிலிருந்து வெளியேறத் தொடங்கும்போதும் இறகு முளைக்காக் குஞ்சுகள் எகிறி வெளிவிழ திறந்தவெளி பயமும் எதிர்காலமும் தரும் அஞ்சுதல் அலறலாக.
அதுவே இப்பருவத்தின் முதல் குரல்; பின் இணைதேடி விட்டு விட்டுச் சப்தமிட தொடர்கூவலாக திசைகள் பலவும் எதிரொலிக்க இரவென்றும், பகலென்றும் இணைதேடி அலைந்து புணர்ந்து பூரணமாகிறது.
மற்றபடி, எப்போதும் மௌனமாகவே செயல்படுகின்றன குயில்கள். ஜர்னலிஸம் வெற்றுத்தாளில் ஊரும் வரிகள் வரிசை எறும்புகளின் அசையா நிலை. இடையிடை புகைப்படம் முகம் மட்டும், சிறு சதுரம். பார்வைக்கு வேலை கூடும் பக்கம் நிரப்பப் பயன்படக்கூடும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தமோ லா.சு. ரங்கராஜனோ வெள்ளி முடி, லால்குடி தவிர வேறென்ன ஒற்றுமை?
படிப்பாளி அல்லது விமர்சகர், குற்றவாளி அல்லது பிடித்த காவலர் படம் உடனுருகில் நின்று தன்னுணர்வுடன் வினோதமாய் விழித்து - பின், எடுத்தவர், உள் இருப்பவர் புகைப்படம், சதுரத்தின் ஓரத்தில் படத்தின் ஒரு பக்கத்தில் சிற்றெழுத்தில் அவர் பெயர் ஏதோ ஒன்று; என்ன பெரிய மாற்றம்?
கற்பு விவகாரமா? பாலியல் பலாத்காரமா? விபசார 'அழகி' கைதா? வீட்டுக்குள் வன்முறையா? பலமணம் புரிந்த பரிதாப அழகியா? வரதட்சணைக் கொடுமைச் சாவா, எதிர்த்து நின்று தன் மணம் நிறுத்தியவளா?
சிவப்பாக, ‘எடுப்பாக', அழகாக, இளமையாவும் இருந்தால் மெத்தப் பளிச்சென்று
க்ளோஸப்பில்
'பொம்பளே படத்த போடுங்கய்யா பெருசா' எங்கள் ஜாதி மாத முதலில் அல்லது கடைசியில் இடைவிடாத லாரிகளின் ஓட்டம், காலியாக அல்லது தானிய மூட்டையுடன்.
அரசின் தானியக் கிடங்கு, அதன் அருகில் எங்கள் வீடு.
விடியற் கருக்கலில் ஆளரவமற்ற போதில் காக்கைகளும் குருவிகளும் தெருவில் தானியம் கொத்திப் பசியாறுகின்றன. பிளாஸ்டிக் பூக்கள் என்றும் மலர்ந்திருக்கும், இயற்கை பச்சையம், நீர், நிலம், ஏதும் வேண்டாம். இலை, மொக்கு, மலர் என்றில்லாமல் வீட்டுக்குள்ளும் வெளியிலும் அலுவலகத்திலும் அட்டையுடன் கட்டித் தொங்கவிட்டு அவ்வப்போது துடைத்து தூசிதட்டு, அன்றலர்ந்தது போல்.
******
கிருஷாங்கினி இதழ்களிலும் இணையத்திலும் பிரபலமான கவிஞர். இவரது பிற நூல்கள்: கானல் சதுரம் (கவிதைகள், 1998), சமகாலப் புள்ளிகள் (சிறுகதைகள், 1998), பறத்தல் அதன் சுதந்திரம் (பெண்கள் கவிதைகள், 2001), பரதம் புரிதல் (நாட்டியக் கட்டுரைகள் (2003), கிருஷாங்கினியின் கதைகள் (2003), அணங்கு (மாலதி மைத்ரியுடன் இணைந்து, கட்டுரைத் தொகுப்பு, 2004), தமிழில் பரதநாட்டியப் பாடல்கள் (2007), குருவே சரணம் (இசைக் கலைஞர்களுடன் சந்திப்பு, 2007). இவரது கணவர் அரவக்கோன் ஓர் ஓவியர். |