மகரிஷி மஹேஷ் யோகி
இந்திய ஆன்மீகத்தையும், தியான, யோக முறைகளையும் மேலை நாடுகளில் பரப்பிய மகரிஷி மஹேஷ் யோகி, தமது 91ஆம் வயதில் காலமானார்.

மஹேஷ் பிரசாத் வர்மா என்ற இயற் பெயரைக் கொண்ட மஹேஷ் யோகி, அலஹாபாத்தில் கணிதம், இயற்பியல் பயின்றார். ஜோதிர்மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியின் அன்பைப் பெற்றார். 'ட்ரான்ஸென்டென்டல் மெடி டேஷன்' என்ற தியான யோகப் பயிற்சி முறையால் மேலைநாடுகளில் இவரது புகழ் பரவி சீடர்கள் குவியத் தொடங்கினர். பிரபல பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவினர், எழுத்தாளர் தீபக் சோப்ரா, வித்வான் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் உட்படப் பல பிரபலங்கள் அவருக்குச் சீடர்களாயினர். நெதர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய அவரது இயக்கம், மேற்கத்திய நாடுகளில் செல்வாக்கோடு விரிவடைந்தது.

அவரது அஸ்தி நெதர்லாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, அலகா பாத்தின் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப் பட்டது. இந்த ஞான, யோகத் தத்துவ ஆசானின் மறைவு, வெளிநாட்டினருக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் பேரிழப்புதான்.

அரவிந்த்

-

© TamilOnline.com