இந்தியாவில் தமிழ் கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான யேல் பல்கலையில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பயில்வித்து வருகிறார் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் அண்ணாமலை. இது 'ஐவி லீக்' பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேரா. அண்ணாமலை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணிதத்துறையில் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார். அப்போது அவரது பேராசிரியராகத் திகழ்ந்தவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார். அந்த சமயத்தில்தான் 'மொழியியல்' என்ற புதிய துறை இந்தியாவில் அறிமுகமாகியி ருந்தது. இரண்டு ஆண்டுகள் இலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த பின், மொழியியல் பேராசிரியரானார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் கற்றுத் தர வந்த வாய்ப்பை ஏற்று, அங்குச் சில ஆண்டுகள் பணி புரிந்தது மட்டுமல்லாது அங்கே தனது முனைவர் ஆய்வையும் முடித்தார். மீண்டும் தாய்நாடு திரும்பி மைசூரிலுள்ள இந்திய மொழிகளுக்கான மத்தியக் கல்வியகத்தில் (Central Institute of Indian Languages) பேராசிரியராக இருபத்தைந்து ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அண்ணாமலை தம்பதியினர் 'கணபதி நாடார் சேவை இல்லம்' என்ற அனாதை இல்லத்தையும் தம் செலவில் நடத்தி வருகின்றனர். டாக்டர் அண்ணாமலை மட்டுமல்ல. அவரது மனைவி டாக்டர் நாகேஸ்வரி அண்ணாமலையும் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்: 'அமெரிக்கா வில் முதல் வேலை--என் அனுபவம்', 'என் சொந்த ஊரை நோக்கி', 'அமெரிக்காவின் மறுபக்கம்--வளம் வந்தது எப்படி?'.
மற்றொரு வியக்கத்தக்க விஷயம் இவர் குடும்பத்தில் அனைவரும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். மன¨வி நாகேஸ்வரி மானிடவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். மூத்த மகள் கணினி அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இரண்டாவது மகன் மருத்துவத் துறையில் ரெஸிடென்சி செய்து வருகிறார். பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடத்தின் நான்காவது மாநாட்டின் ஓர் அமர்வுக்குத் தலைமையேற்க இருக்கும் பேரா. அண்ணாமலை அவர்களுடன் உரையாடிய போது...
கே: இந்திய மொழிகளுக்கான கல்வி யகம் பற்றிக் கொஞ்சம் சொலுங்கள்?
ப: இந்நிறுவனம் இந்தியாவிலுள்ள பலமொழிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனமாகும். குறிப்பாக மொழிகளைப் பேணிப் பாதுகாத்தலும், அம்மொழியின் வளர்ச்சியில் ஈடுபடுவதும் இதன் நோக்கம். அதிலும் ஆதிவாசிகள் பேசும் மொழிகளை ஆராய்ந்து காலத்திற்கேற்ப அவர்களுக்குக் கல்வியறிவைப் புகட்டுவதில் உதவுவது இவ்வமைப்பின் ஒரு முக்கிய அம்சம்.
கே: ஆதிவாசிகளுக்குக் கல்வி தரு வதைப் பற்றி சற்றே விரிவாகக் கூறுங்கள்...?
ப: இந்திய ஆதிவாசிகள் பல மொழிகளைப் பேசுகின்றனர். தமிழ்நாட்டில் தோடர், குறும்பர் என்று பல இனத்தவர் உள்ளனர். மத்திய மொழி நிறுவனத்தின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால் இந்த ஆதிவாசிக் குழந்தை களை எப்படியாவது பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பது. அவர்களது மொழியிலேயே துவங்கி, மெல்ல மெல்ல அவர்களுக்குத் தமிழும் ஆங்கிலமும் பயில்விப்பது.
கே: அப்படியென்றால் உங்களுக்குப் பல ஆதிவாசி மொழிகள் தெரியுமா?
ப: ஆதிவாசி மொழிகள் ஓரளவுக்கு எனக்குத் தெரியும். ஆயினும் இம்மொழிகள் அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்பது முக்கியமில்லை. மேலும் அவர்கள் மொழிகள் வெறும் பேச்சுமொழியாகத்தான் இருக்கும். அவற்றுக்கென்று எழுத்துகள் கிடையாது. தமிழ் எழுத்து முறையில்தான் எழுத வேண்டும். நாங்கள் அவர்களது வாழ்க்கைச் சூழலை ஒட்டியிருக்கும் பாடத்தை வகுத்துக் கொடுப்போம். அந்த மொழிகளில் அகராதி அமைப்பது கூட எங்கள் பொறுப்புதான்.
கே: யேல் பல்கலைகழகத்துக்கு எப்படி வந்தீர்கள்?
ப: மைசூரில் இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் ஓய்வு பெற்றேன். பிறகு டோக்கியோவில் ஓராண்டு, ஆஸ்திரேலியா வில் ஆறு மாதம், ஜெர்மனி, நெதர்லேண்டு என்று பல இடங்களில் தமிழ் பயிற்றுவிக்கும் பணியாற்றினேன். நான்கு வருடங்களுக்கு முன்பு யேல் பல்கலையின் மானிடவியல் துறையில் தமிழ் பயில்விக்கும் வாய்ப்பு வரவே அதனை ஏற்று இங்கு வந்தேன்.
##Caption##கே: யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயில்விக்கும் முறையைப் பற்றிக் கொஞ்சம் கூறுங்கள்?
ப: யேல் பல்கலைக்கழகம்தான் முதன் முதலில் தனது தெற்காசிய கல்வித் துறையில் சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கத் துவங்கியது. இது குறிப்பிடத்தக்க விஷயம். தற்போது தெற்காசிய வரலாறு, கலாசாரம் அரசியல் போன்ற பல பரிமாணங்களை நன்கு உணர வேண்டுமென்றால் அங்கு நிலவி வரும் பல மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளையும் பயிற்றத் தொடங்கி யிருக்கிறது. இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற விரும்பும் மாணவர்கள் தமிழ்மொழியைத் இரண்டாவது மேஜராக எடுத்துக் கொள்ளலாம். மேலும் யேலில் இரண்டுவிதமாக நாங்கள் தமிழ்மொழியை அணுகுகிறோம்.
ஒன்று, தமிழின் பாரம்பரியம் மற்றும் அதன் தனிச் சிறப்பை முன் நிறுத்திப் பேசுவது. இரண்டாவதாக, இந்தியக் கலாசாரத்தில் தமிழின் பங்கு என்ன, நிலைமை என்ன என்பவற்றை எடுத்துக்காட்டுவது. குறிப்பாக இரண்டாவது பரிமாணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
கே: யேலில் தமிழ் படிக்கும் மாணவர் களின் ஆர்வம் எப்படி இருக்கிறது?
ப: அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ்க் குடும்பங்களில் பிறந்தவர்கள் தாய்மொழி ஆர்வம் காரணமாக எங்கள் வகுப்பில் சேருகிறார்கள். இது சமீபகாலமாக நடந்து வரும் வரவேற்கத்தக்க மாற்றம். நான் முப்பது வருடங்களுக்கு முன் சிகாகோவில் தமிழ் கற்றுக் கொடுத்தபோது இப்படி மாணவர்கள் சேருவது அரிது. இப்போது சேரும் மாணவர்கள் வீட்டில் தமிழ் பேசிக் கேட்டவர்கள். ஆனால் முறையே தமிழ் பயிலாதவர்கள். இவர்களைத் தவிர இலங்கையிலிருந்து வரும் சிங்களவர்களும் தமிழ் வகுப்பில் சேருகிறார்கள்.
கே: நீங்கள் மாணவர்களைப் பற்றிக் கூறும்போது தமிழை முறையாகக் கற்றியாத மாணவர்கள் என்று கூறினீர் கள். பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட வாலிப வயதிலுள்ள இம்மாணவர் களுக்கு ஏற்ப ஒரு பாடத்திட்டத்தை எப்படி வகுக்குகிறீர்கள்?
ப: யேல் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரை பாடத்திட்டத்தை வகுக்கும் முழு சுதந்திரமும் ஆசிரியர்களுக்கு உண்டு. முதலில் பேச்சுத் தமிழில் துவங்குவோம். இதில் நடைமுறையில் வரும் பிரச்சினை பேச்சுத் தமிழின் எழுத்துக் கூட்டுக்கும் எழுத்துத் தமிழின் எழுத்துக் கூட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பேசும் பொழுது 'படிச்சான்' என்பதை எழுதும் போது 'படித்தான்' என்று எழுத வேண்டும். இந்த வித்தியாசங்களை உணர்த்த எழுத்துத் தமிழைப் புகுத்துவோம். பொருள் விளக்கத் திற்கு முதலில் ஆங்கிலம் நிறைய பயன் படுத்துவோம். போகப்போக ஆங்கிலத்தின் உபயோகம் குறைந்து தமிழிலேயே அதிகம் பேசத் தொடங்குவோம். இரண்டு ஆண்டுகள் அதாவது நான்கு செமஸ்டர்கள் முடிந்த பின் மாணவர்களுக்கு தமிழ் இலக்கியப் பாடம் துவங்கும். இதில் எங்கள் அடிப்படை நோக்கம், மாணவர்களுக்கு தமிழில் ஆர்வத்தை உண்டாக்குவது. ஆர்வம் வளர வளர மொழியும் தானே வளரும்.
கே: தமிழ் கற்பிக்க எந்த நூல்களை உபயோகிப்பீர்கள்?
ப: சிலப்பதிகாரம், திருக்குறள் என்று தொடங்கி சமீபகாலப் பத்திரிகைகள் வரை உபயோகிப்போம். அவரவர் மேற்படிப்புக்கு உதவும் வகையில் பத்திரிகைகளையும் இதர பிரசுரங்களையும் உபயோகிப்போம். சமீபத்தில் ஒரு மாணவர் சட்டத்தை முதன்மைப் பாடமாக எடுத்திருக்கிறார். அவருக்காகவே பிரத்யேகமாக சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து வரும் தீர்ப்புகள் என்ற வழக்குகளின் தீர்ப்புகளின் தொகுப்புரையை வரவழைத்து அதன் மூலம் தமிழ் பயில்விக்கிறோம்.
இந்த முயற்சியில் தென்றல் இதழ் எங்களுக்கு மிகவும் பயன்படுகிறது. தென்றலில் வரும் செய்திகள், தொகுப்புகள் ஆகியவற்றை மாணவர்களுக்குப் படித்துக் காட்டியும் அவர்களையே படிக்க வைத்தும் தமிழ் பயில்விக்கிறோம். இதைத் தவிர திரைப் படங்கள், ஒலி நாடாக்களையும் யுக்திகளாகக் கையாளுகிறோம்.
கே: கணினியின் உபயோகம் எந்த அளவில் உள்ளது?
ப: நாங்கள் சில பாடங்களைக் கணினி மூலம்தான் பயில்விக்கிறோம். குறிப்பாகத் தமிழ் அகராதியை மாணவர்கள் எலக்ட் ரானிக் வடிவில் படிப்பதையே விரும்பு கின்றனர். தமிழில் பல எழுத்துருக்கள் இருப்பினும் அவற்றை ஒருங்கிணைக்க முயற்சி இல்லாததால் எதை உபயோகிப்பது என்பதே ஒரு பெரிய கேள்விக்குறியாகி விட்டது. கணினி வழியே எழுத்துப் பிழைகளைத் திருத்துவதும் (spell check) கடினம். மேலும் பல சொற்களுக்கு கடந்த கால உருபுகளைக் கண்டுபிடிப்பதும் கடினம். உதாரணத்திற்கு 'நடை' என்னும் வினைக்குக் கடந்த கால உருபு 'நடந்தான்' அல்லது 'நடந்தாள்'. இது போன்ற விஷயங்களில் நிறைய முன்னேற் றங்கள் தேவை.
##Caption##கே: யேல் பல்கலைக்கழகம் தவிர நீங்கள் வேறு இடங்களுக்கும் சென்று தமிழ் பரப்புகிறீர்களா?
ப: அமெரிக்காவில் நடக்கும் தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்வேன். ஏப்ரல் மாதம் 'ஆறு' என்ற தலைப்பில் பெர்க்கலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நான்காவது தமிழ் மாநாடு நடக்கவிருக்கிறது. ஏப்ரல் 26, 27 தேதிகளில் நடக்கவிருக்கும் இம்மாநாட்டில் 'நவீனத் தமிழின் அகராதியை வளப்படுத்தப் பல வழிகள்' (Many paths to lexical enrichment in modern Tamil) என்ற தலைப்பில் எனது தலைமையில் ஓர் அமர்வு நடக்கவிருக்கிறது. இது போன்ற மாநாடுகள் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துகின்றன. மாணவர்கள் இத்துறையில் இன்னும் என்னென்ன சாதிக்கலாம் என்பதையும் உணர்த்துகின்றன.
கே: நீங்கள் எழுதிய நூல்கள் என்னென்ன?
ப: நான் தமிழில் ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளேன்: 'Lectures on Modern Tamil', 'Management of Multilingualism in India', 'Colloquial Tamil' ஆகியவை. இந்நூல்களைப் பெற விரும்புவோர் dhwanibooks@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி விவரங்களைப் பெறலாம்.
*****
பேராசிரியரின் தமிழ்க் காதல் வியப்பைத் தரும்
சுவர்ணமீனாட்சி மாணிக்கம் (யேல் பல்கலைத் தமிழ் மாணவர்)
யேல் பல்கலையில் பேரா அண்ணா மலை அவர்கள் தமிழ் கற்பிப்பதில் காட்டும் ஆர்வம் அலாதியானது. தொடக்கநிலை மாணவர்களுக்கு அவரவர் பின்னணிக்கும் ஈடுபாட்டுக்கும் ஏற்பத் தமிழைப் பிரித்துக் கற்பிக்கிறார்.
ஆரம்பநிலை மாணவர் ஒருவர் சொல்கிறார்: 'அவருடைய வகுப்பு முடிந்தபின் அவரைத் தொடர்ந்து அவரது அறைக்குச் சென்று நான் என்னைக் குழப்பிய, சவால் விட்ட, தவிக்க விட்ட விஷயத்தைப் பற்றி இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருக்கலாம்'.
பேராசிரியரின் தமிழ்க் காதலும் அர்ப் பணிப்பும் அத்தகையன. மாணவர் களிடையே இது அவருக்குப் பெரு மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி சுந்தர் |