வீட்டை விட்டு ஓடி வந்தோர் வங்கி
சிறுவர்களுக்காகச் சிறுவர்களே நடத்தும் வங்கி ஒன்று டில்லியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவர்களால் நடத்தப்படுகிறது இந்த வங்கி. ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டினாற் போல இருக்கிறதே என்று நினைப்பவர்கள் மேலே படியுங்கள். வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவர்கள் மீது அக்கறை கொண்ட சில சமூக சேவை நிறுவனங்கள், அவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கு உணவு, உறைவிடம் போன்ற வசதிகளைச் செய்து தருகின்றன. கட்டாயக் கல்விப் பயிற்சியையும் அளிக்கின்றன. பயிற்சி முடிந்த பின்னர் வேலைகளைச் செய்ய ஊக்குவிக்கப் படுகின்றனர். ஆனால் இவர்கள் சம்பாதிப் பதில் பெரும் பகுதியை திரைப்படம் பார்க்கவும் வீண் கேளிக்கைகளிலும் செலவிட்டு விடுகின்றனர். காரணம் அவர் களுக்குச் சேமிக்கும் வசதியும் வழக்கமும் இல்லாததுதான். எனவேதான் இந்தக் 'குழந்தைகள் மேம்பாட்டு வங்கி’ தொடங்கப் பட்டது. இந்திய தேசிய நிதியத்தின் இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் துவக்கப் பட்டுள்ள இவ்வங்கி, பழைய டில்லி ரயில் நிலையத்தில் உள்ள ஒரு சிறு அறையில் செயல்பட்டு வருகிறது.

மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே செயல்படும் இந்த வங்கியின் மேலாளரும், காசாளரும் கூடத் தெருச் சிறுவர்களே! இதில் பணிபுரியும் சிறுவர்களுக்கு ஹெச்.டி.எப்.சி. வங்கி பயிற்சி அளிக்கின்றது. நாடெங்கிலும் கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் இதன் உறுப்பினர்களாக இருக்கின்றனர். தற்போது, சென்னை, கொல்கொத்தா நகரங்களிலும் இதன் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன. நல்ல முயற்சி.

அரவிந்த்

-

© TamilOnline.com