தண்ணீருக்கடியில் வளர்ந்த பணம்
இனிமேல் டாக்குமெண்டரி நிகழ்ச்சி வந்தால் அடுத்த சானலுக்குத் தாவாதீர் கள். பெரும் பணம் கிடைக்க வாய்ப்பு வந்தாலும் வரும். இந்த விஷயத்தைக் கேளுங்கள்.

வெய்ன் டன் என்பவர் ஹோட்டலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். நீர்மட்டத்தின்கீழ் இருக்கும் பைன் மரங்களை ரிமோட்டினால் இயந்திரத்தை இயக்கி வெட்டிக் கொண்டு வருவது பற்றி நிகழ்ச்சி.

பொரிதட்டியது டன்னுக்கு. கானா நாட்டில் வசித்ததால் வோல்டா நீர்த் தேக்கத்தையும் அதில் மூழ்கியிருக்கும் பெருங்காட்டையும் நன்கறிந்தவர் டன்.

மின்சார உற்பத்திக்காக 40 வருடத்துக்கு முன்பு அரசு உருவாக்கின தேக்கம். நீர் மட்டத்துக்குமேல் துருத்தியிருக்கும் மரங்கள் பல படகுப் பயணிகளைக் காவு வாங்கியுள்ளது. மரத்துக்கு மரமுமாயிற்று. மக்கள் பிரச்சினையைத் தீர்த்த புண்ணியமுமாயிற்று என்று காரியத்தில் இறங்கியவருக்கு மரங்களின் தரத்தைப் பற்றிச் சந்தேகம். '40 வருடம் தண்ணீருக் கடியில் இருந்த மரம் விறகுக்குக்கூடப் பயன்படாது' என்று சிலர் பயமுறுத்தினர். மர நிபுணரான அப்பா தைரியம் கொடுத்தார். காற்றுப் புகாத சூழ்நிலை யைத் தண்ணீர் உருவாக்கிக் கொடுத் ததால் மரம் சோடை போகாதென்று அடித்துச் சொன்னார். மளமளவென்று பணமுதலீடு, பங்குதாரர், தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சமாளித்தார் டன்.

வந்தது இன்னுமொரு தடங்கல். மரம்வாழ் பிராணிகள் விட்டுப்போன இடத்தில் நீர்வாழ் பிராணிகளின் ஜாகை. அதற்குப் பங்கம் வரக்கூடாதென்று சூழல் காப்போர் அரசு மூலமாகப் போட்டனர் முட்டுக்கட்டை.

விடுவாரா நம்முடைய டன்? அடிமரத்தை விட்டுவிட்டால் சூழலுக்கு பாதகமில்லை என்று நிரூபித்து அரசு ஒப்புதல் வாங்கினார். பெட்ரோலியம் துரப்பணக் கருவியையும், சோனார் இமேஜிங் தொழில்நுட்பத்தையும் வைத்து மரத்துக்கு சுமார் $2000 வீதம் பணம் பார்த்தார் என்பது செய்தி.

சம்பாதித்த பணத்தில், டாக்குமெண்டரி எடுத்தவரின் சிலையை செய்து வீட்டில் வைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை!

தகவல்: முரளி
நன்றி: ஸ்டான்·போர்டு பிசினஸ் மேகசின்

© TamilOnline.com