தற்போது பரவலாகப் பேசப்படும் மருத்துவத் துறை மாற்றங்களைப் பார்க்கலாம். வரப்போகும் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஏதேனும் ஒரு வகையில் மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மருத்துவர்கள் மருத்துவம் செய்கிறார்கள். பொதுமக்கள் மருத்துவத்தைப் பெறுகிறார்கள். ஆனால் மருத்துவத்தின் விலையை நிர்ணயம் செய்வதோ 'HMO' என்று சொல்லப்படும் மருத்துவக்காப்பீட்டு நிறுவனங்கள். இந்த இடைத்தரகர்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
நோயாளியின் பார்வையில்
- வசதி குறைந்தவர் மருத்துவக் காப்பீடு வாங்க முடியாது.
- மருத்துவக் காப்பீடு இருப்பினும் அதைப் பெறுவதிலுள்ள தடங்கல்கள் (limitations).
- வேலை செய்யும் நிறுவனத்தின் அளவு கோல்படி காப்பீட்டின் தரம் மாறுபடுதல்
- சுயவேலை செய்பவர்களால் மருத்துவக் காப்பீடு வாங்க முடியாத நிலை.
- பணி ஓய்வு பெறுவோர்களின் எண் ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவப் பராமரிப்புச் செலவு அதிகமாகும் என்ற கணிப்பு.
- வேலையும் செய்யாமல், வசதியும் இல்லாமல் மாநில உதவிக்காப்பீடு (Medicaid) பெற்றவர்களால் செலவு அதிகரித்தல்.
- அமெரிக்காவுக்கு வரும் நமது பெற்றோர் கள் போன்ற பயணிகளுக்குக் காப்பீடு இல்லையெனில் மருத்துவம் பார்க்க இயலாத நிலை.
- காப்பீடு இருந்தாலும் அதில் இருக்கும் பல தரங்களுக்கு ஏற்ப மருத்துவர்கள் மாறுபட்ட தரத்தை வழங்கும் பரிதாபம். குறிப்பாக, முதன்மை மருத்துவர்கள் பலர் 'Medicare' காப்பீடு உள்ளவர்களைப் புதிய நோயாளிகளாக ஒப்புக் கொள்வது இல்லை. 'Self Pay' அல்லது 'Medicaid' இருப்பவர்களையும் பல மருத்துவர்கள் பார்க்க ஒப்புவதில்லை.
- வீட்டுக்கு அருகே மருத்துவர் இருந்தாலும், அவர்கள் தங்கள் காப்பீட்டை ஏற்றுக் கொள்வார்களா என்ற நிச்சயமின்மை.
- ஓர் ஊரைவிட்டு மற்றோர் ஊரூக்கு வேலை குறித்தோ விடுமுறையிலோ சென்றால் சில காப்பீடுகள் 'Out of State' வசதியுடன் இருப்பதில்லை.
- முதன்மை மருத்துவரின் ஒப்புதல் இன்றி சிறப்பு மருத்துவர்களைக் காண இயலாத நிலை. இதனால் சிகிச்சை தாமதமாகும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.
இப்படி எத்தனையோ...
மருத்துவர்களின் பார்வையில்
- மருத்துவம் வணிகமாக மாறிவருவதால், மனசாட்சி உறுத்தினாலும் வரவு செலவைச் சமப்படுத்தும் முயற்சியில் தவிக்கின்றனர்.
- காப்பீடு இல்லாதவர்களை ஏற்றுக் கொண்டால் நிதிநிலைமை மோசமாகும் அபாயத்தில் சில தனியார் மருத்துவ நிறுவனங்கள் அல்லாடுகின்றன.
- காப்பீடுகள் ஈடுசெய்யும் (reimbursement) தொகை குறைந்து கொண்டே வருகிறது.
- மருத்துவத் துறை இயந்திரங்களின் விலை அதிகரித்து வருகின்றன.
- மருந்துகளின் விலை கூடுவதால் நோயாளி கள் பலர் முறையாக மருந்து உட்கொள்வ தில்லை. இதனால் அவர்களுக்கு ஆலோசனை கூறும் நேரம் அதிகமாகி இருக்கிறது. ஆனால் காப்பீட்டு நிறுவனங் கள் மருத்துவர்கள் நோயாளிகளுடன் செலவழிக்கும் நேரத்தையும் கட்டுப் படுத்துகின்றன. குறிப்பாக, முதன்மை மருத்துவ அலுவலகத்தில், புதிய நோயாளிக்கு 30 நிமிடங்களும், பழைய நோயாளிக்கு 15 நிமிடங்களும் அளிக்கப் படுகின்றன. உடல் பரிசோதனைக்கு 45 நிமிடங்கள் கொடுக்கப்படுகின்றன.
- ஒரு சிலர் மருத்துவமனை சார்ந்த வேலையில் சம்பளத்துக்கு உழைக்கும் போது, மருத்துவமனைக் கட்டுப்பாடுகளின் கீழ் வேலை செய்கின்றனர்.
- தேவைப்பட்ட நேரத்தில் சிறப்பு மருத்துவர் களுக்குப் பரிந்துரைக்க முடிவதில்லை.
- இவை எல்லாவற்றையும் மீறி ஒரு தனிப் பட்ட மருத்துவர் காப்பீடு இல்லாதவர் களைக் கண்காணிக்க முன்வந்தாலும், தகுந்த முறையில் சிகிச்சை செய்ய முடியாத நிலை. உதாரணமாக, காப்பீடு இல்லாத நோயாளிக்கு அறுவை சிகிச்சை வேண்டும் என்றாலோ, ஒரு ஸ்கேன் (scan) எடுக்க வேண்டும் என்றாலோ அதைச் செய்ய யாரும் முன்வராத நிலை.
- மருத்துவமனையில் சேர்ப்பதற்கும், விடுவிப்பதற்கும் கூட இடைத் தரகர்கள் பல நியதிகளை நிர்ணயம் செய்துள்ள கொடுமை.
- மருத்துவப்பள்ளிகளில் கற்க அதிகச் செலவு ஆவதால், பல மருத்துவர்கள் முதன்மை மருத்துவம் செய்யத் தயங்கு கின்றனர். இதனால் சிறப்பு மருத்துவர் கள் அதிகமாகவும் முதன்மை மருத்து வர்கள் குறைவாகவும் உள்ளனர்.
- காப்பீட்டுக்கான காகித வேலை அதிக மாகி வருவதால், மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பதை விடவும் குமாஸ்தா தொழில் அதிகமாகச் செய்யும் பரிதாபம்.
இதற்கிடையில் உலக மருத்துவம் முன்னேறி வருகிறது. 'Medical tourism' பிரபலமாகி வருகிறது. இங்கு செய்யும் ஸ்கேன்களை இந்திய மருத்துவர்கள் கற்றுக்கொண்டு விட்டனர்.
மருத்துவத் துறையிலும் outsourcing அதிகமாகி வருகின்றது. உலகத்திலேயே முன்னேறிய நாடாகிய அமெரிக்கா சில கணக்கெடுப்பு களில் மற்ற பல நாடுகளைவிடப் பின்தங்கி இருக்கிறது. இது கவலைக்கிடமாக உள்ளது. இந்த வரைபடங்களைப் பார்த்தால் அது விளக்கும்.
- மருத்துவத்துறை உடைந்து விட்டது என்று கைவிடாமல், தத்தளிக்கும் நிலையாக எண்ணிச் சில விடைகளைக் காண முயற்சிப்போம்.
- Universal Healthcare - எல்லோருக்கும் மருத்துவம் கிடைக்கும் வழி செய்தல்.
- மருத்துவத் துறையின் விலையுயர்வைக் குறைக்க வேண்டும். குறிப்பாக மருந்து களின் விலையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
- தேவையில்லாத பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்வது குறைய வேண்டும்.
- வருமுன் காப்பதன் அவசியத்தை எல்லோரும் உணர வேண்டும்.
- முதன்மை மருத்துவர்களின் எண் ணிக்கை குறைந்தால், செவிலியர்கள் மூலம் உதவிபெற வகைசெய்ய வேண்டும்.
- 'Home care' - வீட்டிலே மருத்துவம் செய்யும் முறைகள் பற்றி ஆய்வுகள் செய்ய வேண்டும்.
- நோய் முற்றிய நிலையில் இருப்பவர் களுக்குச் செலவிடும் பல இலட்சங் களில் ஒரு பங்கை நோய்த்தடுப்பு முயற்சிக்கு மடைதிருப்ப வேண்டும்.
- மருத்துவத் துறையில் தரப் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு (Quality and Patient Safety) ஆகியவற்றின் முக்கியத்துத்தை அனைவரும் உணர வேண்டும்.
- ஸ்ரீ ராமபிரானுக்கு அணில் செய்த சேவை போல ஒவ்வொருவரின் முயற்சியாலும் மருத்துவத்துறை நிமிர வாய்ப்புகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு www.commonwealthfund.org என்ற வலைதளத்தைப் பாருங்கள்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |