சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 13
ஒரு விறகுவெட்டி இருந்தான். அவன் மிகவும் நல்லவன். நல்ல மரங்களை வெட்டாமல், தேவையில்லாத மரங்களை மட்டுமே வெட்டுவான். நன்கு செழித்து வளர்ந்து, நிழல்தரும் மரங்களை வெட்ட மாட்டான்.

ஒருநாள் வழக்கம் போல் விறகுவெட்டி களைத்துப் போய் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான். அந்தக் காட்டில் வெகுநாட்களாக ஒரு பூதம் வசித்து வந்தது. நல்லவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்யும் அந்த பூதம், வியாபாரியின் வறுமையைப் போக்க எண்ணியது. எனவே தூங்கிக் கொண்டிருந்த விறகுவெட்டியின் அருகில் சில தங்க நாணயங்களைப் போட்டுவிட்டு மறைந்தது.

சற்றுநேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தான் வியாபாரி. அருகே கிடந்த தங்க நாணயங்களைக் கண்டதும் ஆச்சரியப்பட்டுப் போனான். யாராவது வந்து மறந்து போய் விட்டுச் சென்றிருப் பார்களோ என்று நினைத்து அங்கும் இங்கும் தேடிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. எனவே தங்க நாணயத்தைத் தன்னுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றவன், அதனை ஒரு ஜாடியில் போட்டு மூடி வைத்தான்.

மறுநாளும் காட்டுக்கு வந்தான். விறகு வெட்டினான். களைப்புடன் மரத்தடியில் சாய்ந்தான். அன்றும் தூங்கி எழுந்ததும் தங்க நாணயங்கள் அவன் அருகில் கிடந்தன. அவனுக்கு மிகுந்த ஆச்சரிய மாகிப் போயிற்று. அதே சமயம் பயமும் வந்தது. எனவே, அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக் கொள்ளாமல் தன் வழியே நடக்கத் தொடங்கினான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பூதத்துக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படியாவது அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்து அது அவன்முன் தோன்றியது.

பூதத்தைப் பார்த்துப் பயந்து போனான் விறகுவெட்டி. ஆனால் பூதமோ 'பயப்பட வேண்டாம்' என்று கூறி அவனை ஆறுதல் படுத்தியது. அவனது உண்மையான உழைப்புக்குப் பரிசளிக்கத்தான் தங்க நாணயங்களை அங்கு போட்டதாகவும், இனிமேல் காட்டுக்கு வந்து விறகு வெட்டிக் கஷ்டப்படாமல் சுகமாக வாழ வேண்டும் என்றும் கூறி, தங்க நாணயங்கள் அடங்கிய மூட்டை ஒன்றை அவனுக்குப் பரிசாக அளித்தது.

விறகுவெட்டி பூதத்துக்கு நன்றி கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றான். வீட்டாரிடம் நடந்ததைக் கூறினான். அவர்கள் வயல்களை வாங்கிக் கடுமையாக உழைத்துப் பயிரிட்டார்கள். வெகு சீக்கிரமே செல்வந்தர்களானார்கள்.

அவன் வீட்டுக்கு அருகில் ஒரு சோம்பேறி வாழ்ந்தான். அவனுக்கு விறகுவெட்டி திடீரெனப் பணக்காரன் ஆனது பொறுக்கவில்லை. ஒரு நாள் விறகுவெட்டியிடம் நைச்சியமாகப் பேசி நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டான். தானும் காட்டுக்குச் சென்று பூதத்தின் உதவியோடு பணக்காரனாகி விடுவது என்று தீர்மானித்தான்.

காட்டுக்குப் போய் கண்ணில் பட்ட மரங்கள் அனைத்தையும் வெட்டினான். வெட்டியதை அங்கேயே போட்டுவிட்டும் சென்றான். தினந்தோறும் இது தொடர்ந்தது. காடு அழிவதைப் பற்றி மிகவும் கவலை கொண்ட பூதம் அந்த மனிதன் முன்னால் தோன்றியது. அவனிடம் வீணே காட்டை அழிப்பதன் நோக்கத்தைப் பற்றிக் கேட்டது. தானும் விறகுவெட்டியைப் போல திடீர்ப் பணக்காரன் ஆவதோடு, அவனைவிட வசதியாக வாழவேண்டும் என்று கூறினான் அவன். பூதம் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான்.

அவனது பேராசையைக் கண்டு பூதத்திற்குக் கோபம் வந்தாலும், எப்படியாவது காடு அழியாமல் தப்பித்தால் சரி என்று நினைத்து, தான் காவல் காத்துக் கொண்டிருந்த ஒரு பெரிய குகைக்கு அவனை அழைத்துச் சென்றது. அங்கே எங்கு பார்த்தாலும் தங்கமாய் இருந்தது. அவனுக்கோ மகிழ்ச்சி தாளவில்லை. 'ம், சீக்கிரம் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொண்டு புறப்படு' என்றது பூதம். அவனும் அதன்படி நகைகளை எடுத்து மூட்டையாகக் கட்ட ஆரம்பித்தான். திடீரென, குகையில் உள்ள அனைத்து நகைகளையும் தானே எடுத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அதற்கு இந்தப் பூதம் அனுமதிக்காதே என நினைத்தவன், ஒரு தந்திரம் செய்தான். பூதத்தைப் பார்க்கத் தனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்றும் தன் கையில் உள்ள ஜாடிக்குள் சென்று அது சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டால், தான் நகைகளை மூட்டை கட்டி விடுவதாகவும் பணிவாகத் தெரிவித்தான். பூதம் சம்மதித்தது. தன் உருவத்தைச் சிறிதாக்கிக் கொண்டு ஜாடிக்குள் சென்றது.

அவ்வளவுதான். உடனடியாக அந்த ஜாடியின் மூடியை அடைத்த அந்த மனிதன், அதனை ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்துப் பூட்டினான். அதை அப்படியே தூக்கி குகைக்குள் இருந்த ஒரு பெரிய பாழுங் கிணற்றுக்குள் போட்டான். பின் ஏரளமான தங்கத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டு குகையை விட்டு வெளியே வரப் பார்த்தான். குகை ஒரே இருளாக இருந்தது. வெளியே செல்ல வழியே தெரியவில்லை. பூதத்தைக் கூப்பிட்டுப் பார்த்தான். பயனில்லை. அடைபட்டுக் கிடக்கும் பூதம் எப்படி வெளியே வரும்? வரவில்லை. குகையை விட்டு வெளியே வர வழி தெரியாமல் அங்கேயே வாழ்நாளைக் கழித்தான் அவன்.

நீங்கள் யாரைப் போல வாழ விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் தீர்மானத்துக்கே விட்டுவிடுகிறேன். அடுத்தமாதம் பார்க்கலாமா?

சுப்புத் தாத்தா

© TamilOnline.com