கரிச்சான் குஞ்சு
தமிழில் அறிவுஜீவித்தனமான தத்துவ விசாரணையில் ஈடுபடும் எழுத்துத் திறனைக் கொண்டிருந்தவர் கரிச்சான் குஞ்சு. இவர் சிறுகதை, நாவல், கட்டுரை, மொழி பெயர்ப்பு எனப் பல தளங்களில் சிறப்புற இயங்கியவர்.

கரிச்சான் குஞ்சு என்று அறியப்பட்ட ஆர்.நாராயணசாமி ஜூலை 10, 1919ல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தவர். பெங்களுரில் 8 வயது முதல் 15 வயதுவரை வடமொழியும் வேதமும் பயின்றார். பின்னர் மதுரை-ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும் வடமொழியும் கற்றார். சென்னை, மன்னார் குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். கரிச்சான் எழுத்தாளர்களான கு.ப.ராஜகோபாலன், தி. ஜானகிராமன் போன்றவர்களுடன் நெருக்கமாக ஊடாடி வந்தவர். ஆரம்பத்தில் ஜானகிராமனின் தூண்டுதலால்தான் கரிச்சான் தமிழை எழுத்துக் கூட்டிப்படித்து தமிழின் வளத்தை முழுமையாக அனுபவிக்கும் திறன் படைத்தவராக வளர்ந்து வந்தார்.

ஜானகிராமன், கு.ப.ரா. போன்றோரின் எழுத்துக்கள் மணிக்கொடியில் வர ஆரம்பித்தன. இதைப் படித்து வந்த கரிச்சான் இவர்களைப் போலத் தானும் எழுத வேண்டுமென ஆசைப்பட்டார். இதற்கான துணிச்சலை ஜானகிராமன் வளர்த்தார். அத்துடன் கு.ப.ரா. நவீன இலக்கியத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கான திறந்த உரையாடல்களை மேற்கொண்டு வந்தார். இதனால் கு.ப.ரா.வைச் சுற்றி எப்போதும் எழுத்தாளர்கள் ஒன்று கூடி வருவார்கள். அவ்வாறு கூடியவர்களாக எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, சாலிவாகனன், பிச்சமூர்த்தி போன்றோரைக் குறிப்பிடலாம்.

1940ல் ஏகாந்தி என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான 'மலர்ச்சி' கலைமகள் இதழில் வெளிவந்தது. கரிச்சான் கு.ப.ரா.வோடு நெருங்கிப் பழகிவந்தவர். அவரது ஆளுமைக்கும் உட்பட்டு வந்தார். கு.ப.ரா. மீது கொண்ட அன்பினால் கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். கரிச்சான் 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் 'பசித்த மானிடம்' என்ற ஒரு நாவலையும் எழுதியுள்ளார். இரு குறுநாவல்களும் நூல்வடிவம் பெற்றுள்ளன. இரு நாடகத் தொகுதிகளையும் எழுதியுள்ளார். தவிர, 'கு.ப.ரா.' (1990), 'பாரதி தேடியதும் கண்டதும்' (1982) போன்ற கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார். மொழிபெயர்ப்புத் துறையிலும் அதிகம் ஈடுபட்டுள்ளார்.

தத்துவம் சார்ந்த உரையாடல்களில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். இதுவே இவரது ஆளுமையைத் தீர்மானித்துள்ளது. வெகுசன ரசனைக்கேற்ப எழுதக் கூடிய ஆற்றல் கொண்டவராகக் கரிச்சான் சிறக்க முடியவில்லை. ஜானகிராமனிடம் வெளிப்பட்ட சாதாரண உணர்ச்சிமயமான சித்திரிப்பு கரிச்சானிடம் வெளிப்படவில்லை. இதனை ஆரம்பத்திலேயே கு.ப.ரா. கணித்திருந்தார். கரிச்சானிடம் வெளிப்படையாக இதைக் கூறியும் உள்ளார். 'நீங்கள் அறிவின் தீட்சண்யம் நிறைந்த கதைகளைத்தான் எழுதக் கூடும். உணர்ச்சிமயமான சித்திரம் செய்ய ஜானகிராமனால் முடியும். உமது அறிவின் கூர்மை உம்மை உணர்ச்சி வசப்பட விடாது.' என்றார் இதில் உண்மை இல்லாமல் இல்லை.

'பசித்த மானுடம்' நாவல் ஒரு வித்தியாசமான அனுபவத்தை நமக்குத் தருகிறது. வாசக அனுபவம் மனித அனுபவத்தின் வேறுபட்ட திரட்சிகளை நோக்கி முன் நகர்த்துகின்றது. வயிற்றுப்பசி, அதிகாரப்பசி, காமப்பசி என பல விதமான பசிகளின் உந்துதலால் செலுத்தப்படும் மனித வாழ்வு கடைசியில் எதில் நிறைவு அடைகின்றது என்ற கேள்வியை நோக்கிச் செல்வது இந்த நாவலின் சிறப்பு. மனிதப் பக்குவம் சார்ந்த வினைப்பாடுகளின் வழியே வாழ்க்கையின் அர்த்தம் அர்த்தமின்மை பற்றிய தேடலாகவும் சுய விசாரணையாகவும் மீட்சிபெறுகிறது. அனுபவத்தின் முழுமைக்கான வெளியைக் கட்டமைக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் நாவல் பசித்த மானிடம் எனலாம். இந்நாவலில் நுட்பமான பல விடயங்களை இயல்பாகக் கையாளப்படுகிறது.

இந்த நாவல் தமிழில் முக்கியமான நாவல்களில் ஒன்று எனப் பலராலும் பல சந்தர்ப்பங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்த நாவல் பேசப்பட்ட விவாதிக்கப்பட்ட அளவுக்கு இவரது சிறுகதைகள் அதிகம் பேசப்படவில்லை. அதுபோல் இவரது மொழிபெயர்ப்பு சார்ந்த முயற்சிகளுக்கும் முக்கியமான இடமுண்டு. அவை சார்ந்த உரையாடலும் எமக்கு முக்கியம்.

இவரது சிறுகதைகள் வித்தியாசமாகத்தான் உள்ளன. இசை ஞானத்தையும் பெண்களின் மனநிலையைச் சித்தரிக்கும் உத்தியையும் (இது கு.ப.ரா.விடமிருந்து பெற்றுக் கொண்டது) நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். அப்பா அம்மா விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் தங்களுடைய கற்பனைப் பாத்திரங்களை உண்மையென நம்பித் தீவிரமாகச் செயற்பட்டதன் விளைவாக அந்த விளையாட்டுக் குடும்பம் சிதைந்து போகும் விபரீத நிலையைக் 'குடும்பச் சிதைவு' என்னும் கதையில் நடப்பியல் பாணியில் எழுதியுள்ளார். இவ்வாறு வித்தியாசமான பாத்திரங்கள், கதைக்களங்கள், கதையாடல் மூலம் சுய விசாரணை இவரது படைப்பில் இழையோடுகிறது.

இவரது சிறுகதைகள் மீதான வாசிப்பு கு.ப.ரா., ஜானகிராமன், எம். வெங்கட்ராமன் போன்ற எழுத்தாளர்களது ஆளுமைகளுடன் ஒப்பிடக்கூடிய தனித்துவமான பண்புகளை வெளிக்காட்டும். இவரது கூர்மையான விசாரணையுடன் கூடிய யதார்த்த சித்தரிப்புசார்ந்த தன்மைகளால் வாசக அனுபவம் மேலும் பண்படும்.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com