அந்தச் சிறுவன் மிகவும் நல்லவன். அதே சமயம் அப்பாவியும் கூட. அவன்தான் அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. பதினான்காவது குழந்தை. அதனால் அவன் மீது வீட்டினர் அனைவரும் பாசமாக இருந்தனர். வறுமையான குடும்பம் அவனுடையது. ஆனாலும் நன்கு படித்தான். நிறையப் படித்துப் பெரிய ஆளாகி சாதிக்க வேண்டும் என்பது அவனுடைய இலட்சியம். ஆனால் அதற்கு அவன் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
அவனுடன் படித்த மாணவர்கள் அவனோடு பேசமாட்டார்கள். அவனைத் தொடமாட்டார்கள். அருகில் வர மாட்டார்கள். அவனுக்கு மட்டும் தனி இருக்கை. தண்ணீர் குடிக்கத் தனிக் குவளை. நாவிதர் முடிவெட்ட மாட்டார் என்பதால், தன் சகோதரியிடம் தான் முடி வெட்டிக் கொள்வான்.
மாட்டு வண்டியில் ஒருமுறை அவன் பயணம் செய்த போது அவன் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்பதை அறிந்து கொண்ட வண்டியோட்டி, உடனே மாட்டைக் கழற்றிவிட்டு வண்டியைக் குடை சாய்த்தான். வண்டியிலிருந்து கீழே விழுந்ததில் அந்தச் சிறுவனுக்கு உடம்பெல்லாம் ஒரே காயம். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ’தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, தான் செய்த குற்றம் தான் என்ன’ என்று அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருந்தான். இந்த அவமானத்தையெல்லாம் தாங்கிக்கொண்டு படிக்கத்தான் வேண்டுமா என்றுகூட அடிக்கடி நினைத்தான்.
ஆனால் வகுப்பில் ஓர் அன்பான ஆசிரியர் இருந்தார். அவர் இந்தச் சிறுவனின் மீது மிகுந்த அக்கறை செலுத்தினார். அவன் முறையாகக் கல்வி கற்க உதவி செய்தார். அவனைப் பல விதங்களிலும் ஊக்கப்படுத்தி, சாதனைச் சிறுவனாக அவன் விளங்க வேண்டும் என்று தைரியமூட்டினார். அவன் படித்து முன்னேற எல்லா உதவிகளையும் செய்தார்.
ஆசிரியரின் அன்பும் அரவணைப்பும் அந்தச் சிறுவனின் எண்ணத்தை மாற்றின. அவன் நன்கு படிக்க ஆரம்பித்தான். கடுமையாக உழைத்தான். வெளிநாடு களுக்கெல்லாம் சென்று படித்தான். நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத் தான். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகிப் பல்வேறு சீர்த்திருத்தப் பணிகளைச் செய்தான். 'பாரத ரத்னா' வாக உயர்ந்தான். அதே சமயம் ’தாழ்த்தப் பட்டவர்களும் மனிதர்களே. அவர்களை யும் சமமாக மதித்து நடத்த வேண்டும்’ என்ற உயரிய கொள்கையுடைய அந்த ஆசிரியரின் அன்பை அவனால் மறக்க இயலவில்லை. அவருடைய பெயரையே தனது பெயராக மாற்றிக் கொண்டான். அந்த ஆசிரியரின் பெயர் சொல்லியே அவன் பிற்காலத்திலும் அழைக்கப் படலானான்.
அரவிந்தன்
அந்தச் சிறுவன் யார்?
விடை
இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை என போற்றப்பட்ட பாரத ரத்னா பீ.ஆர். அம்பேத்கர் தான் அவர். அவரது இயற்பெயர் பீமாராவ் ராமோஜி. அவரது அன்பிற்குரிய ஆசிரியரின் பெயர் அம்பேத்கர். ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள். |