சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மத்திய அமைச்சர் ராஜாவுடன் ஒரு சந்திப்பு
மார்ச் 21, 2008 அன்று மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா அவர்களை வரவேற்றுச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி ஒன்றை வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. இந்திய சமுதாய மையத்தில் (India Community Center–www.indiacc.org) இந்நிகழ்ச்சி நடந்தேறியது. சான் பிரான்சிஸ்கோ பகுதிக்கு வரும் இந்திய அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோருடன் அளவளாவி, இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பற்றி அமெரிக்கத் தமிழர்கள் அறிந்து கொள்ளுமுகமாக, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் இந்தியத் துணைத் தூதரகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது.

மன்றச் செயலாளர் மகேஷ் தலைவர் ஜெயவேல் முருகனை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அமைச்சர் ராஜா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் B.S. பிரகாஷ், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் நம்பியார், தூதரக அதிகாரிகள் ஆகியோரைத் தலைவர் மன்றத்தின் சார்பாக வரவேற்றார். அவரது உரையில் அமைச்சர் ஆற்றிவரும் அரும்பணியைப் பாராட்டினார்.

அடுத்துப் பேசிய அமைச்சர், கடந்த சில தினங்களாகப் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சந்தித்து, அது குறித்தே சிந்தித்து, பேசி வந்த தனக்கு தமிழ் குறித்துப் பேச வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் தமிழர் அல்லாத பலர் இருந்தமையால் நிகழ்வு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்தது. மேலும் அவர், 'பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், பண்பாட்டுப் படையெடுப்பு மற்றும் பிற மொழிகளின் படையெடுப்பையும் மீறி இன்றும் வியக்கும் வகையில் வளர்ந் துள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழ் அழிந்துவிடும் என்று கூறிய அனைவரையும் வெற்றி கொண்டு இன்றும் சீரிய மொழியாக உள்ளது' என்று பெருமையுடன் கூறினார். தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்த்து வரும் தமிழ் மன்றத்தைப் பாராட்டி, ஒவ்வொரு திங்களும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடித் தமிழ் வளர்க்க வேண்டும் என்னும் தனது ஆவலைத் தெரிவித்தார்.

உரையை அடுத்து கேள்விகளுக்கு விடை யளித்தார். முக்கியமாக இந்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து தகவல் தொழில் நுட்பத் துறைக்குப் பல உதவிகளையும் மானியங்களையும் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். தனது அரசியல் வாழ்க்கை குறித்து விரிவாகப் பதிலளித்தார். அமெரிக்கா வில் தற்பொழுது மையம் கொண்டிருக்கும் 'பொருளாதாரச் சறுக்கல்' இந்தியாவை பாதிக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழர் அனைவரும் தமிழிலேயே பேசி தமிழ் வளர்க்க உதவ வேண்டும் என்றும் முடிவாகக் கேட்டுக் கொண்டார்.

மன்றத் தலைவர் அமைச்சர் அவர்களுக்கு விருது ஒன்று அளித்துச் சிறப்புச் செய்தார். முன்னாள் தமிழ்மன்றத் தலைவர் சிவா சேஷப்பன் நன்றியுரை கூற, விழா நிறைவெய்தியது.

உறுப்பினராகவும் நிகழ்ச்சிகளில் பங்கேற் கவும் பார்க்க வேண்டிய இணையதளம்: www.bayareatamilmanram.org

சிவா சேஷப்பன்

© TamilOnline.com