பழனிவேல்ராஜன் திடீர் மரணம்
மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், தமிழக அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பொறுப்பை ஏற்றவுடன் சொந்த ஊரான மதுரைக்கு இரயிலில் சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிக்சை பலனின்றிக் காலமானார். அவருக்கு வயது 75.

பொதுவாகவே வெளிப்படையாகத் தமது மதச்சின்னங்களைத் தவிர்க்கும் தி.மு.க. அமைச்சர்களிடையே, எப்போதும் நெற்றியில் குங்குமத்துடன் காட்சிதரும் பழனிவேல்ராஜன் மாறுபட்டவர். மதுரை மீனாட்சியிடம் தீவிர பக்தி கொண்டவர்.

தி.மு.க.வில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த பி.டி.ஆர். சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன், கற்பகம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகன். 1967, 1971-ம் ஆண்டுகளில் தேனித் தொகுதியிலிருந்தும் 1996-ல் மதுரை மேற்கிலிருந்தும் சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1996ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராகப் பணியாற்றினார்.

செய்தியைக் கேட்டதும் விமானத்தின் மூலம் மதுரை சென்ற முதல்வர் கருணாநிதி, பழனிவேல் ராஜன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அரசின் முழு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com