பார்வையற்றோருக்கு உதவும் வித்யா விருட்சம்
பார்வையற்றோரிடையே கல்வியறிவைப் பரப்பப் பல வகைகளிலும் உதவும் தன்னார்வச் சேவைநிறுவனம் 'வித்யா விருட்சம்'. இது லாபநோக்கற்ற நிறுவனமாக அமெரிக்காவிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அயோவா, டெக்ஸாஸ், கலி·போர்னியா உட்படப் பல இடங்களிலும் இதன் தொண்டர்கள் பரவியுள்ளனர்.

கல்வியும் தகவலும் பார்வையற்றோருக்கும் எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் 1998ல் சென்னையில் வித்யா விருட்சம் என். கிருஷ்ணஸ்வாமி (ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி), பேரா. ஆர். கல்யாண கிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. ஆயிரக் கணக்கான விழியற்றோர் தொழில்முறைக் கல்வியைக் கூடப் பெறுவதற்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பிரெயிலி எழுத்துக்களைக் கற்க உதவும் கட்டை, எழுத உதவும் கட்டை, எழுதுகோல், எழுது பலகை, பயனர் கையேடு, ஜியோமிதிக் கருவிகள் ஆகியவற்றை அடக்கிய ஒரு பெட்டகத்தை (Universal Braille Kit) கிருஷ்ணசாமி உருவாக்க, வினியோகிக்கப் படுகிறது.

இதையும் தாண்டித் தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மின்நூல் (Universal Electronic Book) மென்பொருள் ஒன்றைக் கல்யாண கிருஷ்ணனும் அவரது சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களும் வடிவமைத்துள்ளார். இதைக் கணினியில் பயன்படுத்தினால் ஒரு நூலை உரத்துப் படித்துக் காண்பிக்கும். சாதாரண ஆங்கில விசைப்பலகையைக் (keyboard) கொண்டே இதை இயக்கமுடியும். தேவை யானால் பிரெயிலி எழுத்துக்களில் அச்செடுக்கவும் முடியும். தவிர, பயனர் அமுக்கும் விசைக்கான ஒலியை அது கூறுவதால் எளிதாகப் புத்தகத்தின் முன் பின்னாகப் போய்வரவும் முடியும். 21 இந்திய மொழிகள் தவிர ஹீப்ரூ, ஜப்பானியம் போன்றவற்றை இந்த மென்பொருள் கையளும் என்பதால் இது பார்வையற்றோருக்குப் பேருதவி செய்கிறது.

தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் பல பள்ளிக் கணினிகளில் இந்த மென் பொருள் ஏற்றப்பட்டுள்ளது. வெகுதூரத்தி லிருக்கும் பார்வையற்றோர் பள்ளிக்குச் செல்லாமல் அருகிலிருக்கும் பள்ளியிலேயே அவர்களும் படிப்பதை இந்த மென்பொருள் சாத்தியமாக்கியிருக்கிறது. கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் உள்ள புக்ஷேர் (www.bookshare.org) மூலம் இந்த மின்நூல் மென்பொருள் சேவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இணையதளத்தி லிருந்து நூல்களைத் தரவிறக்கலாம், ஒளிவருடி, எண்ணியப்படுத்தித் (scan & digitize) தரக் கோரலாம். இதற்காக கதா (www.katha.org) அமைப்புடனும் வித்யா விருட்சம் கைகோத்துள்ளது.

இந்த மகத்தான பணியில் பங்கேற்க விரும்பினால் மின்னஞ்சல் அனுப்ப: Vidyavrikshah@gmail.com

நன்கொடை வழங்க: www.Vidyavrikshah-USA.org

© TamilOnline.com