அனிதாவின் சிரிப்பு
அனிதா மிகவும் பதட்டத்தில் இருந்தாள். புதிய வேலையில் முதல்நாள், புதிய அலுவலகம், புதிய மனிதர்கள் என எல்லாம் சேர்த்து அவளை பதட்டத்துக்கு ஆளாக்கியிருந்தது. என்னதான் இருந்தாலும் பழைய வேலையை விட்டு விலகி 5 வருடங்கள் ஆகிவிட்டதல்லவா? அதனால்தானோ என்னவோ வாழ்க்கையில் முதல்முறையாக, முன் அனுபவம் எதுவும் இல்லாமல் வேலைக்குச் செல்பவர்களின் மனநிலையில் இருந்தாள். வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவள் மனதில் இவையெல்லாம் ஓடிக் கொண்டிருந்த போது மார்க் வந்து அவளை அழைத்துச் சென்று அலுவலகத்தைச் சுற்றிக் காட்டி, மற்றவர்களை அறிமுகப்படுத்தினார். யாராவது இந்தியர்கள் இருப்பார்களா என்று எதிர்பார்த்தவளுக்கு சங்கீதாவுடன் கை குலுக்கும் போது அந்தப்பதட்டம் சற்றே குறைந்திருந்தது.

சங்கீதா நல்ல துறுதுறுப்பானவள். அனிதா வைவிட வயதில் குறைந்தவள். நல்ல புத்திசாலி. வேலையில் மிகுந்த அனுபவ முள்ளவளாகவும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் தைரியமுள்ளவளாகவும் இருந் தாள். அந்த அலுவலக வேலை முறைகள் பற்றியும், அந்தத் தொழில் பற்றியும் என எந்தக் கேள்வியாக இருந்தாலும் சங்கீதா விளக்கமாகக் கூறியது, அனிதாவுக்கும் சங்கீதாவுக்குமான நட்பை மலர வாய்ப்பளித் தது. உணவு இடைவேளைகளில் அலுவலகம் மட்டுமல்லாமல் சொந்த விஷயங்களையும் பேசிக்கொண்டனர்.

சங்கீதாவுக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருந்தது. அவளுடைய பெற்றோர் தற்போது அவளுடன் தங்கிப் பார்த்துக் கொள்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் அவர்கள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வீட்டோடு இருக்கும் ஓர் ஆயாவைத் தேடிக்கொண்டிருக்கிறாள். குழந்தை தாய்பாலை மட்டுமே ஜீரணிக்கக்கூடிய நிலையில் இருப்பதால் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதனால் நல்ல அனுபவமுள்ள நம்பிக்கை யான ஆயாவைத் தேடுகிறாள். பல இணையதளங்களில் விளம்பரம் செய்தும் பலரிடம் சொல்லி வைத்தும், இன்னும் யாரும் கிடைக்கவில்லை.

ஒருநாள் உணவு இடைவேளையில் அனிதா வும் சங்கீதாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?' என்று சங்கீதா அனிதாவைக் கேட்டாள்.

'இரண்டு. முதல் குழந்தைக்கு 11 வயது. அடுத்தது 6.'

'நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் அனிதா. உங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் பருவத்துக்கு வந்துவிட்டார்கள். என்னைப் போல ஆயா தேடி அல்லாட வேண்டிய தில்லை.'

அனிதா சிரித்தபடியே ஒப்புக்கொண்டாள். அந்தச் சிரிப்பின் பொருள் சங்கீதாவுக்கு அப்போது புரியவில்லை.

'சரி, உங்கள் குழந்தைகள் பிறந்தபோது நீங்கள் எப்படி கவனித்தீர்கள்?' என்று கேட்டாள் சங்கீதா.

'நான் வேலையை விட்டுவிட்டேன். ஐந்து வருடங்கள் கழித்து இதோ இந்த வேலையில் சேர்ந்திருக்கிறேன்.'

'என் கணவரும் என் அம்மாவும்கூட என்னை வேலையை விடத்தான் சொல் கிறார்கள். ஆனால் நான் 21 வயதிலிருந்து வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். வேலையை விட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும். எல்லாவற்றுக்கும் மேல் என் அனுபவம், உயர் பதவி எல்லாமே பாதிக்கப்படுமே' சங்கீதாவின் குரலில் ஆற்றாமை தொனித்தது.

ஒரு நிமிடம் தயங்கிய அனிதா கூறினாள், 'உண்மைதான். ஆனால் நம்மைப் போல அனுபவமுள்ள எவராலும இந்த அலுவலக வேலையை செய்துவிட முடியும். எவ்வளவு தான் அனுபவம் இருந்தாலும் இன்னொருவர் நம் குழந்தைக்குத் தாயாக முடியாதல்லவா? அதனால்தான் நான் வேலையை விட்டேன்.'

அனிதாவின் சிரிப்புக்கு இப்போது பொருள் புரிந்தது.

ஜெயா மாறன், அட்லாண்டா(ஜார்.)

© TamilOnline.com