வாஷிங்டன் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் நடத்தும் 'வள்ளுவர் கூறும் ஆளுமை'
ஜூன் 18, 2006 அன்று வாஷிங்டன் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் தனது திருக்குறள் ஆய்வுக்கூட்டங்களின் ஒரு முக்கிய மைல்கல்லாக 'வள்ளுவர் கூறும் ஆளுமை' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தவிருக்கிறது. இவர்கள், பொருட்பாலில் அரசு இயலின் 39 முதல் 63 வரையான அதிகாரங்களைப் படித்து முடித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் 18-ஆம் நாள் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கொலம்பியா நகரத்தில் இந்தக்
கருத்தரங்கதை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். திருக்குறள் ஆராய்ச்சியாளரும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவருமான பேரா. தி.முருகரத்தனம் 'வள்ளுவர் கூறும் அரசு' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றுவார். மற்றும் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்து சொற்பொழிவாற்ற அறிஞர் பலர் முன்வந்துள்ளனர். இந்தச் சமயத்தில், திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் கவிதை
நடையில் விளக்கம் எழுதிய பேரம்பலம் அவர்களின் 'A Path to Purposeful Living' என்ற நூல் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்குப் பார்க்க: www.Thirukkural2005.org


தமிழ் இலக்கிய ஆய்வு கூட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக வாஷிங்டன் வட்டாரத்தில் உள்ள தமிழர்கள் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற ஒரு அமைப்பை வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் கிளை அமைப்பாக உருவாக்கி நடத்தி வருகிறார்கள். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் கருத்துக்களை ஆராய்ந்து அறிய முற்படுவதே இந்த அமைப்பின் நோக்கம். முதலாவதாகத் திருக்குறளை முறையாகப் படித்து, அதன் பல்வேறு பரிமாணங்களை விவாதித்து வருகிறார்கள். கூட்டங்கள் மாதம் இரண்டு முறை மேரிலாந்தில் உள்ள Howard County நூலங்களில் நடைபெறுகின்றன.

பயிலும் முறை

இங்கே திருக்குறளைப் பயிலும் முறை சிறப்பானது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு அதிகாரங்களை விவாதிக்கிறார்கள். குறட்பாக்களில் உள்ள அருஞ்சொற்களுக்கு அகராதிகளின் மூலம் பொருள் கண்டுபிடித்து, உரையின் உதவி இல்லாமல் பொருள்காண முயற்சிக்கிறார்கள். குறளுக்குப் பொருள் தாமே கண்டபின், மற்ற உரையாசிரியர்கள் என்ன பொருள் கூறுகிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இவர்கள் பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப் பாவாணர், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, இளங்குமரனார், மு.வரதராசனார், மோகனராசு, சாமி சிதம்பரனார், தமிழண்ணல், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா, சுஜாதா, வ.சுப. மாணிக்கம், வ.வே.சு. ஐயர், யோகி சுத்தானந்த பாரதியார், திருச்சி வரதராசனார், ஜி.யு.போப், முனைவர். சேயோன், ந.சுப்பு ரெட்டியார், பேராசிரியர் சாரங்கபாணி, எஸ்.எம். டயஸ் மற்றும் பலருடைய உரைகளையும் நூல்களையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து, குறளுக்குப் பொருள் காண்பதோடு, தங்களுடைய வாழக்கை அனுபவத்தோடும் குறளை ஆய்வு செய்கிறார்கள். ஒவ்வொரு குறளிலும் வள்ளுவர் என்ன கூறுகிறார் என்றும் மற்ற குறட்பாக்களில் கூறப்படும் கருத்துக்களுடன் முரண்பாடுகளும் உடன்பாடுகளும் யாவை? என்பதை ஆராய்கிறார்கள். பின்னர் தமது கருத்துக்களை ilakkiya_vattam@yahoogroups.com என்ற இணைய மடற்குழுமத்தில் வெளியிடுகிறார்கள்.

பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு

இவர்கள் ஒழுங்கு செய்த பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு ஜூலை 2005ல் வாழிங்டன் வட்டாரத்தில் சிறப்பாக நடைபெற்றது. முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் தலைமையில் நடந்த இம்மாநாட்டில் சுமார் முன்னூறு திருக்குறள் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வழங்கினார்கள். மேற்கத்திய நாடுகளில் திருக்குறளுக்கென்று நடத்தப்பட்ட முதல் பெரிய ஆராய்ச்சி மாநாடு இதுதான். மாநாட்டை ஒட்டி, வாஷிங்டன் முருகன் ஆலயத்தில், திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த மாநாட்டைப் பற்றிய செய்திகளை www.Thirukkural2005.org என்ற வலைதளத்தில் காணலாம்.

2005 செப்டம்பர் மாதம், திருக்குறளின் முதல் 38 அதிகாரங்கள் அடங்கிய அறத்துப்பாலைப் படித்து முடித்ததையொட்டி 'அறத்துப்பால் - ஒரு மீள் பார்வை' என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடத்தினர்.

குறள்வழை வாழ்க்கையைக் கைக்கொள்ளவும், இளைய சமுதாயத்துக்கு எடுத்துச் செல்லவும் வாஷிங்டன் குறள் ஆர்வலர் செய்யும் முயற்சி பாராட்டத் தக்கது.

வாஷிங்டன் வட்டார தமிழ் இலக்கிய வட்டம்

© TamilOnline.com