கல்லூரி முதல்வர் ஆன பியூன்
நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர் ஒரு பியூன்; இன்றைக்கு அவர் ஒரு கல்லூரியின் முதல்வர். அவர்தான் நிர்ஜாரினி சக்ரவர்த்தி.

மேற்கு வங்கத்தில் உள்ள நைஹாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்ஜாரினி. மிக வறுமையான குடும்பம். பனிரெண்டாம் வகுப்போடு படிப்பு நின்றுபோனது. தான் படித்த பள்ளியிலேயே பியூனாக வேலைக்குச் சேர்ந்தார். ஆனாலும் மேலே படிக்கவேண்டு மென்ற வெறி இருந்துகொண்டே இருந்தது.

வேலை பார்த்துக் கொண்டே பட்டப்படிப்பத் தொடந்தார். அறிவியல் பட்டம் பெற்றதும் ஆசிரியர் பணி கிடைத்தது. தொடர்ந்து முதுகலைப் பட்டத்தை முடித்தார். பத்து ஆண்டுகளில் கல்லூரி விரிவுரையாளராக உயர்ந்தார். ஆனாலும் அவரது தாகம் அடங்க வில்லை. முனைவராக ஆராய்ச்சியை மேற் கொண்டார். டாக்டர் நிர்ஜாரினி சக்ரவர்த்தி இன்று நைஹாத்தியில் உள்ள ரிஷி பங்கிம் சந்திரா மகளிர் கல்லூரியின் முதல்வர்.

அவரது உழைப்பும் விடாமுயற்சியும் அவரைப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. 54 வயதாகும் நிர்ஜாரினி 'பியூனாக வேலை செய்ததை நான் மட்டமாக நினைக்க வில்லை. தற்போது கல்லூரி முதல்வராக இருப்பதையும் பெரிய சாதனையாகக் கருதவில்லை. இரண்டு பணிகளையும், முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தேன். கடின உழைப்பு ஒன்றுதான் நான் எப்போதும் விரும்புவது' என்கிறார். மெய்யாகவே கீதை சொல்லும் கர்மயோகம் இதுதானே. 'இந்தியா வில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் கல்வியறிவு பெறவேண்டும் என்பதே எனது ஆசை, கனவு, லட்சியம்’ என்றும் கூறுகிறார்.

அரவிந்த்

-

© TamilOnline.com