2008 ஏப்ரல் 26,27 நாள்களில் பெர்க்கலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பீடத்தின் நான்காவது மாநாடு 'ஆறு' என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது. தெற்காசியத் துறைத் தலைவர் பேரா. அலெக்ஸ் ராஸ்பார்ட் மாநாட்டைத் தொடங்கி வைப்பார். பேரா. ராக்கா ரே, தமிழுக்குப் பெரும்பணியாற்றிவரும் வெற்றிச்செல்வி (காண்க: இந்த இதழின் நேர்காணல்) அவர்களைப் பாராட்டிப் பேசுவார். ஆறு பற்றியும், வரலாறு, கல்வெட்டு, இலக்கியம் என்ற தலைப்புகளிலும் பேராசிரியர்கள் உரையாற்றுகிறார்கள்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியை ஆன் மோனியஸ் காவிரி ஆற்றின் வரலாறு பற்றி உரையாற்றுவார். அகத்திய முனிவர் வரவழைத்த காவிரி, சோழர் காலத்தில் வளம் பெருக்கி மக்களை வாழ்வித்த காவிரி, சிவபிரானுக்கு அபிஷேகம் செய்ய நீர் அளித்த காவிரி, சமண, பௌத்த இலக்கியங்களை அலங்கரித்த காவிரி, கரையெங்கும் கோவில்களை வளர்க்கும் காவிரி என்று காவிரியாற்றின் பல செய்திகளைக் கூறுகிறது இவரது கட்டுரை.
மெக்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியை ஸ்ரீலதா ராமன், சுவாமி ராமலிங்க அடிகள், சைவத்தை எவ்வாறு புதுமுறையில் காட்டி யுள்ளார் என்பதைத் தமது உரையில் விளக்குகிறார். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் ஆனந்த் பாண்டியன் நீர் எவ்வாறு மனித வாழ்க்கையை வளப்படுத்து கிறது என்பது பற்றி மட்டுமல்ல ஆறு மனிதர் களின் அன்றாட வாழ்வில், அரசியல் பேச்சு களில், வயலில் வேலை செய்வோரின் உயிர் களில் தமிழர் பண்பாட்டில் பங்குபெறுகிறது என்பதை விளக்குகிறார்.
ஓபர்லின் கல்லூரிப் பேராசிரியை பாலா ரிச்மன், சதாசிவ அண்ணாமலை அவர்களின் இரு நாடகங்கள் பற்றிப் பேசுவார். அவை 'மயில்ராவணன் கதை', 'ஆறுஅடி நான்கு கைகள்' என்பவை ஆகும். இவர் இந் நாடகங்கள் மக்களிள் மனதைக் கவர்ந்த முறை பற்றிக் கட்டுரையில் விளக்கியுள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரி யர் வாசு ரங்கநாதன் கணினி மூலமாகத் தமிழ்ச்சொல் ஆராய்ச்சி எவ்வாறு நடத்த முடியும் என்பது பற்றி விளக்குவார். ஆறு என்ற சொல் எப்போது, எந்தப் பொருளில், எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, இதுபோல் மற்றச் சொற்கள் எவ்வாறு வளர்ந்தன் என்பவற்றை இவர் உரை ஆய்வு செய்யும்.
யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் அண்ணாமலையின் உரை தற்காலத் தமிழில் சொற்கள் பயன்படும் முறை, புதுச்சொற்கள் புகும்முறை, அவற்றின் பொருள் இவைபற்றி ஆய்வு செய்யும். ஒரு சொல்லுக்கு ஒரு காலத்தில் பல பொருள்கள் வரலாம். அதே சொல்லுக்கு ஒரு பொருள் மட்டும் ஒரு காலத் தில் வரலாம். பலவிதங்களில் இடத்திற்கு ஏற்ப ஒரே சொல் பெருள் தரலாம். இப்படிச் சொற்களின் வரலாற்றை ஆராய்கிறது.
கிரண் கேசவமூர்த்தி, எலிசபெத் சேகரன், ஏமி அலோக்கோ என்ற மூன்று மாணவர் களும் மாநாட்டில் கலந்து கொள்ளுகிறார்கள்.
லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரிஸ்பன் பிரான்டிட் கோவில்களைப் புதுப்பிக்கும் முறைபற்றிப் பேசுவார். 10ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை பல்லவர், சோழர் காலத்தில் எவ்வாறு கோவில்கள் கட்டப்பட்டன, எவ்வாறு கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன என்பது பற்றி உரையாடுவார். இன்றும் தமிழ்நாட்டில் கோவில்கள் கட்டப்படுவதும், புதுப்பிப்பதும் பெரும்பணியாக நடந்து வருகிறது. இத் தொடர்பு பற்றி உரையாடுகிறார் இப் பேராசிரியர்.
கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகப் பேராசிரியை லெஸ்லி ஓர் அவர்களின் கட்டுரை 10ஆம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை செதுக்கப் பட்ட கல்வெட்டுகள் பற்றிய ஆய்வு ஆகும். மதம் பற்றிய கருத்துகள், சிலைகளை மாற்றம் செய்தல், கோவில்களைப் புதுப்பித்தல், முன் இருந்த கல்வெட்டுகளின் செய்திகளை மாற்றி புதுக்கல்வெட்டுகள் எழுதுதல் - போன்ற செய்திகளை இக்கல்வெட்டுகளில் காண்ப தில்லை. மன்னர்களின் புகழ், போர், ஈகை என்று பலவற்றை விளக்கும் இக் கல்வெட்டுகள், பிற கருத்துகளை ஏன் சொல்லவில்லை என்று ஆய்கிறார் இப் பேராசிரியை.
கிரண் ஜெயகாந்தன் புதினம் பற்றியும், எலிசபெத் சங்ககாலப் பாடல்களைப் பற்றியும், ஏமி காவிரிக் கரையில் பெண்கள் கொண்டாடும் பண்டிகைகள் பற்றியும் உரையாடுவார்கள்.
ஹோலியோக் கல்லூரிப் பேரா. இந்திரா பீட்டர்சன், பேரா. ஆனந்த் பாண்டியன் ஆகியோர் இம்மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரைகளின் கருத்துக்களைத் தொகுத் தளிப்பார்கள். பின்னர், மற்ற பேராசிரியர் களும் மாணவர்களும் பின்னூட்டம் தருவார்கள்.
தமிழ், தமிழ் நாட்டைப் பற்றி ஆய்வு செய்யும் பேராசிரியர்களின் கருத்துக்களைக் கேட்டுமகிழ இம்மாநாடு வழிவகை செய்கிறது. தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியார் கனவை நனவாக்கும் ஒரு சிறு முயற்சிதான் இம்மாநாடு.
பேரா. கௌசல்யா ஹார்ட் |