மார்ச் 8, 2008 அன்று நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் தனது சேவைப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு சிறப்பான பல்சுவை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நாஷ¤வா மற்றும் மேன்செஸ்டரில் உள்ள அன்ன சத்திரங்கள் வழியே ஏழைகளுக்குத் தொடர்ந்து மாதம் ஒருமுறை உணவளிக்க இந்த நிதி பயன்படுத்தப்படுவதாகச் சேவைப் பிரிவுத் தலைவர் திருமதி பரீந்தர் ஆலுவாலியா தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
நேஹா பாரிக் அவர்களின் மாணவிகளான லாஸ்யா திலகர், மஹிமா பலராஜ் ஆகியோரின் பரதநாட்டியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் ஜோதி ஷர்மா பஜனைப் பாடல்களைப் பாடினார். சந்தியா ஸ்ரீதரின் மாணவிகள் அம்ரிதா மங்கலாத், ரோஷினி நரசிம்ஹன் ஆகியோர் பாடிய பஜனைப் பாடல்களும், அபர்ணா பாலாஜி யின் மாணவி மேக்னா சந்திராவின் கீர்த்தனமும் வெகு சிறப்பு. அக்ஷய் நவலாடி இவர்களுடன் தபலா வாசித்தார்.
உருளை ஸ்கேட்டிங் சாம்பியன் லக்ஷ்மி மானஸாவின் பாலிவுட் கலவையிசைக்கான ஸ்கேட்ஸ் நடனம் அசத்தல். தேசிய, பன்னாட்டு அளவில் இவர் ஸ்கேட்டிங் போட்டிகளில் 789 தங்கப் பதக்கங்கள் பெற்றிருக்கிறார் என்பதோடு 2500 ஸ்கேட்டிங் நடன நிகழ்ச்சிகளையும் வழங்கியிருக்கிறார். ஹிலரி கிளின்டன், அப்துல் கலாம் ஆகியோர் முன்னிலையில் தாம் ஆடியதை மிகப் பெருமையோடு இந்த 23 வயது நங்கை நினைவுகூர்கிறார். இவர் யுகாதி புரஸ்கார் விருது பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ரோஹித் பாம்பியின் 'பாஸ்டன் பாங்க்ரா' குழுவினர் ஆடிய பாங்க்ரா நடனம் வெகு அமர்க்களம். லேகா நாயர் பாடிய 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ' நெஞ்சைத் தொட்டது. மராட்டி தொடர் நடனம், பாலிவுட் சினி நடனம் ஆகியவை கலகலப்பூட்டின. பரத நாட்டியத்தையும் கதக்கையும் இணைத்து ஜாஸ்மின் ஷா வழங்கிய நடனம் வியக்கத் தக்கதாக இருந்தது. 'பஜாமா டைம்' பாடலுக்கு மதுமிதா ஸ்ரீராம் ஆடிய டேப்-டான்ஸ் (Tap dance) எல்லோர் கால்களையும் தாளம்போட வைத்தது. மங்கலாத் சகோதரிகளின் பாலிவுட் நடனம், சுசேதா தமரகௌரியின் பியானோ இசை, ஆடையலங்கார அணிவகுப்பு, 'சிறந்த உடையணிந்த ஜோடி' போட்டி, நாட்டுப்புற நடனம் ஆகியவையும் நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தன.
சங்கத்தின் இளைஞர் குழாத் தலைவர் பிரதீக் கல்யாணபு நிகழ்ச்சியைத் தொகுத் தளித்தார். நிகழ்ச்சிப் பொறுப்பாளர் உஷா துவாரகாநாத் திட்டமிட்டு நன்கு நடத்தி யிருந்தார். சங்கத்தின் செயலர் டாக்டர் தேஜ் தாக்கர் நன்றி நவின்றார்.
ரமா ஸ்ரீராம் |